அமெரிக்காவின் டெக்சாஸ் நகரத்தின் ராதாகிருஷ்ணா ஆலயம்!

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரத்தின் ராதாகிருஷ்ணா ஆலயம்!

இந்து மதம் தழுவியுள்ள வெளிநாடு வாழ் மக்கள் உலகமெங்கிலும் பரந்த அளவில் வசித்து வருகின்றார்கள். இவர்களின் ஆன்மீக தேடலுக்கும் பாரம்பரிய குடும்ப சடங்குகளுக்கும், பண்டிகைக்கால கொண்டாட்டங்களுக்கும் ஒரு ஆலயம் என்பது மிகுந்த அத்தியாவசிய தேவையாகின்றது. இந்த அடிப்படை தேவையை உணர்ந்து கொண்ட வெளிநாடு வாழ் இந்து சமயிகள், “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்ற தத்துவ கருத்தை மனதிலே இருத்தி அவர்கள் வாழுகின்ற இடத்திலே அழகான அற்புதமான ஆலயத்தை எழுப்பி விடுகின்றார்கள். இவ்வாறு செய்வதன் மூலமாக தம்முடைய “அன்னை தேசத்தை” தாம் வாழுகின்ற அன்னிய பூமிக்கு கொண்டு வந்து விடுகின்றார்கள். இப்படியாக பிற தேசங்களில் எழுப்பப்பட இந்து ஆலயங்கள் அவர்களின் எல்லாவிதமான ஆன்மீக தேடல்களுக்கும் விடையாக அமைகின்றது என்றால் அது மிகையாகாது. இதைத் தவிர ஜாதி, இனம், மொழி என்ற வேற்றுமைகளும் நீங்கப் பெற்று இந்து மகாஜனங்கள் என்ற சங்கமத்திலே அவர்கள் ஆழ்ந்து விடுகின்றார்கள், அதனால் வரும் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் ஒருசேர அனுபவிக்கின்றார்கள்.

அமெரிக்காவில் ஆஸ்டின் நகரத்தின் தென்மேற்கில் மழை பாங்கான இடத்தில் ராதாமாதவ் தாம் எனப்படுகின்ற ராதாகிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது. அமெரிக்காவில் இருக்கின்ற இந்து ஆலயங்களிலும் ஆசிரமத்திலும் இதுவே மிகப் பெரியது என சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பக்தர்களையும் வருகையாளர்களையும் இந்த ஆலயம் வரவேற்றுக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு செய்யும் போது அவர்களின் பின்புலம் ஏதும் கருதாது அவர்களை ஆலயத்தின் மதச் சேவைகள், குடும்ப விழாக்கள் மற்றும் ஆன்மீக பண்டிகைகளுக்கு மனமுவந்து வரவேற்கின்றது. அதே சமயம் இதர ஒத்த மத அமைப்புகளுக்கு தகுந்த ஆதரவு அளித்து தர்மகைங்கரியங்களுக்கு உதவி செய்து இதர மதங்களுக்கிடையேயான உறவை வலுப்படுத்துகின்றது. ராதாகிருஷ்ணருக்கான பக்தியை அர்ப்பணித்து பக்தர்களின் உத்வேகத்தை அதிகப்படுத்துவதே இந்த ஆலயத்தின் பிரதான நோக்கமாக விளங்குகின்றது. 

 
ராதாமாதவ் தாம் எனப்படுகின்ற இந்த அழகான இந்து ஆலயம் கிருஷ்ண பகவானுக்காக உருவாக்கப்பட்டதாகும். இது அமெரிக்காவின் டெக்சாஸ் என்ற நகரில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை “பார்சன தாம்” என்றும் அழைக்கின்றார்கள். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண பகவானின் பிறந்த நாளான “ஜன்மாஸ்தமி” திருவிழா மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. பக்தியின் பாதையானது ஆன்மாவின் பயணத்தில் ராதாகிருஷ்ணரை நோக்கியதாக இருக்கின்றது என ஆலய நிர்வாகத்தால் இங்கு வருகை தரும் பக்தர்களுக்கு எடுத்துச் சொல்லப்படுகின்றது.
 
இந்த ஆலயம் 1990-ஆம் ஆண்டு பிரகாஷானந்த் சரஸ்வதி என்பவரால் பார்ஷனா தாம் என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய ஆலயங்களைப் போலவே இந்த ஆலய கட்டுமானத்துடன் இந்து சமய ஆகம விதிகள் முழுவதுமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்டமாய் எழுப்பப்பட்ட டெக்சாஸின் இந்த ஆலயம் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கின்ற மற்ற ஆலயங்கள் போலவே எல்லாவிதமான வசதிகளையும் கொண்டிருக்கின்றது. 2011-ம் ஆண்டில் இந்த ஆலயத்தின் பெயர் ராதாமாதவ் தாம் என மாற்றியமைக்கப்பட்டது. இந்த ஆலய நிர்வாகம் ஒரு அறங்காவலர் குழுவினால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்த குழுவின் தலைவராக திரு.ராஜ்கோயல் என்பவர் பணியாற்றி வருகின்றார். டெக்சாஸ் நகரத்தை பொறுத்தம்ட்டிலும் கூட இந்த ஆலயம் மிகப் பெரியதும் பரந்த பரப்பளவை கொண்டதாகவும் உள்ளது. 
 
ராதாமாதவ் தாம் ஆலயத்தின் மூலமாக மதச் சடங்குகள், கல்வி பணிகள், தர்ம கைங்கரியங்கள் முதலியவை மேற்கொள்ளப்படுகின்றன. பல இலவச கல்வி திட்டங்களை இந்த ஆலயத்தின் நிர்வாகம் செயல்படுத்தி வருகின்றது. மேலும் இந்த ஆலய நிர்வாகம் 2014 ஏப்ரலில் சிறந்த பொதுச் சேவைக்காக நெல்சன் மாண்டலா அமைதி விருதினை பெற்றுள்ளது என்பது பெருமைக்குரியதாகும். கிருஷ்ணரின் பிருந்தாவனத்தில் உள்ளது போலவே இங்கும் தெய்வ சிற்பங்கள் மிக அற்புதமாகவும் தத்துரூபமாகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆலயக் கட்டுமான பணிகள் வடஇந்திய, தென்னிந்திய நவீன கட்டிட கலை அம்சங்களை கொண்டிருக்கின்றது. தொன்னூறு அடி உயரமுள்ள இந்த ஆலயத்தின் குவிமாடம் வெள்ளை மற்றும் நீல சலவை கற்களாலும் தங்கத்தாலும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் ராஜகோபுரம் பாரம்பரிய முறைப்படி எழுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவும் கூட சலவைக்கல்லால் செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் உட்புறத்தில் சிற்ப வேலைகள் அனைத்தும் 15 கைத்தேர்ந்த தென்னிந்திய கலைஞர்களால் செய்யப்பட்டதாகும். 
 
தூண்களிலும் மேற்கூரைகளிலும் அழகான உருவங்களை மயில்கள் மற்றும் மலர்களின் அடிப்படையிலும் செய்துள்ளார்கள். இந்த ஆலயத்தின் மொத்த பரப்பளவாக 35,000 சதுர அடி இருக்கின்றது. ஆலயத்தின் கட்டுமானத்தில் 84 தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு சேதம் ஏதுமின்றி நிலைத்து நிற்கும் அளவிற்கு ஆலயக் கட்டுமான பணிகள் விசேட வழிமுறைகளில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மல்லிகை, ரோஜாக்கள் மத்தியில் மயில்கள் உலாவும் நந்தவனமும் இந்த ஆலயத்தில் இடம் பெற்றுள்ளது. பண்டிகை காலங்களில் வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கும் விழாவை கண்டு களிப்பதற்கும் சுமார் 8,000 பக்தர்கள் ஒரே நேரத்தில் இங்கு வந்து சேருகின்றார்கள். ஞாயிற்று கிழமைகளில் காலை 11.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை விசேட ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதன் பின்பு வருகின்ற அனைத்து பக்தர்களுக்கும் உணவு பரிமாறப்படுகின்றது. 
 
ராதாமாதவ் தாம் ஆலயம் டெக்சாஸ் நகரத்தில் வசிக்கின்ற இந்து சமய மக்களுக்கு ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்கின்ற விதத்தில் ஒரு வரப்பிரசாதமாய் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. 

- ஜெயா நாகேந்திரன்