ஸ்ரீல பிரபுபாதா

ஸ்ரீல பிரபுபாதா

ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் 1896ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ம் திகதி கல்கத்தாவில் பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் கௌர்மோகன்தே, தாயார் பெயர் ரஜனி அம்மாள். அவருக்கு தாய் தந்தையர் இட்டபெயர் அபயசரண்தே. வைஷ்ண குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவருடைய தந்தையார் வாணிபம் செய்து வந்தார். அபய சரண் பிறந்தவுடன் அவருடைய தந்தையார் கௌர்மோகன்தே ஒரு நல்ல ஜோதிடரை அழைத்து அவருடைய எதிர்காலத்தை கூறும்படி கேட்டார். அதற்கு அந்த ஜோதிடரும் இந்தக் குழந்தை எழுபது வயது அடையும் போது கடல் கடந்து சென்று ஒரு பெரிய மத போதகராகி, 108 கோயில்களை நிறுவுவார் என்று கூறினார். அவருடைய அந்த வாக்கு பொய்யாகவில்லை.

 
ஸ்ரீல பிரபுபாதா என்று பிற்பாடு எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட தெய்வத்திரு பக்தி வேதாந்த ஸ்வாமி அவர்களின் புகழ் அவர் 1965ம் வருடம் அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தபின் தான் உலகமெங்கும் பரவியது.
 
குழப்பங்கள் நிறைந்த தற்போதய நாகரீகத்தைப் புரிந்துகொண்டு புலனின்பமே பிரதானம் என்று ஜடப்பொருள்களின் மீது தீராத மோகம் கொண்டு அலைபவர்கள் மத்தியில் ஆன்மீக விடயங்களுக்கு புத்துயிர் அளித்த ஒரு ஆன்மீக போதகர் தான் ஸ்ரீல பிரபுபாதா அவர்கள். 
 
எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லோரையும் வாழ்க்கையின் உண்மையான குறிக்கோளைப் பற்றித் தூண்டி, தத்துவ ரீதியாக மட்டுமல்லாமல் நடைமுறையாகவும் ஒரு நல்வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த ஒரு மகான் என்றால் அது மிகையாகாது.
 
இக்கலியுகத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறான போதகர்களும், மகான்களும் தோன்றி தங்களுடைய கோட்பாடுகளை மக்கள் மத்தியிலே புகட்டி, அவர்களுக்கு  நல்வழி காட்டி மறைந்தார்கள்,. ஆதிசங்கரர், மத்வர், இராமானுஜர் போன்றவர்கள் வெவ்வேறு காலத்திலே தோன்றி தங்களுடைய ஆழமான மதக் கோட்பாடுகளை புகுத்தினார்கள். அந்த வகையிலே இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன் கல்கத்தாவிலே மாயாப்பூரிலே தோன்றியவர்தான் “ஸ்ரீ சைத்தன்ய மஹாபிரபு". இவர் இந்த கலியுகத்திலே யாகங்கள், தவங்கள் மற்றும் கோயில்கள் அமைத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் கஷ்டமான காரியம். ஆகவே பகவானை அடைவதற்கு  மிக மிக இலகுவான வழி சங்கீர்த்தனம் செய்தல் என்று கூறினார்.
 
இப்பூமியிலே தோன்றிய மானிடர்களில் உண்மையான இறுதி இலக்கு “மீண்டும் கடவுளிடம் ல்லுதல்”. ஆகவே நாம் பகவானை சென்றடைய முதலில் பகவானின் பிரேமையை பெறவேன்டும். இந்த பிரேமையை பெற மிக இலகுவான வழி ஹரி நாமத்தை ஜெபம் செய்தல். பகவான் ஹரியினுடைய நாமத்தை யாரெல்லாம் உச்சரிக்கின்றார்களோ அவர்கள் மிக இலகுவாக பகவானுடைய அன்பை பெறலாம். என்றும் பகவானுடைய நாமமான, 
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
என்ற 16 நாமங்களை கொண்ட மந்திரத்தை தினமும் உச்சரிப்பவர்கள் பிறவி எனும் கடலை விரைவில் நீந்துவர் என்றும் போதித்தார். 
 
அந்த போதனைகளை குரு சீட பரம்பரையில் வந்தவர்கள் பின்பற்றி வருவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் போதிக்கின்றார்கள். அந்த வகையிலே குரு சீட பரம்பரை வழியாக வந்த ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் தன் குருவினுடைய கட்டளைக்கிணங்க பௌதீக வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்து கொண்டிருக்கின்ற ஆத்மாக்களை விடுவிப்பதற்காக இந்த ஹரிநாம சங்கீர்த்தனத்தை மக்கள் மத்தியிலே போதித்து அவர்களுக்கு உன்னதமான கிருஷ்ணபிரேமையை கொடுப்பதற்காக முதன்முதலில் அமெரிக்காவிற்கு சென்றார். நாகரிக வாழ்க்கையின் உச்சக்கட்டமாக திகழ்ந்த நாடு அமெரிக்கா. அங்குள்ள மக்கள் எந்த ஒரு கொள்கையோ, மத நம்பிக்கையோ அற்றவர்களாக பெரும்பாலும் ஹிப்பிகளாக இருந்தனர். அந்த மீலாச்சகர்களை எல்லாம் பிரபுபாதா தன் கருணையினாலும் தன் தூய அன்பினாலும் நல்வழிபடுத்தினார். தற்போது லட்சக்கணக்கான மக்கள் கிருஷ்ண உணர்வு உள்ளவர்களாக மாறி பகவத்கீதையிலே பகவான் என்ன உரைத்தாரோ அந்த விஷயங்களை எல்லாம் பின்பற்றி உன்னதமான வாழ்க்கை வாழ்கின்றனர். கிருஷ்ண உணர்வு மிக மிக உன்னதமான ஒன்று. இந்த உணர்வை அடைபவர்கள் பகவானுடைய கருணையை இலகுவாக பெற முடியும். அந்த விஷயங்களை எல்லாம் உலகம் முழுக்க சென்று மக்களுக்கு போதித்தார். இறப்பதற்கு முன் 108 கோயில்கள், ஆசிரமங்கள், குருகுலங்கள், பண்ணை சமுதாயங்கள் என பல்வேறு வகையான மக்கள் நல திட்டங்களை உருவாக்கினார். அவர் ஒரு மகான். அவரைப் போன்றவர்கள் இக்கலியுகத்திலே மீண்டும் பிறப்பார்களா என்பது கேள்விக்குறியே. 
 
எந்தவிதமான புகழ்ச்சிக்கோ ஆடம்பரமான வாழ்க்கைக்கோ முக்கியத்துவம் கொடுக்காமல் எல்லோருக்கும் “எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை” என்ற கருத்தை போதித்தார். பிரபுபாதா முதன் முதல் 1965ம் ஆண்டு அமெரிக்காவில் காலடி வைத்தார். அவர் சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஆரம்பித்து அடுத்த ஆண்டு 50 வருடங்களாக போகிறது. இந்த 50 வருடங்களில் அவருடைய சீடர்கள் என்னற்ற பலசேவைகளை செய்து வருகின்றார்கள். தினமும் எத்தனையோ பேர் பிரபுபாதாவின் சீடர்களின் சீடர்களாக உருவாகி வருகின்றனர்.
 
1966ம் ஆண்டு முதன்முதலில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் சர்வதேச கிருஷ்ண பக்திக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இக்கழகத்தின் பிரதான நோக்கங்களாவன.
 
ஆன்மீக அறிவை ஒழுங்கு முறைப்படி பரப்பி ஆன்மீக வாழ்வின் நுட்பங்களை எல்லா மக்களுக்கும் கற்பித்தல். இதன் மூலம் ஒற்றுமையையும் அமைதியையும் ஏற்படுத்தல்.
 
பகவத்கீதை, பாகவதம் போன்ற வேத நூல்களில் கூறப்பட்ட விஷயங்களை மாற்றாமல் உள்ள படியே போதித்து கிருஷ்ண உணர்வை பரப்புதல்.. 
 
கழகத்தின் அங்கத்தவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு கிருஷ்ணர் தான் முழுமுதற் பொருள் என உணர வைத்து நாம் எல்லாம் ஆத்மாக்கள் என்று அறிய செய்து மனித அபிமானத்தை வளர்த்தல்.
 
ஸ்ரீ சைத்தன்ய மஹா பிரபுவின் போதனைகளில் கூறப்பட்டப்படி பகவானின் புனித நாமங்களை கூட்டாக சேர்ந்து ஓதுதல் மற்றும் சங்கீர்த்தன இயக்கத்தை ஊக்குவித்தல். பகவான் கிருஷ்ணருக்கு தொடர்புடைய அவதாரங்களைக் கொண்ட புனித ஸ்தலங்களை எல்லா இடங்களிலும் நிறுவுதல்.
 
இயற்கையுடன் கூடிய வாழ்க்கை முறையை வழி நடத்துதல், மற்றும் அங்கத்தவர்களிடையேயும் சீடர்களிடையேயும் நெருக்கமான உறவை மேம்படுத்துதல். மேற்கூறப்பட்ட காரணங்களுக்காக நூல்களையும், சஞ்சிகைகளையும் வெளியிட்டு விநியோகித்தல்.
 
மேற்கூறப்பட்ட காரணங்களை நிறைவேற்று வதற்காக பிரபுபாதாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் ஆலமரம் போல் பரந்து விரிந்து பல கிளைகளாக பரவி விரிவடைந்து வருகின்றது.
 
முதன்முதலில் பிரபுபாதா அவர்கள் கிருஷ்ண பக்தியை பரப்புவதற்காக அமெரிக்காவிற்கு ஜலதூதா கப்பலில் சென்றபோது அவருடைய சரக்கு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தவேண்டி யிருந்தது. அந்த சந்தர்ப்பத்தை பிரபுபாதா அவர்கள் பயன்படுத்தி கப்பல் கெப்டனின் உதவியோடு கொழும்பை சுற்றி வலம் வந்தார்கள். அவருடைய காலடிப்பட்ட அந்த தினம் 1965ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் திகதி ஆகும். இந்த வருடம் ஆகஸ்ட் 19ம் திகதியோடு 50 வருடங்கள் பூர்த்தியாகின்றது.
 
இந்த 50 ஆண்டு பூர்த்தி நிகழ்விலே பிரபுபாதா அவர்களின் உயர்ந்த போதனைகளை நாம் அனைவரும் கருத்திற்கொண்டு நாமும் பின் பற்றி உன்னதமான ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து பகவானின் அன்பைப் பெற்று அவர் பாதம் சரணடைவோமாக. 
 
ஹரே கிருஷ்ணா