தாயாருக்கே முதல் மரியாதை!

தாயாருக்கே முதல் மரியாதை!

பெருமாள் கோயில்களுக்குச் சென்றால் முதலில் தாயாரை தரிசித்து விட்டு, அதன்பிறகு பெருமாளை தரிசிக்க வேண்டும் என்பார்கள். பெருமாளிடம் முறையிடுவதை விட, தாயாரிடம் முறையிட்டால் அவள் பெருமாளிடம் நமக்காக பரிந்துரைப்பாள். ராமபக்தரான சமர்த்த ராமதாசர், ராமபிரான் மீது உயிரையே வைத்திருந்தார். அவருக்குச் சேவை செய்வதிலேயே தன் வாழ் வைக் கழித்தார். ஒரு சமயம் அவர் அரசனிடம் பெற்ற கடனுக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

 
ஒவ்வொரு நாளும் மன்னன் அவருக்கு கசையடி கொடுத்தான். ஒவ்வொரு அடிக்கும் அவர், “ராமா! ராமா! என்று தானே சொன்னாரே தவிர, வேறு வார்த்தை ஒன்றும் பேசவில்லை. இப்படியாக பதினான்கு ஆண்டுகள் கடந்து விட்டது. ஒரு சமயம் சிறைச்சாலை தொழி லாளிகள் அவரை அடித்த போது சமர்த்த ராமதாசர், “சீதா தேவி தாயே! நான் படும் துன்பம் உனது கண்களுக்குத் தெரியவே இல்லையா? என் துன்பத்தை நீக்கும்படி ராமனிடம் சொல்லக்கூடாதா?” என கதறினார்.  அவரது கதறலைக் கேட்ட சீதா பதறிப் போய் ராமனிடம், “சுவாமி! நம் பக்தன் இப்படி தினமும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறானே! அவனைக் காத்தருளாமல் இப்படி அமைதியாக இருக்கிறீர்களே!” என முறையிட்டாள். அதன் பின் ராமர், ஒரு வீரன் வடிவம் எடுத்தார்.  உடன் லட்சுமணனையும் அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு சென்றார். மன்னனிடம் ராமதாசர் தர வேண்டிய பணத்தைக் கொடுத்து விட்டு ராம தாசரை மீட்டார்.