மலேசியாவின் மகாமாரியம்மன் ஆலயம்!

மலேசியாவின் மகாமாரியம்மன் ஆலயம்!

மலேசியாவில் வாழ்ந்து வரும் இந்து சமயத்தை தழுவிய மக்கள் தங்களுக்கென ஆலயங்களை மலேசியா நாட்டில் பல இடங்களிலும் எழுப்பி அவற்றில் சிவன், பெருமாள், விநாயகர், முருகன், அம்மன் ஆகிய தெய்வங்களை பிரதிஷ்டை செய்து வழிபாடுகளை பல்லாண்டு காலமாக மேற்கொண்டு வருகின்றார்கள். மலேசியாவை பொறுத்தமட்டில், கோலாலம்பூரில் அமைந்திருக்கின்ற மகாமாரியம்மன் ஆலயமே மிகவும் பழைமையானது என்று சொல்லப்படுகின்றது. 1873-ஆம் ஆண்டில் இந்த ஆலயம் சைனா டவுனுக்கு அருகில் உள்ள ஜலான்பந்தர் என்னும் இடத்தில் முதன் முதலாக எழுப்பப்பட்டுள்ளது. ஜலான்பந்தர் என்னும் இடம், ஆரம்பத்தில் “ஹை ஸ்டிரீட்” என அழைக்கப்பட்டது. துவக்க காலங்களில் இந்த ஆலயம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சார்ந்ததாகவே இருந்தது. 1968-ஆம் ஆண்டில் ஆலயத்திற்கான புதிய கட்டுமானப் பணி தென்னிந்திய பாணியிலான ராஜகோபுரத்துடன் கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவிலிருந்து மலேசியா சென்று வியாபார வர்த்தக காரணங்களுக்காக குடி பெயர்ந்த இந்துக்களின் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் பண்பாடு மற்றும் தேசிய பாரம்பரியத்தின் முக்கியத்தை நிலை நாட்டும் வகையிலும் இந்த ஆலயம் இயங்கி வருகின்றது. 

 
மலேசியாவின் மகாமாரியம்மன் ஆலயம் முதன் முதலாக 1873-ஆம் ஆண்டில் தம்புசாமி பிள்ளை என்பவரால் தமது குடும்ப வழிபாட்டிற்காக மட்டுமே துவங்கப்பட்டது. ஆனாலும் 1920-ஆம் ஆண்டில் இதே ஆலயம் இந்து மக்களின் பொது வழிபாட்டு பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது. மேலும் இந்த ஆலயத்தின் பரிபாலனம் ஒரு அறக்கட்டளைக்கு உட்படுத்தப்பட்டது. இவ்வாலயம் தான் மலேசியாவில் இயங்கி வருகினக்ற மிக பழைமையான ஆலயமாகும். மேலும் மலேசியாவில் மிகுந்த சுபிட்சத்துடன் இயங்கி வரும் ஆலயமும் இதுவேயாகும். கோலாலம்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் முதலில் இயங்கி வந்த இந்த ஆலயம் பிற்காலத்தில் அதாவது 1885-ஆம் ஆண்டில் தற்போது இருக்கும் இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆலயத்தின் கட்டுமான பணிகள் 1968-ஆம் ஆண்டில் முழுவதுமாக முடிக்கப்பட்டது.  ஆலய பணிகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட பின்பு ஆலயத்தின் கும்பாபிசேகம் 1973-ஆம் ஆண்டில் மிக சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது.
 
முழுவதுமாக தென்னிந்திய பாணியில் எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தில் ஐந்து கோபுரங்கள் இடம் பெற்றுள்ளன. பிரமிடு அமைப்பில் எழுப்பப்பட்டுள்ள 75 அடி உயரமுடைய நுழைவு வாயிலில் அற்புதமான இந்து கடவுள்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட தலைமை சிற்பியான எஸ்.டி.முனியப்பா என்னும் சிற்பி 228 சிறிய சிற்பங்களை சிறப்பான முறையில் கோபுரத்தில் அமைத்துள்ளார். ஆலயத்தின் அமைப்பானது ஒரு மனித உடலை ஒத்து இருக்கின்றது. ஒரு மனிதர் தன் முதுகை கீழே வைத்து தலையை மேற்குப்புறமும் கால்களை கிழக்கு புறமாக வைத்து படுத்திருப்பதை போல அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் ஐந்து நிலை கோபுரமானது படுத்திருக்கும் மனிதனின் காலடியை ஒத்திருக்கின்றது. இது மனிதர்களுக்கான பொருள் உலகத்தையும் ஆன்மீக உலகத்தையும் ஒத்து நோக்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் பிரதான தெய்வமாக ஸ்ரீ மகாமாரியம்மன் விளங்குகின்றாள். ஆலய பிரார்த்தனை கூடத்தின் கூரையானது மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
 
விநாயகர், முருகன், மகாலட்சுமி ஆகியோரின் சிலைகளும் பரிவார தெய்வங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆலயத்தில் உள்ள வெள்ளி ரதம் மிகவும் புகழ்மிக்கதாக இருக்கின்றது. தை பூச நாட்களில் இந்த வெள்ளி ரதம் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகின்றது. இந்த ரதத்தில் வள்ளி தெய்வானை ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்கள். ஆலய நிர்வாகிகள், ஆலயத்தின் கும்பாபிசேகத்தை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவதில் மிகவும் உறுதியாக இருக்கின்றார்கள். பத்து மலை சுப்பிரமணியர் ஆலயத்தை நிர்வாகிக்கும் அதே அரங்காவலர் குழுவே ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தையும் பரிபாலணம் செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
 
தீபாவளி, பொங்கல், தைப்பூசம் ஆகிய முக்கியமான இந்து பண்டிகை தினங்களில் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்கு பக்தர்களின் வருகை பெரிய அளவில் இருக்கும். இந்த ஆலயம் இந்த பகுதியில் வசித்து வரும் இந்து மக்களின் அனைத்து ஆன்மீக தேவைகளையும் சிறப்பாக பூர்த்தி செய்து வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். 
 
- அபிதா மணாளன்