நலம் தரும் நவராத்திரி விரதம்!

 நலம் தரும் நவராத்திரி விரதம்!

அன்னை பராசக்தியை வழிபடும் விழாக்கள் எண்ணற்றதாக இருந்த போதிலும், தொடர்ந்து ஒன்பது நாட்கள் அன்னையை வழிபடக்கூடிய நவராத்திரி விழா மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. சிவபெருமானை தரிசித்து வழிபட சிவராத்திரி ஒரு நாள் என்பது போல், அம்பாளை வழிபட ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவது தான் நவராத்திரி விழாவாகும். மகிசாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமியன்று போரில் வெற்றி பெற்றாள். இந்த நாளே விஜயதசமி என்று கொண்டாடப்படுகின்றது. 
 
புரட்டாதி மாதத்து பூர்வஞ்பக்க பிரதமைத் திதி முதலாக உள்ள ஒன்பது இரவுகளை நவராத்திரி எனவும், பத்தாம் நாள் விஜயதசமி எனவும் பூஜைக்குரிய விரத நாட்களாகக் கொண்டாடப்படுகின்றன. சக்தியின் பல்வேறு அருட்செயல்களை நினைவுகூர்ந்து, தேவியின் பாதங்களை வணங்கி வரங்கோருவதையே நவராத்திரி விரத தினங்கள் குறிக்கின்றன.
 
இலக்குமி, சரஸ்வதி, சாவித்திரி, துர்க்கை, காளி, புவனேஸ்வரி, பாலாம்பிகை, பெரியநாயகி, பருவதவர்த்தினி, தையல்நாயகி, இராசராசேவரி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, தனலட்சுமி முதலான அனந்த திருநாமங்களைக் கொண்டு பக்தகோடிகளுக்கு அருள்பாலிக்கின்றாள் பராசக்தி. முக்கியமாக சக்தியானவாள் நவராத்திரி தினங்களில் முறையே மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைணவி, இந்திராணி, பிராஹ்மி, நரசிம்மி, சாமுண்டி என்கின்ற நவசொரூபிகாளாக விளங்கி அருள்புரிக்னறாள். லோகநாயகி உமாதேவி சராசரங்களிடத்தே விளங்குகின்ற எல்லா அழகின் அம்சமாகும். ஆன்மாக்கள் சோர்வடைந்த காலத்தில் நவசக்திகளையூட்டி ஈடேற்றி அருள் செய்கின்றாள்.
 
நவராத்திரி தினங்களில், முதல் மூன்று நாட்களும் வெற்றியை வேண்டித் துர்க்கா தேவியையும். அடுத்த மூன்று தினங்களும் செல்வத்தை வேண்டி இலக்குமியையும், இறுதி மூன்று தினங்களும் கல்வியை வேண்டிச் சரஸ்வதியையம் வழிபடல் வேண்டும். ஒன்பதாம் நள்ளிரவு ஆயுத பூஜை எனப்படும். ஒவ்வொரு வரும் தமது முயற்சிக்கு ஆதாரமான பொருட்களை - ஆயுதவகைகள், புத்தகங்கள், இரத்தினம், பொன் முதலியவற்றை வைத்து வழிபடுவர். பத்தாம் நாள் விஜயதசமி எனப்படும். அன்று ஏடு தொடக்குதல் முதலான வித்தியாரம்பங்கள். வித்தை அறிந்தவர் அப்பியாசித்தல், ஆயுத வித்தைகள் ஆரம்பித்தல் என்பவற்றிற்கு விசேஷ தினமாகும் விஜயம் என்பது வெற்றி.
 
பராசக்தியும் பரமாத்மாவும் ஒன்றேயாகும். “சக்தியும் சிவமுமாய் தன்மையில் உலகமெல்லாம் என்பது சிவஞானசித்தியார் வாக்கு பராசக்தியே பிரம்மனிடம் சிருட்டி சக்தியாயும், விஷ்ணுவிடம் ஸ்திதி சக்தியாயும், உருத்திரனிடம் சம்கார சக்தியாயும் விளங்குகின்றது. நவராத்திரி நாட்களில் மேற் கூறியவாறு அருள்புரிகின்றது. சகல ஐஸ்வரியங்களையும் அளிக்கும் மகாசக்தி பெண், கல்வி, சங்கீதம், கீர்த்தி, செல்வம், தானியம், வெ்றறி பூமி, தண்ணீர் முதலான எல்லா அம்சங்களுக்கும் தலைமை தாங்குவன பெண் சக்திகளே.
 
இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலும் மற்றும் உலகில் உள்ள இந்துக்களாலும் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவும் விரதமும் மிகச் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது. சக்தி, வீட்டின் திருவிளக்கு. குடும்பக் குலவிளக்கு, ஆண்களுக்கு வீரம், புகழ், கீர்த்தி, மதிப்பு யாவுமளிப்பன சக்தியே. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் குறிக்கோள்களைச் சக்தியின் மூலமே அடையலாகும். சாத்வீகம், இராச்சதம், தாமசம் என்பன மூக்குணங்கள். இவை அமைந்துள்ள ஞானசக்தி, கிரியாசக்தி. இச்சாசக்தியென்னும் மூவகைத் தோற்றங்களைக் கொண்டருளும் பராசக்தி, இலக்குமி, துர்க்கை, சரஸ்வதியெனவம் குறிப்பிடுவர். இப்புண்ணிய தினத்தில் யாராயினும் தேவியை வணங்கத் தவற மாட்டார்கள். தேவாலயங்கள், வித்தியாலயங்கள், மடாலயங்கள், வீடுகள் முதலாக எங்கும் வழிபாடு நடைபெறும். ஆசிரியர்கள் பலகை விருத்தங்கள், பாக்கள், கோலாட்டங்களை மாணவருக்குப் பயிற்றுவிப்பார்கள். பெரியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களை மகிழ்வித்துச் சன்மானம் பெறுவர். நாமும் நவராத்திரி விரதத்திலும், வழிபாடுகளிலும் நம்மை பக்தியுடன் ஈடுபடுத்திக் கொண்டு அம்பாளின் அருள் பெறுவோமாக!
 
- S. ஆகாஷ்