அருள்மிகு வைத்தியநாதர் ஆலயம்

அருள்மிகு வைத்தியநாதர் ஆலயம்

“புள்ளருக்கு வேளூர்” எனப் பெயர்பெற்ற திருத்தலம் வைத்தீஸ்வரன் கோவில். தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் சீர்காழிக்கு அருகில் உள்ள இத்தலத்தில் புகையிரத நிலையமும் பேருந்து வசதிகளும் உள்ளன. இத்தலத்து இறைவன் பெயர் அருள்மிகு வைத்தியநாதர் அம்பாள் பெயர் அருள்மிகு தையல்நாயகி இத்தலத்தில் பல அற்புதங்களைச் செய்து வரும் முருகக் கடவுளின் பெயர் ஸ்ரீ செல்வமுத்துக்குமாரஸ்வாமி.

 
சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதருக்குக் கண்பார்வை மங்கிவிட்டது. இறைவனை மனமுருகி வேண்ட, கனவில் முத்துக் குமாரஸ்வாமி தோன்றினார். தன் சந்நிதிக்கு வந்து பாடும்படி பணித்தார். தீக்ஷிதர் இத்தலம் வந்து சித்தாமிர்தத்தடம் என்ற புகழ்பெற்ற திருக்குளத்தில் நீராடி ஸ்ரீ செல்வமுத்துக் குமாரஸ்வாமி சந்நிதியில் வந்து வணங்கி, முருகப் பெருமானை மனங்கனிந்து வேண்ட, அவரது கண்மலர் மலர்ந்தது.
 
தீக்ஷிதர் கீழே விழுந்து வணங்கி நன்றிப் பெருக்கோடு உள்ளம் உருகி, “முத்துக்குமாரையனே, பக்தர்க்கிரங்கும் மெய்யனே” என்ற கீர்த்தனையைப் பாடி வழிபட்டார். காணாடு காத்தானைச் சேர்ந்த ஒரு வணிகர் சொல்லொணாத் தொழுநோயால் வாடினார். ஸ்ரீ முத்துக்குமாரஸ்வாமியை நினைத்து தன் துயர்தீர்க்கும்படி வேண்ட, முருகன் அவர் கனவில் தோன்றி சித்தாமிர்தத் தீர்த்தம் கொணர்ந்து ஒரு மண்டலம் நீராடி பின் தம் சந்நிதிக்கு வரும்படி அருள் பாலிக்க, அவ்வாறே செய்த வணிகருக்குத் தொழு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. இப்படி செல்வ முத்துக்குமாரஸ்வாமியின் மகிமைகளை விளக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நினைவு கூறுகிறார்கள் இத்தலத்து அன்பர்கள்.
 
டெல்லி நவாப்பின் படைத்தலைவன் தீராத வயிற்றுவலியால் துன்புற்று, செல்வமுத்துக்குமார ஸ்வாமியின் பேரருளால் குணமாகி, பெருமகிழ்ச்சியடைந்து அப்பெருமானுக்கு முத்துப்பந்தல் ஆலவட்டம், தண்டு, குடை, கொடி, சாமரம் போன்றவற்றைச் சமர்ப்பித்து விசேஷ நாட்களில் முருகப் பெருமானுக்கு தீபாராதனை முடிந்ததும் தனக்காக மற்றொரு தீபாராதனை செய்யும் படியும் கேட்டுக் கொண்டு அதற்காக அறக்கட்டளை நிறுவிச் சென்றான் என்பதும் வழிவழியாக வரும் ஒரு செவி வழிச் செய்தியாகும்.
 
குமரகுருபர அடிகளுக்கு, “பொன் பூத்த குடுமி” என அடியெடுத்துக் கொடுத்து பிள்ளைத்தமிழ் பாடும்படி செய்த பெருமான் இவர். முருகப் பெருமான் தாரகாசுரனோடு நடத்திய போரில் இரு தரப்பிலும் பலர் பலத்த காயமடைந்தார்கள். மந்திரமும், தந்திரமும், மருந்துமாகிப் பிறவிப் பிணி முதலிய எல்லாப் பிணிகளையும் தீர்த்துப் பேரின்பம் அளிக்கக் கூடியவர் பரமேஸ்வரன் அல்லவா? போரில் காயமடைந்தவர்களுக்கு வைத்தியம் செய்து குணப்படுத்த வேண்டமாய் முருகன் தமது அம்மையப்பரை நினைத்து வேண்டினார். சிவபெருமான் வைத்தியநாதராகவும் அன்னை உமாதேவி தையல் நாயகியாகவும் இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். காயம் பட்ட புண்களுக்கு மருத்துவம் செய்த தலம். அமிர்த சஞ்சீவி, வில்வமரத்து அடிமண் பயன்படுத்தப்பட்டன. ஆகவேதான் இத்தலத்து இறைவன் தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும் வைத்தீஸ்வரனாகத் திகழ்கிறார்.
 
4448 வகை நோய்கள் தீர்க்கப்பட்ட தலம் இது என்று கூறுகிறது தல புராணம் இத்தலத்தில் தன்வந்திரிக்கும் ஒரு சந்நிதி உள்ளது. இத்தலத்தில் பதினெட்டுத் தீர்த்தங்கள் உள்ளன. தேவியின் சந்நிதானத்தில் இருக்கும் சித்தாமிர்தத் தீர்த்தம் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. கிருத யுகத்தில் காமதேனு இறைவனுக்குப் பாலபிஷேகம் செய்தபோது அந்தப் பால் பெருகிக் கலந்தமையால் கோக்ஷீர தீர்த்தம் என்றும், துவாரபர யுகத்தில் ஜடாயு மூழ்கி வழிபட்டதால் ஜடாயுதீர்த்தம் என்றும், கலியுகத்தில் சித்தர்கள் இறைவனுக்கு அமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்தபோது அவ்வமிர்தம் இதில் கலந்தமையால் சித்தாமிர்தத் தீர்த்தம் என்று வழங்கப்படுவதாகவும் தல புராணம் விவரிக்கிறது. 
 
இது அங்காரகக்ஷேத்திரம். இங்கு அங்காரகனுக்குத் தனிச் சந்நிதியும் உற்சவ விக்கிரகமும் உள்ளன. ஆறாத ரணம், மூட்டு வலி போன்ற வியாதிகளுக்கு குணமளிப்பவர் அங்காரகன் என்ற செவ்வாய் ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால் பூமி, செல்வம், செல்வாக்கு அபரிமிதமாகப் பெறலாம், கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அங்காரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுப் பரிகாரம் செய்கிறார்கள். செவ்வாய்கிழமை தோறும் மாலையில் ஆட்டுக்கடா வாகனத்தில் அங்காரகன் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வருவது வழக்கம்.
 
கோயிலில் ஜடாயு குண்டம் ஒன்று உள்ளது. ஜடாயுவின் வேண்டுகோள்படி ஸ்ரீ இராமர் இத்தலத்தில் ஜடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததால் இப்பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள். குண்டத்திலுள்ள திருநீற்றை எடுத்துப் பூசிக்கொள்வதால் பலவிதமான பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. குண்டத்தின் மேல் ஸ்ரீ இராமபிரான், லக்ஷ்மணன், விசுவாமித்திரர், வசிஷ்டர், ஜடாயு ஆகியோரின் உருவங்கள் உள்ளன. வைத்தீஸ்வரன் கோவில் ஒரு பிரார்த்தனைத் தலம் மாவிளக்கு ஏற்றவும், குழந்தைகளுக்கு முடி இறக்கி காணிக்கையளிக்கவும் பக்தர்கள் இங்கு கூடுகிறார்கள்.
 
- K.குருமூர்த்தி