எட்டு வகை திருமணங்கள்

எட்டு வகை திருமணங்கள்

பெண்ணுக்கு நகையும் போட்டு பணமும் கொடுத்து பெண்ணை வாங்கி திருமணம் செய்வது ஆருஷம், கருத்தொருமித்த பெண்ணும் ஆணும் காதல் கொண்டு மணப்பது காந்தருவம். தன் வலிமையால் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பலவந்தப்படுத்தி தூக்கி வந்தோ திருமணம் செய்வது அரக்க திருமணம். பெண் தூங்கும்போதோ அல்லது மயக்கத்தில் இருக்கும்போதோ பெண் தன் நினைவின்றி இருக்கும் போதோ திருமணம் செய்வது பைசாச திருமணம் ஆகும்.

 
மணமகனை வலியச் சென்று பார்த்து பேசி அவனுக்கு புத்தாடை அணிவித்து ஆடை அணிகளால் அழகு செய்த பெண்ணை, அவனுக்கு தானம் செய்வது பிராம விவாகம்.
 
மணமகளை அழைப்பித்து வணங்கி பெண்ணைக் கைப்பிடித்துக் கொடுத்து “நீவிர் இருவருமாக அறங்களைப் புரிந்து வாழ்வீராக” என வாழ்த்திக் கொடுத்தல் பிராஜபத்யம் ஆகும்.
 
பிராமம், தெய்வம், ஆருஷம், பிராஜாபத்யம், அகரம், காந்தருவம், இராட்சசம், பைசாசம் என திருமணம் எட்டு வகைப்படும்.
 
இல்லறம்
 
மணமகன் மணமகள் இடையுறாத அன்புடன் நடக்க வேண்டும். பருவ காலத்தில் அவளுடன் மகிழ்ச்சியுடன் கூட வேண்டும். பிற காலங்களில் ஒருவரை ஒருவர் விரும்பும் போதும் கூடக்கூடாத நாட்கள் தவிர்த்த நாட்களில் விருப்பம் போல் கூடி மகிழலாம். பிறன்மனை விரும்பாமல் இருக்க வேண்டும். ஒருவன் அறநெறியில் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறருக்கு உரியவனின் பெருமையை விரும்பாமல் வாழ்தல் நல்லது என்கிறார் திருவள்ளுவர்.
 
“அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை ஒன்று”
 
விலக்க வேண்டிய நாட்கள்
 
மாதவிடாய் நாளிலிருந்து 14 நாட்கள் பெண்ணின் பருவ காலம் ஆகும். அதில் முதல் நான்கு நாட்கள் விலக்கப்படுதல் வேண்டும். ஏகாதசி, திரியோதசி, சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தி, அமாவாசை, பௌர்ணமி, விரத நாட்கள் தனக்கு ஆகாத நாட்கள், இருவரின் பிறந்த நாள், சிரார்த்த தினம் ஆகிய நாட்களில் உறவு கூடாது.  மாதவிலக்கான மூன்று நாட்களுக்குள் மனைவியுடன் கூடுவதும் தீதே. ஒரே படுக்கையில் இருப்பதும் தீதாகும்.
 
பகல் உச்சிப்பொழுது. நடுச்சாமம், காலை, மாலையில் சந்திப் பொழுது, சந்திரன் திருவாதிரை திருவோணத்தில் சஞ்சரிக்கும் நாள் ஆகிய நாட்களில் உறவு கொள்ளக்கூடாது.
 
மாத விலக்கிலிருந்து 2, 6, 8, 10, 12, 14, 16 ஆகிய நாட்களில் இரவு உறவு கொள்ள ஆண் சந்ததியும் ஒற்றைப்படை நாட்களில் உறவு கொள்ள பெண் சந்ததியும் பிறக்கும் 
 
பெண்ணின் மகிழ்ச்சி
 
ஒரு பெண்ணுக்கு அவளது தந்தை, உடன் பிறந்தோர், கணவன், மைத்துனர் ஆகியோர் திருமணம் பரிசுகள் கொடுத்து மகிழ்வுறச் செய்ய வேண்டும். ஆடை, அணிகலன்களுடன் மகிழ்ச்சியுடன் பெண் வாழும் வீட்டில் சகல தெய்வங்களும் மகிழ்ச்சியுடன் எழுந்தருளும், பெண்ணை மனம் நோகச் செய்யும் குலம் அழியும். தன்னை நன்கு காத்து ரட்சிக்காத பிறந்தகத்தை ஒரு பெண் மனம் வருந்திப் பேசினால் அக்குலத்திற்கு அதுவே பெரிய சாபத்தீட்டாகும். எனவே, முக்கியமான நாட்களிலும், பிறந்த வீட்டில் நடைபெறும் விசேஷங்களின் போதும் பெண்ணின் மனம் மகிழும்படி நடக்க வேண்டும்.
 
கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு அயலார் மீது மனம் நாடாமல் ஒருமித்து வாழும் குடும்பமே சிறக்கும். அவ்வாறு மகிழ்வுடன் பெண் வாழ்ந்தால் தான் அவளிடம் சந்ததி உண்டாகும். குழந்தையும் அழகும் அறிவும் பூரணமாகக் கொண்டு விளங்கும்.
 
அறுபதாம் கல்யாணம்
 
அறுபது வயதில் நடக்கும் வைபவத்திற்கு அறுபதாம் கல்யாணம் என்று பெயர். ஒருவர் பிறந்த தமிழ் தேதி, மாதம், வருடம், நட்சத்திரம் ஆகிய இவையாவும் அறுபதாவது வயது நிறைவு செய்ததற்கு அடுத்த நாள் வருகிறது. இதை “மணி விழா” என்றும் “சஷ்டியப்த பூர்த்தி” என்றும் சொல்வார்கள்.
 
தமிழ் வருடம் 60 ஆண்டுகளாக உள்ளது. அடுத்த 60 ஆண்டுகள் ஒருவருக்கு வாழ்வில் இரண்டாவது பகுதியாகும். எனவே, 60 ஆம் வயதில் வாழ்க்கையில் ஒரு பகுதி முடிவடைந்து இரண்டாவது பகுதி ஆரம்பமாகிறது. தங்களுக்குத் திருமணம் செய்து வைத்த பெற்றோருக்கும் பிள்ளைகள் திருமணம் செய்து வைத்து பார்த்து மகிழ்கிறார்கள். இது ஒரு விதத்தில் நன்றிக் கடனாகும். இது நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெற்றோர்கள் பெறுவதற்காக நடைபெறும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியைக் காண்பதும், பெரியோர்களின் ஆசியைப் பெறுவதும் நன்மை பயக்கும். இதில் தாலிகட்டும் நிகழ்ச்சியும் உண்டு.
 
சதா பிஷேகம்
 
ஒருவருக்கு நூறு வயது ஆகும் போது செய்ய வேண்டிய சடங்கிற்கு “சதாபிஷேகம்” என்று பெயர். பொதுவாக இக்காலத்தில் நூறுவயது வரை வாழ்வது அரிதாக உள்ளது. எனவே எண்பதாவது வயதில் “சதாபிஷேகம்” செய்யப்படுகிறது.
 
முதல் நாள் மாலை வேத விற்பன்னர்களைக் கொண்ட வேத பாராயணம் செய்வார்கள். மறுநாள் ஹோமம் வளர்ந்து, கும்பம் வைத்து புரோகிதர்கள் மந்திரம் ஜெபித்து அதன் பின்னர் கலச நீரை சதாபிஷேகம் செய்யும் தம்பதிகளுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
 
இது ஒரு அபூர்வ நிகழ்ச்சியாகும். தம்பதிகள் எண்பது வயது வரை வாழ்வது என்பது வாழ்வில் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய அரிய வாய்ப்பாகும். தம்பதிகளுக்குப் புடவை, வேஷ்டி முதலியவற்றை அளித்து அவர்களை வணங்கி ஆசி பெற வேண்டும்.
 
1000 பிறை காணுதல்
 
எண்பது வயது முடித்தவர்களை ஆயிரம் பிறை கண்டவர் என்று போற்றுவர். 80 ஆண்டுகளில் மாதம் ஒரு பிறை வீதம் 960 பிறைகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு பிறை அதிகம் வரும். அதன்படி 40 பிறைகளும் ஆக 1000 பிறைகளை 80 வயதில் காணும் பேரினைப் பெறுகின்றனர். எனவே, தான் ஆயிரம் பிறை கண்டவர் எனப் போற்றுவர்.
 
60 ஆம் ஆண்டு சஷ்டியப்த பூர்த்தி எனப் போற்றுவர் அவர் பிறந்த அதே தமிழ் ஆண்டு மீண்டும் வரும். அன்று நாள், தேதி, கிழமை, நட்சத்திரம் அனைத்தும் மீண்டும் அப்படியே வரும் என்பர். இவர்கள் 60 ஆண்டிற்குள் மாதம் ஒரு பிறை வீதம் 720 பிறைகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பிறை வீதம் 30 பிறைகளும் ஆக, 750 பிறைகளைக் காண்கின்றனர்.
 
- அநங்கன்