விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் பெருமை!

விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் பெருமை!

உபநிஷத், கீதை, ருத்ரம், புருஷஸுக்தம் இந்நான்குடன் சேர்த்து விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை தினந்தோறும் பாராயணம் செய்ய வேண்டுமென்பது பெரியோர் காட்டிய பாதை.
 

ஸ்வசாகோபநிஷத் கீதா 
விஷ்ணுர் நாம சஹஸ்ரகம்
ருத்ரஞ்ச பௌருஷம் சூக்தம் 
நித்ய-மாவர்தயேத்-புத :
 
மற்றவற்றைப் பாராயணம் செய்ய சக்தியில்லாத போதும் ஸஹஸ்ரநாமத்தை மட்டுமாவது பாராயணம் செய்ய வேண்டும். அதனால் அனைத்தையும் பாராயணம் செய்த பலன் கிட்டும்.
 
“வாயினால் பாடி 
மனத்தினால் சிந்திக்கப்
போய் பிழையும்
புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்
 
என்பது ஆண்டாள் அருள் வாக்கு
 
ஸஹஸ்ரநாம ஜபத்தால் நமது பாவங்களெல்லாம் தீயிலிட்ட பஞ்சு போல் பொசுங்கிப்போம். இந்த ஸஹஸ்ரநாமத்தை இடம் பொருள் காலம் முதலிய கடினமான நியமங்கள் இல்லாமல் எளிதில் பாராயணம் செய்யலாம்.
 
பகவானுடைய தி்ருநாமம் ஆபரணம் போலே ஒரு திருநாமத்தைச் சொன்னாலே போதும் என்கிறபோது அவனது ஆயிரம் திருநாமங்களைச் சொன்னால் கேட்கவா வேண்டும்.
 
நிகமாந்த மஹாதேசிகன் பகவானது நாமங்களைச் சொல்பவர்களுக்கு நரக பயம் வேண்டாம் என்து தனது அபீதி ஸ்தவம் என்கிற ஸ்தோத்திரத்தில் கூறுகிறார்.
 
பகவானுடைய நாம வைபவத்தை உணர்ந்து அந்தக் கேசவனின் திருநாமங்களை யார் உச்சரிக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான நியமங்களுடன் யாக யக்ஞங்களைச் செய்கிற பலன் கிடைக்கும்.
 
கலியுகத்திலே கேசவன் திருநாமம் ஒலிக்கிற இடத்தின் அருகிலேயே கலிபுருஷன் வரமாட்டான்.
 
ஹரி என்ற திருநாமத்திற்கே பாபங்களை ஹரிப்பவன் என்பது பொருள்.
 
நாம ஜபத்திற்கு என தனியெ நேரம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. தினசரி நாம் பண்ணக் கூடிய காரியங்களைச் செய்யும் போதே பகவானது திருநாமத்தைச் சொல்லலாம்.
 
காய்கறி நறுக்கும் போதும், சமையல் செய்யும் போதும் பெண்கள் பகவானது நாமத்தைச் சொல்வது கடினமில்லையே.
 
அலுவலகம் செல்ல பஸ்ஸிலோ, ரயிலிலோ பயணிக்கும் போது நாம ஜபம் செய்யலாமே. வெட்டி அரட்டையைத் தவிர்க்கலாமே!
 
பகவான் கட்டிப் பொன்போலே பகவான் நாமமோ பொன் ஆபரணம் போல என்பது மட்டுமல்ல. அவன் அணியும் ஆபரணங்கள் பல பலவே. அவன் பேரும் பல பலவே.
 
அவனது ஆபரணங்களைப் போன்றே அவனது திருநாமங்களும் அபரிமிதமானவை.
 
ஸஹஸ்ரநாமத்தில் வரக்கூடிய திருநாமங்கள் அனைத்தும் “கௌனானி” அதாவது பகவானுடைய திருக்கல்யாண குண விசேஷங்களைச் சொல்லக்கூடிய நாமாக்கள்.
 
சிறிய கண்ணாடி பெரிய உருவைக் காட்டுவது போல எம்பிரமானதுபெருமைகளை இந்த சின்னச் சினன் திருநாமங்கள் காட்டுகின்றன.
 
ஸஹஸ்ரநாம ஜபம் என்றே விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைச் சொல்வதைக் கூற வேண்டும். பாராயணம் என்ற வார்த்தையை விட ஜபம் என்ற சொல்லே பொருத்தமானது.
 
ஸஹஸ்ரநாமம் என்பது எல்லா தெய்வங்களுக்கும் இருந்தாலும் லலிதா ஸஹஸ்ரநாமமும், விஷ்ணு ஸஹஸ்ரநாமமும்தான் அதிகம் பாராயணம் செய்யப்படுவது இதில் ஸஹஸ்ரநாமம் என்று பொதுவாகச் சொன்னால் அது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை மட்டுமே குறிக்கும்.

- மணியன்