கொலுவின் படிகள் உணர்த்தும் தத்துவம்!

நவராத்திரி விழாவின் போது முப்பெரும் தேவியருக்கும் விழா எடுத்து சிறப்பிக்கப்படுகின்றது. இந்த சமயத்தில் வைக்கப்படுகின்ற கொலுவில் ஒன்பது படிகள் அமைக்கப்பட்டு அதில் பொம்மைகள் தத்துவார்த்தமாகவும் அழகாகவும் அடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு படியிலும் ஐதீக முறைகளின்படி பொம்மைகளை அடுக்க வேண்டும். ஒவ்வொரு அடுக்கும் தெரிவிக்கின்ற தத்துவங்கள் உன்னதமானதாகும்.
“ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் என்னை உருவகம் செய்து பூஜித்து வந்தால் அவர்களுக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்று அம்பிகை கூறியிருப்பதாக தேவி புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சுரதா என்ற மன்னன் தனது நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். அவரது நாடடை பிடிக்க சிலர் சதி செய்து வந்தனர். இதனை அறிந்த மன்னன், எதிரிகளை அழிப்பதற்காக தன் குருவான சுதாமாவிடம் ஆலோசனை கோரினான். அவரோ தேவி புராணத்தில் அம்பிகை கூறியிருப்பதை சுட்டிக்காட்டி, தூய்மையான களிமண்ணைக் கொண்டு காளியின் சொரூபத்தை செய்து, நோன்பு இருந்து அன்னையை வழிபட்டால் உனது எண்ணம் நிறைவேறும் என்று தெரிவித்தார்.
மன்னனும், குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களி மண்ணைக் கொண்டு, காளி ரூபத்தை செய்து, அது அவாகனம் செய்து. உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை மனமுருகி வழிபட்டான். அந்த வேண்டுதலின் பயனாக மன்னன் சுரதா தன் பகைவர்களை அழித்து தனது நாட்டின் எல்லையை விரிவுப்படுத்திக் கொண்டான். பகைவர்களை வீழ்த்தி, அது தொடர்பான இன்னல்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டான். இதனை தொடர்ந்து, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளை கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாக கொள்ளப்பட்டது.
மனிதன் படிப்படியாக ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலு படிகளும், பொம்மைகளும் வைக்கப்படுகின்றன. கொலு அமைக்கும் போது, சாதாரணமாக ஒன்பது படிகள் அமைப்பது வழக்கம். ஒவ்வொரு படியிலும் ஐதீக முறைகளின் படி பொம்மைகளை அடுக்கி வைக்க வேண்டும். பொம்மைகளை வைக்கும் மரபையும், அந்த பொம்மைகள் தெரிவிக்கும் தத்துவத்தையும் கீழ் கண்டவாறு அறிந்து கொள்ளலாம்.
முதலாம் படி - கொலு மேடையில் கீழிருந்து முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிர்களை புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் கொலுவாக வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.
இரண்டாம்படி - அடுத்ததாக அமைந்த இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு பொன்ற உயிர்களின் பொம்மைகளை கொலுவில் வைக்க வேண்டும்.
மூன்றாம் படி - மூன்றறிவு படைத்த உயிரினங்களான கறையான், எலும்பு போன்றவற்றின் பொம்மைகளை கொண்டு மூன்றாவது படியை அமைக்க வேண்டும்.
நான்காம் படி - நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைத்து நான்காவது படியை அலங்கரிக்க வேண்டும்.
ஐந்தாம் படி - ஐந்தறவு கொண்ட உயிர்களை மிருகங்கள் மற்றும் பறவைகளின் பொம்மைகளை வைத்து ஐந்தாவது படியை அமைக்க வேண்டும்.
ஆறாம் படி - இந்த படி மனிதர்களுக்கு உரியது. எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும். சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து ஆறாவது படியை நிர்மாணிக்க வேண்டும்.
ஏழாம் படி - மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் கொண்டு ஏழாவது படியை அமைக்க வேண்டும்.
எட்டாம் படி - தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகளை் போன்றோரின் பொம்மைகளைக் கொண்டு எட்டாவது படியை அலங்காரம் செய்ய வேண்டும்.
ஒன்பதாம் படி - பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற முப்பெரும் தேவிகள் ஆகிய தெய்வங்களையும். அவர்களின் நடுவில் நடுநாயகமாக ஆதிபராசக்திய்ன உருவ பொம்மையையும் வைத்து ஒன்பதாவது படியை நிறைவு செய்ய வேண்டும். மனிதன் கண்டிப்பாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி சொலு அமைப்பது வழக்கம்.
Featured Video
மாத பலன்கள்
Newsletter Sign Up
Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!