கோவிந்த நாமத்தின் சிறப்பு!

கோவிந்த நாமத்தின் சிறப்பு!

ஸத்ஸங்கம் ஒன்று நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. உபத்யஸகர் கூட்டத்தின் இடையே அமைதி ஏற்பட அனைவரும் நிசப்தமாக அவரது உரையைக் கேட்கச் செய்ய என்ன செய்கிறார்?
 
“ஸர்வத்ர கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்” என்று உரக்க கோஷிக்கிறார் கூட்டத்தினர் அனைவரும் “கோவிந்தா, கோவிந்தா‘” என்று ப்ரதி கோஷம் செய்கின்றனர்.
 
திருப்பதியிலும் ஸ்ரீரங்கத்திலும் பக்தர்கள் தினந்தோறும் “கோவிந்தா! கோவிந்தா!” என்று நாமத்தைச் சொல்லியவாறே தரிசனம் செய்கிறார்கள்.
 
கோவிந்த நாமத்தை எல்லோரும் சொல்வார்கள். அதனால்தான் - “ஸர்வத்ர” என்று அதாவது எல்லா இடத்திலும், எல்லாக் காலத்திலும் என்று ச்லாகித்து “ஸர்வத்ர கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்” என்று கோஷிக்கிறோம்.
 
ஹிந்து மதத்திலேயே ரொம்ப ரொம்ப விசேஷமான நாமா இந்த கோவிந்த நாமாதான்.
 
உலகின் நாயகனான பகவான் - அந்த ஜகந்நாதன் - பரம கருணையோடு பரம எளிமையோடு வந்து மாடு மேய்த்து, ஆயர்பாடியில் எளியவர்களோடு எளியவானாக வாழ்ந்த காலத்தில் அவனுக்கு ஏற்பட்ட பெயர் இது.
 
இந்திரனின் கர்வத்தை அடக்கி, மழைக்குக் காரணமாக உள்ள மலையை வழிபட வைத்து இந்திரனின் கோபத்திலிருந்து கோகுலத்து ஜனங்களைக் காக்க கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தபோது,
 
தேவேந்திரனே கண்ணபிரானிடம் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஸகல உயிர்களையும் ரக்ஷிப்பவர் அவர்தான் என்று அர்த்தம் தொனிக்கும்படியாக “கோவிந்த” என்று அவருக்குப் பட்டம் சூட்டி அபிஷேகமும் செய்து வைத்தான்.
 
இதனை கோவிந்தராஜ பட்டாபிஷேகம் என்று ஸ்ரீராமபட்டாபிஷேகத்தை விட ஒரு படி மேலேயே பாராட்டுகிறார்கள் பக்தர்கள்.
 
கோவிந்த - அர்த்தம்?
 
கோ என்பது ஸகல ஜீவராசிகளையும் குறிப்பதாகும். கோக்களுக்கு இந்திரன் கோவிந்தன் “விந்த” என்றால் ஒன்றைத் தேடி நாடி போய் அடைவது பசுக்கள் இப்படி க்ருஷ்ணனிடமே உயிராயிருந்து அவரைத் தேடி அடைந்ததால் கோவிந்தன்.
 
“கோ” என்பது பசுவை மட்டும் அல்லாமல் பூமி ஆகாசம், வாக்கு இந்திரியங்கள் ஆகியவற்றையும் குறிப்பது இவையெல்லாம் தேடிப்போய் அடையும் லக்ஷயமான பரமாத்மா அவர் என்பதை கோவிந்த நாமம் தெரிவிக்கிறது.
 
கோவிந்தா என்ற ஒரு நாமத்தைச் சொன்னால் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் நினைவு கூர்ந்ததாகிவிடும்.
 
கோ என்பது வேதத்தின் பெயர் அதை மீட்டுக் கொடுத்த மத்ஸ்யாவதாரம் -
கோ என்றால் பர்வதம்
பர்வதத்தைத் தூக்கிய கூர்ம அவதாரம்
 
கோ என்றால் பூமி - பூமியை உத்தாரணம் செய்த வராஹ அவதாரம்.
 
நரஸிம்ஹனை கோவிந்த கோவிந்த என்று ஸமஸ்த தேவதைகளும் ஜபித்தனர்.
 
மூன்றடி மண் கேட்டான் வாமனன், குறுகிய வடிவினான அவன் நாமமும் மூன்றெழுத்தில் குறுகி நிற்பது “கோவிந்த”வில்”
 
கோ என்றால் பூமி. பூமி முழுதும் சஞ்சரித்த பரசுராமனும் கோவிந்தனே
கோ என்றால் ஆயுதம். அனைத்து அஸ்திரங்களும் நிலைகொண்ட ராமன் கோவிந்தனே
பூமியைக் கலப்பையால் இழுத்ததனாலே பராமானும் கோவிந்தனே
 
எல்லோருக்கும் மேம்பட்டவனாய் எண்ணற்ற பெருமைகளையும் சக்தியையும் உடையவன் இப்பூமியிலே அவதரித்து பசுக்களின் பின்னே திரிந்து அவைகளுக்குப் புல்லும் தண்ணீரும் அளித்து அதையே தன் பேறாகக் கருதிய அவஸரம் அல்லவா கோவிந்த அவஸரம்.
 
“கன்று மேய்த்து விளையாட ல்லானை வரைமீகானில் தடம் பருகு கருமுகிலை” என்ற திருமங்கையாழ்வார் பாசுரத்திற்குப் பராசரபட்டர் என்னும் ஆசார்யர் மிக அழகாக விளக்கம் தருகிறார்.
 
காட்டில் கன்றுகளை மேய்க்கச் செல்லுவான் கண்ணன் கன்றுகள் நீர் பருக வேண்டும் என்று நினைக்கும். ஆனால் அவை மிகச் சிறிய கன்றுகளாகையால் நீரை எப்படிக் குடிப்பது என்று அவைகளுக்குத் தெரியாதாம்.
 
உடனே கண்ணன் தன் கையைப் பின்னால் கட்டிக் கொண்டு குனிந்து தடாகத்தில் உள்ள நீரை உறிஞ்சிக் காட்டுவானாம்.
 
உடனே அக்கன்றுகளும் அவனைப் போலவே நீரை உறிஞ்சிக் குடிக்குமாம்.
 
அப்படிக் கண்ணன் உறிஞ்சிக் காட்டும் போது, ஒரு மேகமானது தடாகத்திலிருந்து நீரைப் பருகுவது போல இருக்கும்.
 
இதைத் தான் ஆழ்வார், “கன்று மேய்ந்து விளையாட வல்லானைத் தடம் பருகு கருமுகிலை” என்கிறார் என்பது பட்டர் தரும் விளக்கம்.
 
இப்படி எல்லாப் பசுக்களையும் கன்றுகளையும் மேய்த்தவன் கோவிந்தன். எப்படிப்பட்ட பாவங்களைச் செய்தவர்களும் இத்திருநாமத்தைச் சொன்னவாறே உயர்ந்த பேற்றினை அடைவார்கள் என்கிறது சாஸ்த்ரம்.
 
மொய்த்த வல்வினையும் நின்று மூன்றெழுத்துடைய பேரால்
சத்திர்பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான்
 
என்கிறார் தொண்டாடிப் பொடியாழ்வார்.
 
“மிகக் கொடிய பாவங்களைச் செய்தவனான க்ஷத்ரபந்து என்பவனும் கோவிந்தா என்கிற மூன்றெழுத்துடைய திருநாமத்தை உச்சரித்து உயர்ந்த பேற்றை அடைந்துவிட்டான்” என்கிறார் அவர்.
 
திரௌபதி கை சோர, மெய் சோர, அங்கம் சோர, வேறோர் சொல்லும் கூறாது கோவிந்தா, கோவிந்தா என்று அரற்றிக் குளிர்ந்த போது கடல் கலகலத்து எறிந்திட்ட அலைகள் போல வண்ணச் சேலைகளாய் அவை வளர்ந்த வரலாறு நமக்குத் தெரியும்.
 
- ஆர்.பி.வி.எஸ்.மணியன்