அவதார நோக்கங்கள்!

அவதார நோக்கங்கள்!

அவதாரம் எனில், மேலேயிருந்து கீழே இறங்கி வருதல். எல்லாம்வல்ல இறைவன், எப்போதெல்லாம் தர்மம் குறைந்து அதர்மத்தின் கை மேலோங்குகிறதோ, அப்போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டவும் அதர்மத்தை அழிக்கவும் அவதாரம் செய்கிறார்.

 
ஏன், மேலேயிருந்தே அரக்கர்களை அழித்துவிடலாமே! வேறு உருவங்களை ஏன் எடுக்க வேண்டும் எனில், ஆண்டவன் நமக்கு உற்சாகம் அளிப்பதற்காகவும் நம்முடைய உருவிலேயே வந்து நம்மை வழிநடத்துவதற்காகவும் அவதரிக்கிறார். இதை உணர்ந்து அவரைப் போல் வழ முற்பட்டோமானால், நாமும் தெய்வத்தன்மை உடையவர்களாக மாறி ஓர் உன்னத நிலையை அடைய முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவும் அவதரிக்கிறார் என்று சொல்லலாம்.
 
ஒரு விமானம் அதன் ஓடுதளத்தில் நின்றிருக்கும்போது அது ஒரு பெரிய பேருந்து போன்றுதான் தோன்றும். அது போல இறைவன், மனித உருவில் நம்மிடையே உலவும்போது அவரும் நம்மைப் போலத்தானே இருக்கிறார் என்ற ஐயம் ஏற்படும். விமானம் ஓடுதளத்திலிருந்து விலகி எப்போது மேல்நோக்கிப் பறக்கிறதோ, அப்போதே அதைப் பற்றிய அறிவு நமக்கு முழுமையாகப் புரியும். இதுபோன்று, கடவுள் தனது கல்யாண குணங்களை வெளிப்படுத்தும் போது தான், அவரை நம்மால் பரிந்துகொள்ள முடியும்.
 
இறைவன் பேராற்றல் உடையவன், அவனுக்குத் தேவை என்று ஒன்றும் இல்லை. எனினும், மனித உருவம் என்ற ஒன்றை எடுத்தவுடன், அதற்குரிய தர்மங்களைத் தானும் கடைப்பிடித்து, அதன்மூலம் மக்களையும் வழிநடத்துகிறார். எனவே, அனைத்து அவதாரங்களுமே அவரவர் தர்மத்துக்கு ஏற்றபடி தாய்  தந்தையரையும் ஆசார்யரையும் கடவுளையும் வழிபட்டதாக இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இன்றும் அவதார புருஷர்கள் பூஜை செய்த க்ஷேத்ரங்கள் பல உள்ளன. அவையும் நமக்கு வழிகாடடுபவையே!.