நிர்குண உபாசனை!

நிர்குண உபாசனை!

நிர்குண பிரம்ம வழிபாடு பற்றி கீதையில் பகவான் இவ்விதம் பதில் கூறுகிறார். அவ்யக்தப் பொருளில் (நிர்குணப் பிரம்மத்தில்) நாட்டம் கொண்டவர்களுக்குச் சிரமம் அதிகம். உடல்மீது பற்று உள்ளவர்களுக்கு அவ்யக்த நெறி (நிர்க்குண உபாசனை) மிகவும் கடினமானது.”

எனவே உடல் உணர்ச்சி எனப்படும் தேகாபிமானம் உள்ள வரையிலும், நிர்க்குண உபாசனை மிக மிகக் கடினமாகும். சாதாரண மனிதனுக்கு, சகுண உபாசனை எனப்படும் உருவ வழிபாடு தான் சிறந்தது என்று பகவான் அர்ஜுனனிடம் கூறுகிறார்.
 
சகுண உபாசனையைச் செய்ய வேண்டிய முறையில் தவறாமல் தொடர்ந்து பின்பற்றினால், முடிவில் அது நிர்க்குண உபாசனைக்கும் அழைத்துச் செல்லும்.
 
நடக்கவே முடியாதவனுக்கு விரைந்தோடுவது என்பது சாத்தியமல்ல. அதுபோல் சகுண உபாசனையிலேயே நிலைபெறாதவன், நிர்க்குண உபாசனையில் நிலைபெறுவது இயலாத காரியம்.
 
நிர்க்குணப் பிரம்மம், சகுணப் பிரம்மம் ஆகியவை ஒரே காகிதத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை.  சகுண பிரம்ம உபாசனையில் சிறப்பாக ஒருவன் நிலைபெற்று விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் மீது பிரீதி (பேரன்பு) கொள்ளும் சகுண பிரம்மம் (உருவக் கடவுள்), தனது மறுபகுதியாக விளங்கும் நிர்க்குண வடிவத்தை அந்தப் பக்தனுக்குக் காட்டி அருள் புரிகிறது.
 
நிர்க்குணப் பிரம்மம் பற்றிய வெறும் நூலறிவை ஏராளமாகப் பெற்றிருப்பதைவிட சகுண பிரம்மம் பற்றிய அனுபவங்களைச் சிறிதளவு சுயஅனுபவமாகப் பெற்றிருந்தாலும் அதுவே உயர்ந்தது.
 
சகுணபிரம்ம உபாசனை என்பது, நிர்க்குண பிரம்ம உபாசனை என்னும் இலட்சியத்தை அடையப்போகும். பாதையில் உள்ள ஓர் இடைநிலையாக இருக்க வேண்டும். (half way house) என்று அத்வைதிகளின் நோக்கில் சொல்லலாம்.
 
சகுண உபாசனையில் மனதின் உணர்ச்சிகளான அன்பு, பக்தி ஆகியவற்றுக்கே முக்கிய பங்கு உண்டு. நிர்க்குண உபாசனையில் விவேகம், வைராக்கியம் போன்ற புத்தி சம்பந்தமான செயல்களுக்கே முக்கிய பங்கு உண்டு்.
 
மகான்களான மதுசூதனசரஸ்வதி, சதாசிவ பிரம்மேந்திரர், அப்பைய தீக்ஷிதர் போன்றவர்கள் நிர்க்குண பிரம்மத்தின் அனுபூதி ஆனந்தத்தில் திளைத்தவர்கள்.அவர்கள் தாங்களே விரும்பி நிர்க்குண உபாசனையிலிருந்து கீழே இறங்கி வந்து, சகுண உபாசனையிலேயே சொல்லொணாத ஆனந்தம் அடைந்திருக்கிறார்கள்.
 
- சுவாமி கமலாத்மானந்தர்