கனடா டொரண்டோவின் ஸ்ரீ துர்கா ஆலயம்!

கனடா டொரண்டோவின் ஸ்ரீ துர்கா ஆலயம்!

கல்வி, வியாபாரம், வர்த்த உறவுகள், தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் சம்பந்தமாக இந்து மதத்தை தழுவியுள்ள மக்கள் உலகம் முழுவதிலும் விரவியிருக்கின்றார்கள். இவர்கள் இவ்வாறு ஒரு காரணத்தோடு பிறிதொரு நாட்டிற்குச் சென்று குடியுரிமை பெற்று வாழும்போது வசதிகள் குறைவானாலும், அதிகமானாலும் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசிய தேவையானதும் ஆன்மீக உலகில் முக்கியமானதுமான தெய்வ வழிபாட்டினை ஒரு போதும் மறப்பதில்லை. ஆன்மீக தேவைகளான இறைவவழிபாடு, கூட்டு பஜனைகள், பண்டிகை கொண்டாட்டங்கள், விழாக்கால ஒருங்கிணைப்புகள் முதலியவற்றை அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிறைவேற்றிக் கொள்ள உண்டான இடம் தான் ஒரு இந்து ஆலய வளாகம். எனவே, இயற்கையாகவே ஏற்படும் இடற்பாடுகள் பலவற்ற்றிக்கு இடையேயும் இதர நாடுகளில் வாழுகின்ற இந்து மக்கள் நல்லதொரு ஆலயத்தை தமக்கானதாக ஆகம விதி முறைகளுக்குட்பட்டு நிர்மாணித்துக் கொள்கின்றார்கள். பொதுவாகவே, உள்ளூரிலிருந்து வெளிநாடு சென்று ஒரு முக்கிய விடயத்தை கையிலெடுக்கும் போது அங்குள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மிகுந்த ஒற்றுமையுடன் செயல்படுவதை நாம் காணலாம். 

வட அமெரிக்க நாடான கனடாவில் பல்வேறு பூர்வீகங்களை கொண்ட பல்வேறு மக்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாகவே சிறு சிறு குழுக்களாக வந்து குடியமர்ந்திருக்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய பூர்வீகத்தை கொண்ட குஜராத்திகளாகவும், பஞ்சாபியர்களாகவும், இலங்கையைச் சார்ந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்களைப் போலவே பிஜி, கயானா, டிரினிடேட் மற்றும் டொபேகோ ஆகிய இடங்களிலிருந்தும் கனடா வந்து குடியேறியிருக்கின்றார்கள். 1983-ம் ஆண்டில் இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு பிரச்சினைகளின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உலகின் பல்வேறு நகரங்களுக்கு குடி பெயர்ந்து சென்றார்கள். அவர்களில் கனிசமானவர்கள் கனடாவிலும் குடியேறினார்கள். கனடாவை பொறுத்தமட்டில் இலங்கையிலிருந்து வந்தவர்கள் டொரண்டோ மற்றும் கிரேட்டர் டொரண்டோ ஆகிய இடங்களில் அதிகமாக இருக்கின்றார்கள். 

இதே போல் கனடா நாட்டின் தளர்வு செய்யப்பட்ட குடியேற்ற விதிகளின் காரணமாக, இந்து மதத்தை தழுவிய மக்கள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மொரிசீயஸ், பிஜி, டிரினிடாட், கயானா மற்றும் கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளான கென்யா, உகாண்டா, டன்சானியா, தென் ஆப்ரிக்கா ஆகியவற்றிலிருந்து கனடாவின் பெரு நகரங்களான மான்ட்ரியால், டொரோண்டா, கல்காரி மற்றும் வேன்குவர் ஆகிய நகரங்களில் குடியேறினார்கள்.  கடந்த 20 ஆண்டுகளில் கனிசமான இந்துக்கள் நேபாளத்திலிருந்தும் கனடா நாட்டிற்கு குடி பெயர்ந்து உள்ளார்கள். தற்போது கனடா தேசம் முழுவதும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இந்து மதத்தை தழுவிய மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலமாக அறியப்பட்டுள்ளது. 

நம்முடைய இதிகாசங்களில் தெரிவிக்கப்பட்டது போல், சக்தி வழிபாடானது கலியுகத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. இந்துக்கள் தமக்குரிய சக்தியை அன்னை துர்காவாக உருவகப்படுத்துகின்றார்கள். அந்த சக்தியை வழிமுறைப்படுத்துவதற்கு உரிய தெய்வமாக சிவலிங்கத்தை போற்றுகின்றார்கள். இந்த தத்துவத்தை உணர்த்துவதாகவே அர்த்தநாதீஸ்வரர் வடிவம் இருக்கின்றது. இதர ஆலயங்களுக்கு மத்தியில், கனடா டொரண்டோவில் துர்கா ஆலயம் ஒன்று சிறப்பாக அமையப் பெற்றுள்ளது. இந்த ஆலயம் அமைந்துள்ள இடத்தை துர்கேஸ்வரம் என்று அழைக்கின்றார்கள். வட அமெரிக்க பகுதியை பொறுத்தமட்டில் இந்த துர்கா ஆலயமே மிகச் சிறப்பாக கும்பாபிசேகம் செய்யப்பட்ட ஆலயமாக விளங்குகின்றது. இந்த ஆலயத்தின் கும்பாபிசேகம் நடைபெற்ற போது 108 நாட்களுக்கு 50 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அர்ச்சகர்கள் 33 ஹோமங்களை நடத்தினார்கள். தனி யாக சாலை அமைக்கப்பட்டு 90 மில்லியன் அர்ச்சனைகளோடு கூடிய நவகோடி அர்ச்சனைகள் இந்த ஆலயத்தில் மட்டுமே முதன்முதலாக 2003-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை செய்து முடிக்கப்பட்டது. 

இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் வெவ்வேறு மாறுப்பட்ட பின் புலம்களை கொண்ட பக்தர்களாக இருக்கின்றார்கள். இந்த ஆலய வழிபாடுகள், வட இந்திய வழிபாட்டு முறைகளுக்கும், தென் இந்திய வழிபாட்டு முறைகளுக்கும் இலங்கை பாரம்பரியத்திற்கும், மலேசிய சிங்கப்பூர் பாரம்பரியத்திற்கும் மற்றும் மேற்கிந்திய பக்தர்கள் பாரம்பரியத்திற்கும் ஈடு கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. சுமார் 3 லட்சத்திற்கு மேற்பட்ட டொரண்டோவைச் சுற்றிலும் வசித்து வரும் இந்து சமயியிகள் இந்த துர்கா ஆலயத்தை வழிபாட்டு தலமாக பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த ஆலயம் அமையப் பெறுவதற்கு மதிப்பிற்குரிய இந்து மத தலைவர் கனசுவாமி தியாகராஜ குருக்கள் முன்னோடியாக இருந்துள்ளார். இவர் கனடாவின் இந்து மத பீடத் தலைவராகவும், இந்து மத திருமணங்களை பதிவு செய்யும் திருமண பதிவாளராகவும், ஜோதிட ஆலோசகராகவும், ஆலய கட்டுமான ஆலோசகராகவும் மற்றும் வேத ஆசிரியராகவும் இருக்கின்றார். 

டொரண்டோவின் ஸ்ரீ துர்கா ஆலயத்தில் ஆன்மீக விழிப்புணர்வு, அமைதிக்கான சமய சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள், ஆன்மீக அடையாளம் மற்றும் புரிதல்கள், சிறப்பான வாழ்விற்கு அடிகோலுதல், வேற்றுமைகளில் மனித ஒற்றுமையை காண்பது. மற்றவரை உடன்பிறப்புகளாய் மதிப்பது, இந்து கலாச்சார அறிவு மற்றும் நம்பிக்கைகளை வளர்த்து கடவுளை உணரச் செய்வது ஆகியவை பிரதான கோட்பாடுகளாக கடைப்பிடிக்கப்படுகின்றன. இங்கு வரும் பக்தர்களுக்கு, தீர்க்க முடியாத நோய்களை குணப்படுத்தியதாலும், கடுமையான குடும்ப பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாலும், பக்தர்களின் வாழ்க்கையில் நம்ப முடியாத அதிசயங்கள் துர்க்கை அன்னையின் அருளால் நிகழ்ந்ததாலும் இந்த ஆலயத்தின் துர்க்கை அம்மனை “அம்மா”என்றும், ஆலயத்தை “நம்பிக்கை”யின் ஆலயம் என்றும், அதிசயங்களின் ஆலயம் என்றும் பக்தர்கள் போற்றி வருகின்றார்கள். 

- அபிதா மணாளன்