டெக்சாஸ் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில்

டெக்சாஸ் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில்

தலவரலாறு: 
 
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹோஸ்டவுன் பகுதியில் அமைந்துள்ளது அமெரிக்காவின் மூன்றாவது மிகப் பெரிய இந்துக் கோயிலான அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலாகும். 
 
அமெரிக்காவின் முதல் அம்மன் கோயிலும் மிகப் பெரிய இந்துக் கோயில்களில் ஒன்றுமான மீனாட்சி அம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம் 1977-ம் ஆண்டு ஜூலை 27-ம் திகதி நடத்தப்பட்டது. இக்கும்பாபிஷேக விழாவிற்கு முந்தைய பூஜைகள் ஜூன் 18 முதல் ஜூன் 20-ம் திகதி வரை நடத்தப்பட்டது. சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், யாகங்கள் போன்றவைகள் நடத்தப்பட்ட இவ்விழாவில் சாஸ்திர முறையிலான வேத பாராயணங்களும் முழங்கப்பட்டன. மகாகணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்களும் யாகங்களும் நடத்தப்பட்டன. மேலும் ஹோஸ்டவுன் பகுதியில் உள்ள அனைத்து மொழிகளை சார்ந்த இந்தியர்களால் பஜனைகளும் பாடப்பட்டன. 
 
இதில் மொத்தம் 14 ஹோமங்களும்,15 வகையான பூஜைகளும் நடத்தப்பட்டன. அதன் பின்னர் யந்திர-தேவதை பிரதிஷ்டை அஷ்ட பந்தனம் எனப்படும் யந்திர மற்றும் விக்ரக பிரதிஷ்டை செய்யப்பட்டது. எட்டு விதமான மூலிகைகளைக் கொண்டு விக்ரகங்களும், தங்கம் மற்றும் தாமிரத்தினால் ஆன யந்திரங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதன் நடத்தப்பட்ட மகா கும்பாபிஷேகம் மற்றும் பூஜைகளில் 2000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கு பற்றினர்.
 
1977-ம் ஆண்டு ஹோஸ்டவுன் பகுதியில் வாழ்ந்த 30 இந்துக் குடும்பங்களை சேர்ந்தோர் ஒன்றிணைந்து கலாச்சார மற்றும் ஆன்மீக நோக்கங்களை எதிர்கால சந்ததியினருக்கு இட்டுச் செல்வதற்காக ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினர். அதற்காக 1978-ம் ஆண்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இதற்காக நன்கொடைகளும் பெருமளவில் குவிந்தன.
 
மீனாட்சி கோயிலுடன் கணபதி கோயில் ஒன்றும் அமைக்க திட்டமிடப்பட்டு 1978-ம் ஆண்டு மே மாதம் ஐந்து ஏக்கர் காணி பரப்பளவில் நிலம் பெறப்பட்டது. பின்னர் கணபதி கோயில் கட்டி முடிக்கப்பட்டு 1979-ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
 
இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஏழு சிற்பிகள் மற்றும் நியூயார்க்கை சேர்ந்த ஓவியர்களைக் கொண்டு மீனாட்சி அம்மன் கோயிலின் திருப்பணிகள் நடத்தப்பட்டன. இதற்கான நன்கொடைகள் பெருமளவில் குவிந்ததுடன் மட்டுமல்லாது நியூயார்க்கின் இந்திய ஸ்டேட் வங்கி வழங்கிய கடன் தொகையைக் கொண்டு 1982-ம் ஆண்டு இக்கோயிலின் பணிகள் முடிவடைந்தன. அதன் பின்னர் சிறிய அளவில் கட்டப்பட்டிருந்த கணபதி ஆலயம் பிரகாரம் மற்றும் ராஜகோபுரத்துடன் பெரிய அளவில் 1985-ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது.
 
இந்திய மக்களால் கட்டப்பட்ட அமெரிக்காவின் மூன்றாவது மிகப் பெரிய கோயில் இதுவே ஆகும். பிட்ஸ்பர்க்கில் உள்ள வெங்கடேஷ்வரர் ஆலயம், நியூயார்க்கில் உள்ள மகாகணபதி ஆலயம் ஆகியவற்றிற்கு பிறகு அமெரிக்காவில் கட்டப்பட்ட மிகப்பெரிய இந்துக் கோயிலான மீனாட்சி அம்மன் ஆலயம் கலாச்சார மற்றும் சமுதாய சின்னமாக மட்டுமல்லாது, அமெரிக்காவில் உள்ள இந்தியர்களிடையே தியாகம் மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதாகவும் அமைந்துள்ளது.
 
சுமார் பத்தாயிரம் இந்திய குடும்பங்கள் வாழும் ஹோஸ்டவுன் பகுதியில் முற்றிலும் திராவிட முறைப்படி அமைக்கப்பட்டுள்ள மீனாட்சி அம்மன் ஆலயம் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. 
 
இக்கோயிலில் மூன்று முக்கிய சன்னதிகள் அமைந்துள்ளன. மத்தியில் மீனாட்சி அம்மன் சன்னதியும், வலப்புறம் வெங்கடேஷ்வரர் சன்னதியும், இடப்புறம் சுந்தரேஸ்வரர் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. சிவ சன்னதியின் வெளிப்புறம் கணேசர் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.
 
முக்கிய தெய்வங்கள்:
 
மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் (சிவன்), வெங்கடேஷ்வரர், பத்மாவதி தாயார், விநாயகர், முருகன், நவகிரகங்கள் போன்றவை இக்கோயிலில் முக்கிய தெய்வங்களாக போற்றப்படுகின்றன. கோயில் முகவரி. Sri Meenakshi Temple, Houston,Texas, USA. இ-மெயில் letters@hindu.org. பேக்ஸ் : 1-808-822-4351. இணையதள முகவரி:  http://www.hinduismtoday.com