ஆவணி மூலத் திருநாள்

ஆவணி மூலத் திருநாள்

அவணி சிறப்புகளில் முக்கியமானதாக ஆவணி மூலத் திருநாளை குறிப்பிடலாம், ஏனென்றால் இந்த மாதத்தில் தான் சிவபெருமானே தன்னுடைய அடியார்க்கு அருளும் பொருட்டு பரமாச்சாரியார் வேடம் கொண்டு தமிழகத்தில் பாண்டி நாட்டிற்கு வந்து பல அற்புதங்களை நிகழ்த்திய மாதமாகும். செந்தமிழ் நாட்டில் பாண்டிய நாடு மதுரையம்பதிக்கு அருகில் திருவாதவூர் என்னும் இடத்தில் ஆமாத்திய பிராமண குலத்தில் உதித்த சம்பு பாதாசிரியர் என்னும் சிவபக்தருக்கு ஒரு புத்திரர் அவதரித்தார். அவருக்கு திருவாதவூரர் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அவர் சகல கலைகளிலும் வல்லமை பெற்று விளங்கினார்.

 
தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில், ஆவணி மாதம் மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகின்றது. சோதிட சாஸ்திரப்படி ஆவணி மாதம் சிங்க மாதம் என சொல்லப்படுகின்றது. சூரியன் சிங்க ராசியில் பிரவேசிப்பதால் இவ்வாறு போற்றப்படுகின்றது.
 
இவருடைய அறிவு திறமையையும் புத்தி கூர்மையையும் ஆளுமைத் திறனையும் கேள்விப்பட்ட, நாட்டை ஆண்ட பாண்டிய மன்னர் அரிமர்த்தன பாண்டியன் தன்னுடைய ராஜ்யத்தின் முதன்மை மந்திரியாக அவரை பணியில் அமர்த்தினான். ராஜாங்கத்தில் மந்திரி பதவி வகித்து வந்த போதிலும், திருவாதவூரர் சில உண்மைகளை பற்றி சிந்திக்கலானார். தன் தந்தையை போலவே சிறந்த சிவபக்தரான இவர், ஆசையே பிறவிக்கு காரணம் என்றும் சிவபக்தியால் பிறவி துன்பத்தை கடக்க வேண்டும் என்றும் எண்ணினார். பாண்டிய மன்னனின் உத்தரவிற்கிணங்க, குதிரைகள் வாங்கும் பொருட்டு திருவாதவூரர் நல்லதொரு நாளில் பாண்டிய நாட்டை விட்டு சோழ நாட்டிற்கு புறப்பட்டார்.
 
திருவாதவூரரின் சிவபக்தியை மெச்சி, அவருக்கு அருள் செய்ய திருவுளம் கொண்டார் சிவபெருமான். எனவே, பழுத்த பரமாச்சாரியார் வேடம் ஏற்று திருப்பெருந்துரையில் ஒரு பெரிய மரத்தடியில் அமர்ந்து சிவாகம உபதேசங்களை செய்து கொண்டிருந்தார். திருப்பெருந்துரையை அடைந்த திருவாதவூரர் ஏவளாளர்கள் மூலம் பரமாச்சாரியாரால் செய்யப்பட்டு வரும் உபதேசங்கள் பற்றிய விபரங்களை கேட்டறிந்தார்.
 
வெகுநாட்களாக தம் உள்ளத்தில் புதைத்து வைத்திருந்த பேரவாவின் காரணமாக, நேராக பரமாச்சாரியரிடம் சென்று உபதேசம் பெற்று அவருக்கு சிவ அடிமையானார். நான்மறை அறங்கள், மேன்மை கொண்ட சைவ நீதி முதலியவற்றை சிவாச்சாரியார் திருவாதவூரருக்கு பாங்குடன் பகன்று வைத்தார். மன்னன் அரிமர்த்தன பாண்டியன் குதிரைகள் வாங்க வேண்டி கொடுத்தனுப்பிய பொன் அனைத்தையும் சிவாலயம் ஒன்றை எழுப்புவதில் செலவழித்து விட்ட வாதவூராருக்கு உதவிடவும் சித்தம் கொண்டார் சிவபெருமான்.
 
ஆகவே, திருவாதவூராருக்காக குதிரை வர்த்தகர் வேடம் கொண்டு ஒரு குதிரையின் மேல் தான் ஏறி அமர்ந்து மேலும் நூற்றுக்கணக்கான குதிரைகளுடன் பாண்டிய நாட்டை அடைந்தார். இதனை கண்ட அரிமர்த்தன பாண்டியன் மகிழ்வுற்றான். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்டு நிலைத்திருக்கவில்லை. கொண்டு வந்த குதிரைகள் யாவும் நரிகளாய் மாறி நடுநிசியில் ஊளையிட ஆரம்பித்தன.
 
இதற்காக மன்னனால் திருவாதவூரர் தண்டிக்கப்பட்டார். காய்ந்து போயிருந்த வைகையில் தண்டனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருவாதவூரர், நின்ற இடத்தில் திடீரென வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இவ்விந்தையை செய்ததும் சிவனே ஆகும். ஒரு சிவனடியாரை காப்பாற்றும் பொருட்டு தானே பரமாச்சாரியர் வேடம் கொண்டு பாண்டி நாட்டிற்கு வந்து அற்புதங்கள் பல புரிந்தார் சிவன்.
 
எம்பெருமான் குதிரை வர்த்தகராக உரு மாறி மதுரை எழுந்தருளி மாணிக்கவாசகருக்கும் பாண்டிய மாமன்னனனுக்கும் மதுரையில் திருவிளையாடல் புரிந்த தினம் ஆவணி மூலம் என்று அழைக்க்படுகின்றது.  அதன் காரணமாக மதுரை வீதிகள் பலவும் இன்றும் கூட ஆவணி மூல வீதிகள் என வழங்கப்படுகின்றன.
 
இப்புனித ஆவணி மூல திருநாள் மிகச் சிறப்பாக சிவாலயங்கள் எல்லாவற்றிலும் பெரு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இறைவனே நேரில் எழுந்தருளி அருள் புரிந்து திருவிளையாடல் நிகழ்த்திய இந்த நல்ல நாளில் சிவனை பக்தியோடு வழிபட்டு நாமும் நல்லருள் பெருவோமாக.