துதிப்போர்க்கு ஞானமும் சக்தியும் நல்கிடும் ஸ்ரீ கருடாழ்வார்!

துதிப்போர்க்கு ஞானமும் சக்தியும் நல்கிடும் ஸ்ரீ கருடாழ்வார்!

ஸ்ரீ விஷ்ணு பகவானின் அந்தரங்க தாசராய் விளங்கி சகல கைங்கரியங்களையும் அவருக்காக செய்திடும் ஸ்ரீ கருட பகவானின் பெருமைகள் சொல்லி முடியாதவையாகும். முக்கியமான தெய்வ கைங்கரியங்கள் நடைபெறுவதற்கு முன்பாக கருடன் வட்டமிட்டாலும் கருடன் ஒலி எழுப்பினாலும் மிகவும் விசேடமாக கருதப்படுகின்றது. ஸ்ரீ கருட பகவான் ஆடி மாதம் சுக்ல பட்சத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆவார். ஸ்ரீ கருட பகவானின் அம்சமாக சொல்லப்படுகின்ற பெரியாழ்வாரும் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். அதர்ம சிந்தனையை அழிக்க அவதரித்த ஸ்ரீ நரசிம்மரும் சுவாதி நட்சத்திரத்தில் தான் தோன்றினார். இதன் காரணமாகவே சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகள் புகுந்த வீட்டிற்குச் சென்றால் அங்கு லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்று நம்பப்படுகின்றது. 

பெருமாளின் வெற்றியை காட்டுகின்ற கொடியில் பட்டொளி வீசி பறக்கின்றவரும் இந்த கருட பகவானே. இவரை துதிப்பவர்களுக்கு ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீரியம், தேஜஸ் போன்றவற்றை வாரி வழங்குபவராயும் நாள் பட்ட கர்ம வினைகளுக்கு அருமருந்தாகவும் விளங்குகின்றார். கடலூர் மாவட்டத்தில் திருவந்திபுரம் சுவாமி வேதாந்த தேசிகருக்கு ஹயகிரீவர் மூர்த்தியை அருளியது மட்டுமல்லாமல் பல்வேறு வடிவங்களை எடுத்து கொண்டு பெருமாளுக்கு பல்வேறு தொண்டுகளை புரிபுவரும் கருடாழ்வாரே. ஆபத்துக் காலங்களை கருடாழ்வாரை நினைந்து வேண்டிக் கொண்டால் துன்பங்களை போக்குவதோடு மட்டுமல்லாமல் விபத்தால் ஏற்படும் மரண பயத்தையும் போக்குவார் கருடாழ்வார். 
 

எம்பெருமானின் திருமேனிக்கு ஏற்றவாறு இனிமையான இதமான காற்றைத் தரும் சாமரமாக கருடன் இருக்கின்றார் என வேதாந்த தேசிகர் தெரிவிக்கின்றார். கண்ணபிரான் வேறு வேலையாக வெளியில் சென்று விட்ட போது துவாராகபுரியை காத்தருளியவரும் கருடாழ்வார் தான். கருட பகவான் திருப்பதியில், ஸ்ரீ வைகுண்டத்தில் எட்டு விமானங்களில் ஒன்றான கிரிடாஜலத்தை கொண்டு வந்து அதில் திருமாலை எழுந்தருளச் செய்தார். இதுவே திருமலை திருப்பதியில் தற்போது பெருமாள் எழுந்தருளிய ஸ்ரீ “ஆனந்த நிலைய” விமானமாகும். திருப்பதியில் உள்ள ஏழு மலைகளில் ஒன்றிற்கு கருடாச்சலம் என்ற பெயர் விளங்குகின்றது. 
 
பக்தர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு எனப்படும் நால்வகை பலன்களையும் ஒரு சேர அருளிப்பவர் கருடபகவானே. மனம் உருகி வேண்டிக் கொண்டால் நாம் நினைத்தவற்றை அற்புதமான முறையில் நமக்காக சாதித்து கொடுப்பவரும் இவரே. கருட பகவானின் திருவருள் கிடைக்கப் பெற்றால் நல்ல ஞாபகசக்தி, பேச்சு சாதுரியம் முதலியவை கிட்டிடும் என “ஈஸ்வரர் சம்ஹிதை” தெரிவிக்கின்றது. 
 
- நவநீதம்