சக்தி வழிபாடு!

சக்தி வழிபாடு!

சிவன் இல்லையேல் சக்தி இல்லை என்பதை நாம் அறிவோம். அதே நேரத்தில் சக்தி இல்லாவிட்டால் சிவன் தொழில்படாது என்பது உண்மை. இறைவன் இச்சா சக்தியினால் உயிர்களுக்கு அருள்புரிய விரும்புகிறான், ஞான சக்தியினால் அவைகளின் தகுதியை தராதரத்தை தேவைகளை அறிகிறான். கிரியா சக்தியின் துணை கொண்டு உயிர்கள் கடைத்தேறும்படியாக அவைகளை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்கிறான். சக்தியில்லாவிட்டால் சிவம் இந்தத் தொழில்களைச் செய்ய முடியாது. ஆகவே சிவமோ சக்தியோ ஒன்றை விட்டு ஒன்று இயங்காது. இவை இரண்டும் சேர்ந்தே இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
 
இந்த வகையில் சிவனை வழிபாடு செய்பவர்கள் அந்தப் பெருமானுடன் சரிபாதியாகக் கலந்திருக்கும் சக்தியையும் சேர்த்தே வழிபடுகின்றனர். இவ்வாறே சக்தியை வழிபடுவோர் அந்த சக்திக்கு இருப்பிடமான சிவத்தையும் வழிபடுவதாகவே அர்த்தம்.
 
வேதகாலத்திற்கு அடுத்தபடியாக புராணகாலத்தில் மார்க்கண்டேய புராணத்தில் வருகின்ற தேவி மகாத்மியம் சக்தியின் பெருமைகளை விரிவாக எடுத்துச் சொல்கிறது. இதில் எருமை வடிவில் வந்த அசுரனை அழித்த மகிஷாசுர மர்த்தினி போற்றப்படுகிறாள். புராணங்கள் பலவற்றில் தேவி இந்த உலகத்தைப் படைத்த ஜகன்மாதா என்றும் ஜகதாம்பிகை என்றும் புகழப்படுகிறாள்.
 
மகாபாரதத்தில் துர்க்கையை வழிபட்ட தகவல் கிடைக்கிறது. பாண்டவர்கள் பன்னிரண்டாண்டு வனவாசமும், ஒரு ஆண்டு அஞ்ஞாதவாசமும் மேற்கொண்ட பிறகு விராட நாட்டினுள்ளே புகும் நேரத்தில் தரும புத்திரர் துர்க்கையை வேண்டுகிறார் என்ற குறிப்பு உள்ளது. மற்றொரு இடத்தில் குருக்ஷேத்திரப் போரில் தங்களுக்கு வெற்றியைத் தர வேண்டும் என்று அர்ச்சுனன் துர்க்கையை வேண்டுகிறான்.
 
சங்க காலத்திலும் போரில் வெற்றியைத் தரும் தெய்வமாகக் காளி போற்றப்பட்டாள் அவளை கொற்றவை என்ற பெயரால் அழைத்தனர். கொற்றவைக்கு பழையோள் என்ற பெயர் தரப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது கொற்றவை வழிபாடே தமிழரகளுடைய மிகப் பழமையான வழிபாடு என்று அறிய முடிகிறது.
 
இது தவிர சங்க இலக்கியமாகிய பரிபாடலில் காடுகிழாள் எனப்படும் ச்தியைப் போற்றும் ஒரு முழுப்பாடல் இரந்தது தெரியவருகிறது.
 
மலைமகள், கொற்றவை பழையோள் என்ற பெயர்களில் அ்பிகை குறிக்கப்படுகிறாள்.
 
போரில் தன்னுடைய அரசனுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று வீரர்கள் கொற்றவையை வேண்டிக் கொண்டனர். வெற்றி கிடைத்தால் தங்கள் தலையை அரிந்து காளிக்குப் பலி கொடுப்பதாகவும் வேண்டிக் கொண்டனர். வெற்றி பெற்ற எக்களிப்போடு தாங்கள் நேர்ந்து கொண்டதற்கு ஏற்ப வீரர்கள் தங்கள் தலைகளை தாங்களே அறுத்து காளிதேவியின் காலடியில் வைத்தனர். அறுபட்ட சிரத்தில் இருந்து ரத்தம் வழிந்தது. தலை அறுபட்ட முண்டம் ஆடியது. கைகள் இரண்டும் தேவியைக் கும்பிட்டபடி இருந்தன. வெட்டிய தலையில் உள்ள வாய் கொற்றவையின் ஆற்றலைப் போற்றித் துதித்தது என்பதை 
 
அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ
அரிந்த சிரம் அணங்கின் கைக் கொடுப்பாராலோ
கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ
குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ
 
என்னும் கலிங்கத்துப்பரணி பாடல் வரிகள் தெரிவிக்கின்றன.
 
பன்னிரு திருமுறைகளிலும், பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் மதிக்கப் பெறும் திருமூலரின் திருமந்திரத்திலும் சில பாடல்கள் சக்திவழிபாட்டை போற்றும் விரமாக அமைந்திருக்கின்றன. திருமூலர் காலத்தில் தாந்திரிக வழிபாடு எனப்படும் சக்திவழிபாடு தோன்றியதே இதற்கு முதல்காரணம்.
 
திருமூலர் குறிப்பிட்ட சில சக்கரங்களைப் பற்றிச் சொல்கிறார். அவைகளை எப்படி வரைய வேண்டும், அவற்றில் சக்திக்கு உரிய மந்திரங்களை எவ்விதம் பொறிக்க வேண்டும். மந்திர எழுத்துக்களையும், வடிவங்களையும்தகடுகளில் தந்திரசாஸ்திர முறைப்படி எழுதி அவற்றை விதிப்படி தியானிக்கும் முறைகளையும், அப்படிச் செய்தால் அடையக் கூடிய சித்துக்கள், பலன்கள் ஆகியவற்றைப் பற்றியும் அவர் விரிவாக எழுதி இருக்கிறார்.
 
தென் இந்திய வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது சங்க காலத்தில் இருந்தே சக்தி வழிபாடு மேன்மையான நிலையில் இருந்துள்ளது. சங்க காலத்தில் நிலங்கள் ஐவகையாகப் பிரிக்கப்பட்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பெயரிடப்பட்டிருந்தன. பாலைநிலத்தில் வாழ்ந்த கொற்றைவையை வழிபாடு செய்தனர். அவளுக்கு பாலைச் செல்வி என்றும், ஓங்குபுகழ் காமர்ச்செல்வி எனவம் பெயர். திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் வெற்றி வேல் போர்க்கொற்றவை என்று காளியைக் குறிப்பிடுகிறார்.
 
சிலப்பதிகாரத்தில் பாய்கலைப்பாவை
 
இளங்கோவடிகள் வாழ்ந்த காலத்திலும் அம்பிகை வழிபாடு மிக உச்ச கட்டத்தில் இருந்துள்ளது. அவர் அம்பிகையின் பெயர்களைத் தொகுத்து ஒரு நாமாவளியெ பாடி இருக்கிறார்.
 
மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் சக்தி வழிபாடு போற்றப்பட்டள்ளது. பௌத்த சமணக் காப்பியங்களான இவற்றில் இந்து தெய்வமான சக்தியின் மேன்மை சொல்லப்பட்டுள்ளதில் இருந்து சாக்த மதமான தேவிவழிபாடு எத்தனை உச்சத்தில் இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். காரைக்கால் அம்மையார் சிவனைப் பற்றி அற்புதத்திருவந்தாதி பாடியபோதிலும் சக்தியைப் போற்றியும் பாடி இருப்பதை அறிய முடிகிறது.
 
- வேணுசீனிவாசன்