பிருந்தாவன கிருஷ்ணனும் பகவத்கீதைக் கிருஷ்ணனும்!

பிருந்தாவன கிருஷ்ணனும் பகவத்கீதைக் கிருஷ்ணனும்!

பிருந்தாவன கிருஷ்ணனும், கீதாச்சாரியனான கிருஷ்ணனும் ஒருவரே என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
 
சுவாமி விவேகானந்தர், “கோபிஜன வல்லபன், கீதாச்சாரியனை விட உயர்ந்தவன்” என்று, “இந்தியப் பெரியோர்கள்” என்ற தலைப்பில் சென்னையில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
 
“உயர்ந்த பக்தி என்பது பகவானிடம் பரமப்பிரேமை கொள்வதாகும்” என்று, நாரதபக்தி சூத்திரம் கூறுகிறது. அத்தகைய உத்தமமான பிரேமபக்தியும், தூய உள்ளமும், உயர்ந்த மனோபாவனையும் கொண்டவர்களால்தான் ஸ்ரீ கிருஷ்ணனின் பிருந்தாவன லீலைகளைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
 
தேகாபிமானத்திலிருந்து (உடல் பற்றிலிருந்து) விடுபட்டிருந்த பரமப்பிரேமை பக்தியினால்தான், விரஜகோபிகைகள் ஸ்ரீகிருஷ்ணனைப் புரிந்து கொண்டார்கள்.
 
மிக மிக உயர்ந்த பக்திக்கு இலக்கணமாக, பிருந்தாவன கோபியர்களை நாரதர் குறிப்பிடுகிறார்.
 
ஸ்ரீகிருஷ்ண சைதன்யர், கிருஷ்ணாவதாரத்திலேயே ராஸகிரீடையைத்தான் மிகவும் முக்கியமானதாகக் கருதினார்.
 
ஸ்ரீகிருஷ்ணனுடைய ஒவ்வொரு லீலையும் நமக்குத் தேவை. அதில் உயர்வு தாழ்வு, வேண்டுதல் வேண்டாமை என்று காண்பது அறிவீனம்.
 
பிருந்தாவன கிருஷ்ணனைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல. “பிருந்தாவன கிருஷ்ணனைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், மிகப் பெரிய அளவில் உள்ளம் பண்பட்டிருக்க வேண்டும்” என்று, தேகாத்ம புத்தியே இல்லாதவரும், பிரம்மநிஷ்டருமாகிய சுகதேவர் ஸ்ரீகிருஷ்ண லீலையில் சொல்லியிருக்கிறார்.
 
சுகதேவர் எத்தகையவர் என்பதை நாம் மனதில் கொண்டால், அவரால் சொல்லப்பட்ட கிருஷ்ணலீலை என்ற விஷயம் எந்த அளவுக்கு உயர்ந்த சிந்தனைக்கு உரியது என்பது விளங்கும்.
 
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அனுபூதியின் சிகரமாக வாழ்ந்தார். அவர் பிருந்தாவன கிருஷ்ணனைப் பற்றிப் பேசும்போது, இதயம் நெகிழ்ந்து, க்ணீர் மல்கப் பேசியிருக்கிறார். ஆனானப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணர் போன்றவர்களே போற்றித் துதித்த பிருந்தாவன கிருஷ்ணனைத் தாழ்த்திக் குறிப்பிடுவதற்கு நாம் யார்?
 
கீதையில் பகவான் ஆச்சாரியனாக வந்து வேதாந்த சாஸ்திரத்தை உபதேசம் செய்து, நாம் பக்தியும் ஞானமும் அடைவதற்குப் படிப்படியாக எந்த எந்த ஆன்மிக சாதனைகள் செய்ய வேண்டும் என்று எடுத்துக்காட்டியிருக்கிறார்.
 
கீதையில் விசுவரூப தரிசனத்தைக் காட்டிய பிறகு அவரே, “வேறு நாட்டமில்லாத தீவிர பக்தியினால்தான் என் உண்மைச் சொரூபத்தை அறியவும், உள்ளபடி காணவும், என்னை அடையவும் முடியும்” என்று கூறியிருக்கிறார்.
 
பிருந்தாவன கிருஷ்ணனைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். பிருந்தாவன கிருஷ்ணனோடு ஒப்பிடும் போது, பகவத்கீதை கிருஷ்ணனைப் புரிந்து கொள்வது சுலபம் என்றே சொல்ல வேண்டும்.
 
விதிவிலக்காக உள்ள வெகு சிலரைத் தவிர, மிகப்பெரும்பாலானவர்களால் பிருந்தாவன கிருஷ்ணனைப் புரிந்து கொள்ளவே முடியாது. எனவே பெரும்பாலானவர்கள் பகவத்கீதை கிருஷ்ணனைப் புரிந்து கொண்டாலே போதுமானது.
 
- சுவாமி கமலாத்மானந்தர்