புண்ணியமும் பாவமும்!
புண்ணியம் எது?
எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதென்றாலும் தனக்கோ, பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ அறிவிற்கோ. உடலுக்கோ துன்பம் தராது. விழிப்போடு, துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியத்தின்பாற்படும்.
பாவம் எது?
ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கேனும், பிறருக்கேனும் அன்றைக்கோ, பிற்காலத்திலோ, உடலுணர்ச்சிக்கோ, பகுத்தறிவுக்கோ துன்பம் விளைவதாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதாகும்.
“எண்ணம், சொல் செயல் இவைகள் மூன்றினாலும்
எவர்க்கெனினும் தனக்கெனினும் இன்றோ பின்னோ
மண்ணுலகில் உணர்ச்சிக்கோ கற்பனைக்கோ
மாசு எனும் துன்பம் எழா வகையினோடும்
உண்மையிலே இன்பத்தை விளைவித்துக் கொண்டே
உலக இயல்போடு ஒட்டி வாழும் செய்கை
புண்ணியமாம் இதற்கு முரணானவெல்லாம்
புத்திமிக்கோர் பாபமென விளங்கிக் கொள்வார்”
ஆகவே துன்பம் தரும் செயல் அனைத்தும் பாவங்கள். இதுவே பாவப் பதிவுகள், இதற்கு இடமளித்தால் அவை திரும்பத் திரும்பப் பிரதிபலிப்பாகிச் செயல்களாக விளைந்து தனக்கும் பிறர்க்கும் வாழ்வில் துன்பத்தை ஏற்படுத்துகின்றன.
“தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடியுறைந் தற்று.” - திருக்குறள்
புண்ணிய பாவம் என்னவென்பதும் தெரிந்து விட்டது. எங்கு எப்படி பதிவுகள் உண்டாகிறது என்பதும் தெரிந்து கொண்டோம். இதை மாற்றிவிட வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் சந்தர்ப்பங்கள் நேரும் பொழுது மாற்ற முடியவில்லை. இதற்கு முன்பு எப்படி எப்படி செயல்கள் செய்தோமோ அப்படியே செய்து கொண்டு போகிறோம். காரணம் என்னவெனில் பதிவுகளிலிருந்தும் பழக்கப் பதிவுகளிலிருந்தும் மறந்து, விளக்கம் பெற்ற பிறகும் கூட தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. விளக்கத்திற்கும், பழக்கத்திற்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு வியத்தகு நிலையில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
இதற்கு ஒரு பயிற்சி அவசியம் வேண்டும். முன்பு ஜீவகாந்த சக்தி உற்பத்தியாகிற பொழுது அந்தந்த புலன்களின் செல்களும், அதனுடைய இயக்கத்தையும், எப்படி எப்படி இயங்கி விட்டோமோ அதே முறையில் இயங்கிக் கொண்டே இருக்கிறதனால் அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள பயிற்சி வேண்டும். எண்ணத்தினாலோ, அல்லது எண்ணிய உடனேயோ மாற்ற முடியாது. எண்ணி, திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு மேல் பதிவு கொடுத்து, மாற்றுக் கொடுத்து அதன் பிறகுதான் மாற்ற முடியும். அதனால் தான் வள்ளுவர்
“நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.”
அதாவது எவ்வளவு தான் நுண்ணிய நூல்கள் பலவற்றைக் கற்றாலும், இது நல்லது, இது கெட்டது என்று தெரிந்து கொண்டாலும் பேதமை உணர்வே அதாவது எத்தனையோ ஜென்மமாகப் பெற்ற வினைப் பதிவுகள் முன்வந்து நிற்கும் அதைப் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும். சிந்தனையாற்றல் உள்ளவர்கள், இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டும். இயற்கை வளத்தை அறிவின் சிறப்பினாலும், கைத்திறனாலும் வாழ்க்கைப் பொருளாக மாற்றக் கூடிய அளவிற்கு மனிதன் முன்னேறி விட்டான். பிறர் உள்ளம் உணர்ந்து அதற்குத் தகுந்தவாறு நன்மை தீமைகளைக் கணிக்கக் கூடிய அளவுக்கு அறிவில் ஓங்கி விட்டான். அத்தகைய ஆற்றல் பெற்ற மனிதன் தன்னுடைய ஆற்றலைச் சரிவர பயன்படுத்தாமல் ஏன் தவறான வழியில் சென்று தவறு செய்து கொண்டிருக்கிறான் என்று கேள்வி கேட்கிறார்கள்.
இந்த கேள்விக்கு நாம் விடைகாண வேண்டும். நம்மிடம் இருப்பாக இருக்கக் கூடிய உள்ளணர்வுச் சக்தி, குணாதிசயங்கள், தன்மைகள் (Personality and character) இவை எப்படி வந்தன? எங்கிருந்து வந்தன? என்று பார்ப்போம். நாம் பிறந்த பொழுது நம்முடைய பெற்றோர்களிடத்திலிருந்து, அந்தக் கருவிலே இரண்டு பேருடைய ஜீவகாந்த சக்தியும் ஒன்று சேர்ந்து உயிர்ச்சக்தியாகி கருவாக அமைந்து வந்தோம். அவர்கள் செய்த வினைகள், அவர்களுடைய குணாதிசயங்கள், அவர்களுடைய பதிவுகள், அவ்வளவும் வித்திலே அலை வடிவமாக இருக்கிறது. அது மாத்திரம் இல்லை. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள். அவர்களது பெற்றோர்கள், அவர்களது பெற்றோர்கள், இப்படிப் பின்னோக்கி கருத்தொடராகப் போய்ககொண்டே இருந்தால் கடைசியில் ஒரு மனிதனில் போய் முடியும். அவன்தான் முதலில் தோன்றிய மனிதன்.
அன்றிலிருந்து இன்றுவரையில் எத்தனை கோடி தலை முறைகளாக வந்துள்ள மனிதனிடத்தில், எவ்வளவு காலம், என்னென்ன நிகழ்ச்சிகள், எண்ணிய எண்ணங்கள். செயல் விளைவுகள் அவ்வளவும் அலைகளாகவும், பதிவுகளாகவும் மூளையில்தான் பதிவு பெற்று இருக்கிறது.
இந்த உடலிலுள்ள ஜீவகாந்த சக்தியானது அலையாக ஓடிக்கொண்டே இருப்பதினாலே உடலுள்ள செல்களும், மூளையினுடைய செல்களும் எண்ணிய எண்ணங்கள் அந்நேரத்திலே உள்ள ஒரு கருத்துக்கு ஒத்ததாக உள்ளது மாத்திரம், ஜீவகாந்த அலையிலிருந்து மூளைக்கு வருகிறபொழுது, புள்ளியாக கொண்டு வந்து. மீண்டும் புள்ளியிலே இருப்பது விரித்து எடுத்துக்காட்டுகிறது.
- வேதாத்திரி மகரிஷி