பிரம்மபுத்திரர்களுக்கும் ஞானம் வழங்கிய சிவன்
ஒரு சந்தர்ப்பத்தில் திருக்கைலாய மலையில் சிவபெருமானும் பார்வதி தேவியும் அளவளாவிக் கொண்டிருந்தனர்.
இடையில் தட்சனைப் பற்றி பேச்சு எழுந்தது.
அப்போது பார்வதி தேவி சிவனை பக்தியுடன் சேவித்து தாட்சாபணி எனும் தனது நாமத்தை மாற்றியருள வேண்டினாள். பார்வதியின் கோரிக்கையினை ஏற்ற சிவனும், பார்வதியை பூலோகத்தில் குழந்தை வரம் வேண்டி கடுந்தவம் இயற்றும் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறக்க அருள் பாலித்தார். உரிய சமயத்தில் தானே இறங்கிவந்து பார்வதியை மணம் செய்வதாகவும் வாக்களித்தார்.
அதன்படியே உமை பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து சிறுவயது முதற்கொண்டு சிவனைக் கணவனாக அடைய எண்ணித் தவமியற்ற ஆரம்பித்தாள்.
தேவி அருகில் இல்லாமல் சிவன் தனித்திருந்த வேளையில் பிரம்மனின் புத்திரர்களை சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு துறவிகளும் சிவனின் தரிசனம் பெற வந்தனர். சிவனை பவ்யமாகத் தொழுத அவர்கள் எத்தனையோ வேத சாஸ்திரங்களைக் கற்றிருந்தபோதும் முக்தியடையத் தேவையான மன அமைதி கிடைக்காததனால் முக்திப்பேறளிக்கும் ஞானத்தைப் போதிக்குமாறு வேண்டினர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஈசனும் அவர்களின் குருசிரேஷ்டராக தெற்கு நோக்கி அமர்ந்து மோன நிலையில் இருந்து சின் முத்திரையை அளித்து நான்கு முனிவர்களுக்கும் ஞானத்தைப் புகட்டினார்.
இவ்வாறு, கையில் சின்முத்திரையுடன் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் சிவனின் திருவுருவமே தட்சிணாமூர்த்தியாக மெய்ஞானம் அருளும் குருவாக வழிபடப்படுகிறது. பக்தர்களாகிய நாமும் தட்சணாமூர்தியை வணங்கி மெய்ஞானம் அடைவோமாக!