ஹெலென்ஷ்பர்க்கின் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம்!
இந்து கோவில்களுக்கு மிக பிரசித்தம் பெற்றது இந்த ஹெலென்ஷ்பர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம். அவுஸ்திரேலியாவில் அமைந்திருக்கும் இத்திருக்கோவில் மலைகளுக்கு மேல் கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் இருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு தீவிற்குள் இருப்பது போன்றும், காடுகளுக்கு நடுவினில் இருப்பதும் போன்ற உணர்வு மக்களுக்கு ஏற்படுகின்றது.
ஆகம விதிகளின் படி கட்டப்பட்டுள்ள இத்திருக் கோவில் இந்துக்கள் எதிர்பார்ப்பது போல பொதுவாக ஒரு கடவுள் என்பவர் நந்தவனத்திற்குள், அழகிய நதிக்கரை அல்லது கடற்கரை ஓரம், அல்லது சிறு மலைகளுக்கு மேலாக காட்சியளிப்பார். இங்கே அந்த அனைத்து சிறப்பம்சங்களுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம் அமைந்திருப்பது அழகிற்கு அழகு சேர்ப்பது போல இருக்கின்றது.
ஸ்ரீ வெங்கடேஷ்வரர் இத்திருக்கோவிலில் ஸ்ரீ லக்ஷ்மி தேவியுடன் கம்பீரமாய் காட்சியளிக்கின்றார். இத்திருக்கோவில் பக்தர்கள் 1978 ஆம் ஆண்டு திட்டமிட்டு கோவிலை முறைப்படி, இந்துக்களின் சாஸ்திரங்களின்படி ஸ்ரீ வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மகா லக்ஷ்மி, ஸ்ரீ ஆண்டாள் மற்றும் மகா கணபதி ஆகிய அனைத்து பீடங்களுக்கும் 1985 ஆம் ஆண்டு மகா கும்பாபிசேகம் செய்து கோவில் திறக்கப்பட்டது.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்வார்கள், அதாவது கோவில் கோபுரத்தை யார் அன்றாடம் தொழுது வணங்குகின்றார்களோ அவர்கள் 10 கோடி புண்ணியங்களை பெற்று செல்லும் பாக்கியவான்கள் என்றும் இந்து மதம் சொல்கின்றது. அதன்படி இத்திருக்கோவில் விஷ்ணுவுக்காக அமைக்கப் பெற்ற ராஜ கோபுரத்தோடு கம்பீரமாய் காட்சியளிக்கின்றது. இக்கோவிலுக்கு நான்கு பிரகாரங்கள் அமைந்துள்ளது.
அனைத்துமே இந்துக்களின் ஆகம விதிகளின்படி பக்தர்களின் உதவிகள் மற்றும் இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானத்தின் உதவியோடும், நன்கொடை களோடும் இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அவூஸ்திரேலியா நாட்டுப் பக்தர்கள் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் இருந்து இத்திருக்கோவிலுக்கு நன்கொடைகள் அளிக்கப்பட்டு கோவில் சிறப்பாய் அமைந்திருக்கின்றது.
கோவிலில் இருக்கும் அர்ச்சகர்கள் அனைவரும் சாஸ்திர சடங்குகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களுக்கு சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மற்றும் ஆங்கிலம் என்று அனைத்து மொழிகளும் தெரியும். அதனால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு பக்தர்கள் வந்தாலும் அவரவர் மொழிகளுக்கு ஏற்ப இவர்கள் பூஜை செய்வதற்கு காத்திருக்கின்றார்கள்.
கோவிலில் சிவன் மற்றும் பெருமாளுக்கு என்று தனித்தனி சந்நிதிகள் இருப்பதாலும், பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும், அனைத்து சிவா, விஷ்ணுக்குரிய பூஜைகள் செவ்வனே நடைபெற்று வருகின்றது.
ஒவ்வொரு வியாழக்கிழமை கோவிலில் உள்ள அனைத்து சந்நிதிகளும் மலர்களாலும், அலங்கார பூச்செண்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதனை உள்ளூர் பெண் பக்தர்களே செய்து வருகின்றார்கள்.
மலர்களால் சூழப்பட்ட தெய்வங்கள் ஒவ்வொன்றும் பிருந்தாவனத்திற்கு நடுவினில் தெய்வங்கள் இருப்பது போன்ற உணர்வினை அளிக்கும் காட்சி பக்தர்கள் மனதிற்குள் ரம்மியத்தை கொடுக்கும்.
கோவிலுக்கு உள்ளேயே முதலுதவி சிகிச்சை, தாய்-சேய் அறை, கலை அரங்கம், குழந்தைகள் அரங்கம், மற்றும் திருமண மண்டபம் என்று கூடுதல் கட்டிடங்களும் அங்கே அமைந்திருக்கின்றன.
ஸ்ரீ வெங்கடேஷ்வரா, மகா லக்ஷ்மி, சந்திர மௌலீஷ்வரர், திரிபுரசுந்தரி அம்பாள், நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர் சந்நிதி, நவக்கிரகங்கள், துர்காம்பிகா, ராமபிரான், ஆண்டாள் தேவி, கிருஷ்ணர், பிரம்மன், ஆஞ்சநேயர், கருடதேவன், சுதர்சனன், விஸ்வக்சேனா, குரு தட்சிணாமூர்த்தி மற்றும் சண்டிகேசன் சன்னிதிகள் தனித் தனியாக அமைந்துள்ளன.
இங்கே அமைந்திருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி சன்னிதியில் அம்பாள் சோழர் காலத்து அமைப்பின்படி சிவப்புத் தாமரையில் தாமரை பூக்களை கைகளில் வைத்திருப்பது போல தனியாக காட்சி தருகின்றாள்.
ஸ்கந்த சஷ்டி ஸ்ரீ சுப்பிரமணியருக்கு என்று நடக்கும் பூஜை, இவ்வாறாக கோவிலில் நடக்கும் முக்கிய பூஜைகளைப் பற்றிய அறிவுறுத்தலும் பூஜைகளைப் பற்றிய விளக்கமும் ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகின்றது.
எந்த மதத்தை சார்ந்தவர்களும் கோவில் மற்றும் பூஜைகளின் அருமை பெருமைகளைப் பற்றி தெரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
பவித்ர உத்சவம், கார்த்திகை சோமவாரம், அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மகர சங்கராந்தி, தைப்பூசம், பொங்கல், கருட உத்சவம், பௌர்ணமி, மகா சிவராத்திரி, ராம நவமி, சகஸ்ர கலச அபிசேகம், துர்கா பூஜா, நவகிரக பூஜைகள், குரு பூஜை என்று ஒவ்வொரு சந்நிதிக்கும் ஒவ்வொரு நாளும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
பூஜைகள் மட்டுமல்ல அதற்குரிய விளக்கங்களும் அறிவிக்கப்பட்டு சிறப்பாய் செய்கின்றார்கள். இந்தியாவில் இருப்பது போலவே பரிகார பூஜைகளும் இங்கே நடத்தப்படுகின்றன. வெங்கடேஸ்வரன், மகாலட்சுமி, சிவன், பார்வதி, விநாயகப் பெருமான், சுப்பிரமணியர், நவக்கிரக பூஜைகள், தோஷ நிவர்த்தி பூஜைகளும் செவ்வனே நடைபெற்று வருகின்றது.
அனைத்து பரிகார பூஜைகளும் முறைப்படி, சாஸ்திரங்களின்படியே செய்து முடிக்கப் படுகின்றது. இங்கே உள்ள பெருமாள் அல்லது விநாயகனுக்கு சிறப்பு பூஜைகளுக்கு உங்களது பெயரினை நீங்கள் பரிந்துரைத்தால் அதற்கு அவர்கள் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தாருக்கும் சேர்த்து ஒரு வருடத்திற்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் அபிசேகம் செய்வார்கள், உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு சிறப்பு மந்திரப் பயிற்சி கொடுக்கின்றார்கள்.
இது தவிர வருடம் முழுவதும் நடக்கும் பூஜை புனஸ்காரங்களில் உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் பெயருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்யப்படும். இதற்கு அவூஸ்திரேலியா நாடு மட்டுமல்ல இதர நாட்டு இந்து பக்தர்களிடம் இருந்து மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
தென்னிந்திய நாட்டு மக்களின் உணவு வகைகளை இத்திருக்கோவில் உணவகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அந்த நாட்டிலேயே பிறந்த குழந்தைகளுக்கு இந்திய நாட்டு கோவில் மற்றும் சாஸ்திர சடங்குகளில் பரீட்சயம் இருக்காது என்பதற்காகவே இத்திருக்கோவில் அனைத்து வழிகளிலும் இந்துக்களின் மேன்மையை உயர்த்திக் காட்டிக் கொண்டிருக்கின்றது.