மரணத்தை வென்றவர்கள்!

மரணத்தை வென்றவர்கள்!

கிரியா யோகப் பயிற்சி மாயையின் காரணமாய் புலன்களின் தவறானப் பயன்பாட்டில் உயிர்ச்சக்தி வீணாவதைத் தடுக்கிறது.
 
கிரியா யோகியின் வாழ்க்கை அவனுடைய ஆத்மாவின் வழிகாட்டுதலால் மட்டுமே இயக்கப்படுகிறது. உயர்ந்த முறையான ஆன்மா வாழ்வு அவனை விடுதலை அடையச் செய்கிறது. அவன் பிரம்மத்தின் எல்லையற்ற காற்றை பிரபஞ்ச ஆற்றலை நுகர்கிறான்.
 
இரட்டை உடம்புச் சாமியார்
 
இங்கே சுவாமி பிரணவானந்தரின் வாழ்க்கை பற்றி குறிப்பிட வேண்டியிருக்கிறது. இவர் நீண்டகாலம் காசியில் வசித்தவர். கிரியா யோகத்தில் ஈடுபட்டவர். தம்முடைய வாழ்வின் பிற்பகுதியில் இமயமலைச் சாரலில் ஆசிரமம் அமைத்துக் கொண்டார்.
 
அவருடைய நோக்கம் எளிய முறையில் வாழ்ந்து, நேரத்தை ஆனந்தமாகக் கடவுள் உணர்வுடன் கழிக்க வேண்டும் என்பதே.
 
பிரணவானந்தர் மகா யோகி. அவரால் தம்முடைய உடற்கட்டை உதறமுடியும், நாம் விரும்பியவாறு நம் உடலைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
 
ரிஷிகேசத்திற்கருகில் ஒரு ஆசிரமத்தை நிறுவினார் அவர். தம்முடைய சீடர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தேவையான பயிற்சி அளித்தார்.
 
ஒரு நாள் அவர் பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்தார். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேருக்கு உணவு பரிமாறப் பட்டது. அவரது பிரதான சீடனான சனந்தன் கேட்டான். (பரமஹம்ஸ யோகானந்தரின் பால்ய சிநேகிதன்) “குருவே இத்தனை பெரிய கூட்டத்தை கூட்டச் செய்திருக்கிறீர்களே. இதன் நோக்கம் என்ன?” என்று.
 
பிரணவானந்தர் மகிழ்ச்சியுடன் கூறினார், “இது நான் பங்கேற்கிற கடைசித் திருவிழா. என்னுடைய உடற்கட்டை தநான் உதறப் போகிறேன். பார்த்துக் கொண்டேயிரு. இன்னும் சிறிது நேரத்தில் அது நடக்கும்” என்று.
 
தயவு செய்து அப்படிச் செய்துவிடாதீர்கள் சனந்தன் பலவாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டான். ஆனால், அவருடைய கண்களில் தாம் முன்பே எடுத்த முடிவில் உறுதியாயிருப்பது தெரிந்தது.
 
விருந்தின் முடிவில் இறைவனைப் பற்றி மெய்சிலிர்க்க வைக்கும்படியாய் உரையாற்றிய பிரணவானந்தர் தமது சீடன் சனந்தன் பக்கம் திரும்பி, “வருத்தப்படாதே, நான் பரமாத்மாவிடம் போகிறேன். கொஞ்சகாலம் பரமானந்தத்தை அனுபவித்துவிட்டு இங்கே மீண்டும் வருவேன். பாபாஜியுடன் சேர்ந்து கொள்வேன்” என்றார்.
 
கூட்டத்தை நோக்கி ஆசீர்வதித்தார். கிரியா யோகத்தின் மூலமாக உடலை உதிர்த்தார். அவர் ஒரு சமாதி நிலையில் இருப்பதாக எல்லோரும் நினைத்தனர். ஆனால் அவருடைய ஆத்மா ஸ்தூல சரீரத்தை விட்டு வெளியேறியது. சீடர்கள், பத்மாசனத்தில் அமர்ந்திருந்த அவருடைய உடலைத் தொட்ட பொழுது அது உயிரற்று விறைப்புடன் காணப்பட்டது.
 
பிரணவானந்தர் மீண்டும் புது உடல் எடுத்து பூமிக்கு வந்தார். சில வருடங்களுக்குப் பிறகு பத்ரிநாத் சென்று பாபாஜியின் யோகிகள் குழுவில் சேர்ந்து கொண்டார்.
 
பாபாஜி குழுவில் இடம் பெற்ற பிரணவானந்தர் தமது கடைசி அவதாரத்தின் உடம்போடு, நீண்ட தாடி, தலைமுடியுடன் இருந்தார்.
 
தமது ரிஷிகேஸ் விருந்தின்போது அவர் உடலில் இருந்து நீங்கிய நிலையை “மகாசமாதி” என்பார்கள். பாபாஜியுடன் இணைந்து கொள்ளவே அவர் மீண்டும் பிறிவயெடுத்தார். தம்முடைய பூர்வ ஜென்மத்தை முந்தைய வாழ்க்கையை அவரால் நினைவுகூர முடிந்தது.
 
பாபாஜியின் வழி நடத்தலில் கிரியா யோகத்தைப் பல ஆண்டுகள் கடமையாய் பயின்று வந்தவர் இவர். அதன் விளைவாகவே சொரூப சமாதியின் மரணமில்லாப் பெரு வாழ்வு கிடைத்தது இவருக்கு.
 
இவர் பாபாஜியின் சொர்க்க பூமியில் கவுரிசங்கர் பீடத்தில் இடம் பெற்ற பிறகு, பல சீடர்களுக்கு அகத்தூண்டலை ஏற்படுத்தி, ஆன்மீக வழிகாட்டியாய் திகழ்கிறார். ஆசிரமத் தோட்டத்தை மேற்பார்வையிடுகிறார்.
 
பாபாஜியின் சீடர்களில் சொரூப சமாதி மூலம் மரணமிலாப் பெருவாழ்வுநிலை அடைந்தவர்கள் மாதாஜியும், பிரணவானந்தாவும் ஆவர். இறைவனிடம் முழுச் சரணாகதி அடைந்ததன் வாயிலாகவே அத்தகைய பேறு அவர்களுக்குக் கிட்டியது. கிரியா யோகத்தின் உன்னதக் குறிக்கோளும் அதுவே.
 
- C.S.தேவநாதன்