பாகிஸ்தானில் பழைமைப் பெருமைமிகு அனுமன் ஆலயம்!

பாகிஸ்தானில் பழைமைப் பெருமைமிகு அனுமன் ஆலயம்!

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிஜி, மலாக்கா, இந்தனோசியா ஆகிய நாடுகள் அல்லாத பிற தொலைதூர நாடுகளில் வசித்து வரும் இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் தமக்காக பெருமுயற்சி செய்து தேடிக் கொள்ளும் அத்தியாவசிய தேவையானது எப்போதும் ஒரு நல்ல ஆலயமாகவே இருந்து வருகின்றது.
 
ஒரு குறிப்பிட்ட பகுதியில், வெளிநாடுகளில் வசிக்கின்ற இந்துக்கள் சக குடியிருப்போரின் முழு ஒத்துழைப்புடன்  தகுதியானதொரு இடத்தை தேர்வு செய்து கொண்டு, போதுமான நிதியாதாரத்தை உருவாக்கிக் கொண்டு நல்லதொரு இந்து ஆலயத்தை ஆகம விதிகளின்படியும், இந்து சமய ஆச்சாரங்களின்படியும் எழுப்புகின்றார்கள். இந்த இந்து ஆலயங்கள் அவர்களின் அனைத்து அதாவது வழிபாட்டு தேவைகள், குடும்ப வைபவங்கள், இந்து பண்டிகைகள், ஆலய விழாக்கள் தொடர்பான எல்லாவிதமான அடிப்படை ஆன்மீகத் தேவைகளும் பூர்த்தி செய்வதாக அமைகின்றது. வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்து மக்கள் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று”, கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற ஆன்மீக கோட்பாடுகளை ஒரு போதும் மறப்பதில்லை. இவர்கள் எழுப்புகின்ற ஆலயங்களே இதற்கு சான்றாக விளங்குகின்றன. 
 
இப்படியானதொரு புகழ்மிக்க பழைமைமிகு ஆலயம் தான் பாகிஸ்தான் தேசத்தில் கராச்சி என்னும் இடத்தில் அமைந்துள்ள பஞ்சமுகி அனுமன் ஆலயமாகும். இந்த ஆலயம் கட்டப்பட்டு ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகள் ஆனதாக ஆலயத் தலவரலாறு தெரிவிக்கின்றன. மேலும் இவ்வாலயம் பாகிஸ்தான் தேசத்தில் இன்றும் இருந்து வரும் இந்து வழிபாட்டு தலங்களில் மிகப் பழைமையானதாகவும் கருதப்படுகின்றது. கராச்சி நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பஞ்சமுகி அனுமன் மந்திரை பல ஆண்டுகளுக்கு பின்பு புதுப்பிப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள் பெரும் சோதனைகளை சந்திக்க வேண்டியதாயிற்று. அத்துடன் ஆலயம் அமைந்துள்ள இடத்தின் பெரும் பகுதிகளை இட ஆக்கிரமிப்பாளர்கள் எடுத்துக் கொண்டு ஆலயத்தை நிர்வாகித்து வந்தவர்களிடம் தொடர்ந்து சச்சரவில் ஈடுபட்டு வந்தார்கள். இருந்த போதிலும் பல ஆண்டுகளாக மக்களால் வழிபட்டு வந்த இந்த அனுமன் தலத்தை இந்த பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் அயராத மனத்திடத்துடன் புனரமைப்புச் செய்ய வேண்டும், புதிய வடிவுடன் ஆலயத்தை உருவாக்கி இனி வரும் காலங்களிலும் வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் கடைசி வரை போராடினார்கள். இந்த ஆலய புனரமைப்புக்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டுவதிலும் பக்தர்கள் போராட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். 
 
பாகிஸ்தானில் கராச்சி நகரத்தில் அமைந்துள்ள பஞ்சமுகி அனுமன் ஆலயத்தை இரண்டு வருடங்களில் புனரமைப்புச் செய்து கும்பாபிசேகம் நடத்துவதற்கு அந்த பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பக்தர்களும் ஆலயத்தை சார்ந்திருக்கும் அன்பர்களும் பேராவல் கொண்டனர். இருந்த போதிலும் குறிப்பிட்ட காலத்தில் ஆலயத்தின் புனரமைப்பு வேலைகள் பல்வேறு இடையூறுகளின் காரணமாக முடிக்கப்பட முடியவில்லை. இரண்டாயிரத்தி அறுநூற்று ஒன்பது சதுரடி பரப்பளவு கொண்ட அனுமன் ஆலயத்தின் பெரும் பகுதிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு மற்றவர்களால் எடுத்துக் கொளள்ப்பட்டு விட்டன. ஆனாலும் இழந்த இடங்களை நீதிமன்றங்களின் மூலமாக மீட்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை ஆலயம் சம்பந்தப்பட்ட அன்பர்கள் தொடர்ந்து எடுத்து வருகின்றார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். 
 
பல இடர்பாடுகளுக்கு மத்தியிலும், இந்த ஆலயப் பணிகளை கவனித்து வரும் ஸ்ரீ ராம்நாத் மகராஜ் என்பவர் சிறது சிறிதாக ஆலயப் பணிகளை முடிப்பதற்கு உறுதி பூண்டுள்ளார். மிகப் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தை, சுவர்கள் மற்றும் வழிபாட்டு அறைகள் முதலியவற்றை அதே பழைய பொருட்களை கொண்டே சீர் அமைக்க வேண்டும் என்றும் இவர் விரும்புகின்றார். ஆலயத்தைச் சார்ந்த இடங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ளப்படடு இருந்த போதிலும், இப்போதிருக்கும் மீதமுள்ள இடத்தில் வழிபாடு சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களும் ஆர்வத்துடன் செய்து வரப்படுகின்றன. 
 
மிக விரைவில் மீதமுள்ள இடங்கள் மீட்கப்படும் போது பக்தர்கள் தங்குவதற்கு மைய மண்டபம், பாதணிகள் வைப்பதற்கான அறை முதலியவற்றை செய்து முடிக்க எண்ணியுள்ளோம் என்றும் திரு.ராம்நாத் மகராஜ் தெரிவிக்கின்றார். இந்த ஆலயத்தை முழுமையாக புனரமைப்பு செய்து நல்ல முறையில் காண்பதற்கு 4.5 மில்லியன் தொகை தேவைப்படும் எனவும் இதன் ஒரு பாதிப் பகுதியை நாங்கள் ஏற்கனவே நன்கொடைகள் மூலம் ஏற்படுத்தி விட்டோம் என மகராஜ் தெரிவித்துள்ளார். 
 
- அபிதா மணாளன்