சிங்கப்பூரின் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்

சிங்கப்பூரின் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்

நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய வழிபாட்டுத் தலங்களையும், ஆலய உற்சவங்களையும் ஏற்படுத்தினார்கள். நிலங்களைத் தானமாகக் கோயிலுக்கு எழுதி வைத்தார்கள். அப்படிப்பட்ட பெருமைக்குரிய கோவில்களில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலும் ஒன்று.

1800 - ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்ரீ நிவாச பெருமாள் கோயில் தோற்றம் கண்டது. இந்த ஆலயம் உருவாக்கத்திற்கும், தோற்றத்திற்கும் வழிகோலியவர்கள் சமூக தலைவர்களாக இருந்த அருணாச்சலப் பிள்ளை, கோட்ட பெருமாள்பிள்ளை, இராமசாமி பிள்ளை, அப்பாசாமி பிள்ளை, சொக்கலிங்கப்பிள்ளை, இராமசாமி ஜமீந்தார் ஆகியோர். தாய்நாட்டை விட்டு வந்திருந்த போதிலும், இறைவழிபாட்டை மறவாது கோயில் கட்டி, தங்களின் கலாச்சாரம், மதம், மொழி ஆகிவற்றை மறவாது ஒழுகி நிற்கத் துடித்த காலம். தங்களின் சக்திக்கேற்ப ஆங்காங்கே சிறு குடில்களாகக் கோவில்களை அமைத்து வழிப்பட்டார்கள்.

 
அப்போது வைணவர்களுக்கு ஒரு சிறப்பான கோயில் வேண்டும் என்றபொது நல எண்ண உந்தலில் 1855-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 20-ம் நாள் திரு. நரசிங்கம் என்பவருக்குக் கிழக்கிந்தியக் கம்பெனி சிராங்கூன் சாலையில் 2 ஏக்கர் 19 போல்ஸ் பரப்புள்ள நிலத்தை இருபத்தொன்று ரூபாய் மூன்று அணாவுக்கு விற்று நிலத்தை அவருக்கு உரிமையாக்கிக்கொடுத்தது.(அப்போது சிங்கப்பூரில் இந்திய நாணயம்தான் உபயோகித்தலில் இருந்து இருக்கிறது)
 
வாங்கப்பட்ட நிலத்தில் எழும்பிய கோயிலுக்கு ''நரசிம்ம பெருமாள்கோயில்'’ என்று பெயர் வழங்கப்பட்டது. கோவிலுக்குப் பக்கத்தில் ஒருகுளமும் இருந்தது. கோவிலுக்குப் போகும்முன் அக்குளத்தில் குளித்து விட்டுதூய்மையுடன் சன்னதி அடைந்து வழிபட்டு வந்தனர்.
 
குளம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. சிறிய கோவிலாக இருந்த போதிலும் பக்தர் கூட்டம் அதிகரிக்க, பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கோவில் பெரிதாக இருக்கவேண்டும் என்று அறக்காப்பாளர்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசிடம் முறையிட்டார்கள்.
 
அம்முறையீட்டிற்கிணங்க, 25,792 ச.அடி நிலம் $ 25.00 வெள்ளி விலையில் 08-05-1894 ம் ஆண்டு சிராங்கூன் சாலையில் இருக்கும் நரசிங்கப் பெருமாள் கோவில் அறக்காப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.
 
15-08-1912-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியாரிடமிருந்து 3,422 ச.அடிநிலம் 999 ஆண்டுக்கு வருடம் ஒரு வெள்ளி வீதம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. 'நரசிம்ம பெருமாள் கோயில்' என வழங்கப்பட்ட பழைய கோவில் அப்போதே சிராங்கூன் சாலையை முகப்பாகக் கொண்டு அமைந்திருந்தது. 'நரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சநேயர், மகாலெட்சுமி விக்ரங்களுடன், கோவிலின் வெளியில் அரசமரத்தடியில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள்.
 
இக்கோயில் 1907-ம் ஆண்டு முதல் முகமதிய இந்து அறக்கட்டளை வாரியத்தினால் மேலாண்மை செய்யப்பட்டு,பின்னர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
 
1952-ம் ஆண்டு, மிகவும் மோசமான நிலையில் இருந்த கோவிலைத் திருத்தி அமைத்துப் புது கட்டிடம் ஒன்றை எழுப்ப வாரியம்முடிவு செய்தது. மேலும் கோவிலுக்குள் நுழையும் வழியைத் தவிர சிராங்கூன் சாலையின் முகப்பில் அமைந்திருக்கும் நிலத்தில் கடைகளுடன் கூடிய வீடுகள் கட்டி 99 வருடக்குத்தைக்கு விடவும் வாரியம் எண்ணியது.
 
அத்திட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பின், இப்போது இருப்பதைவிடக் கோவில் சிறியதாக அமைந்திருக்கும் என்பதுடன் கோவில் உத்தேசக் கட்டிடங்கள் பின்புறத்தை முகப்பாகவும் கொண்டு அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது பொது மக்கள் அத்திட்டத்திற்கு எதிர்ப்புக் தெரிவித்ததால், திட்டத்திற்கு அங்கீகாரம் பெறநீதி மன்றத்திற்கு விண்ணப்பம் செய்த மனு விசாரணைத் தேதியின்றி ஒத்திவைக்கபட்டது.
 
இருப்பினும், 1957-ம் ஆண்டு ஜூன் 30-ம் நாள் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற உபயக்காரர்களின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வாரியம் தயாரித்த புதுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்திட்டத்தை 1961-ம் ஆண்டு பிப்ரவரியில் உயர் நீதிமன்றமும் அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து உள்நாட்டு குத்தகைகாரர்களைக் கொண்டு கோயில் கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டது.
 
1963-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து வரவழைக்கப் பட்ட சிற்பிகளைக் கொண்டு சிற்ப வேலை நடைபெற்றது. இராஜ கோபுரம், பிள்ளையார் சந்நிதி, இவற்றைத் தவிர தற்சமயமுள்ள கோவில் 1966-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
 
நரசிங்கப் பெருமாள் கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலாக பெயர் மாற்றம் பெற்றது. நரசிங்க அவதாரம் எடுத்த விஷ்ணுவின் உருவத்திற்குப் பதிலாகத் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை ஒத்த திருவுருவத்தைக் கோவிலில் மூலவராக வைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் கருஞ்சிலையும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது.
 
ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் வளாகத்திலேயே கோவிந்தசாமி பிள்ளை அவர்களால் ஒரு கல்யாண மண்டபம் கட்டப்பட்டு, 1965-ம் ஆண்டு சிங்கப்பூர் முதல் அதிபர் இஞ்சே யூசோப் பின் இஸ்ஸாக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
 
கல்யாண மண்டபம் திருமணங்கள், கூட்டங்கள் இன்னும் பல்வேறு சமய சமூக நிகழ்ச்சிகளை நடத்து வதற்காக இன்று பயன்படுத்தப்படுகிறது.
 
ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் 1966-ம் ஆண்டு புதிப்பித்து கட்டப்பட்டுக் கும்பாபிஷேகம் முடிவுற்றவுடன் கோவிலுக்கு இராஜ கோபுரம் கட்டும் திட்டத்தில் நாட்டம் செலுத்தி அதனை நன்கொடை மூலம் கட்டி முடித்தனர்.
 
1975-ம் ஆண்டு கும்பாபிஷேத்தைச் சிறப்பாக நடத்த வைணவ ஆகமங்களில் தேர்ச்சி பெற்ற அலங்கார பட்டர் தமிழகத்திலிருந்து வந்து நடத்தினார். 41 நாட்கள் மண்டலாபிகஷேகத்தில் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருமதி. எம்.எஸ். சுப்புலெட்சுமி, புலவர் கீரன் அவர்களும் வருகை புரிந்தனர்.
 
1978-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் சிங்கப்பூர் தேசிய நினைவு சின்னங்கள் பாதுகாப்பு வாரியத்தால் அரசாங்கத்தால் அங்கீரிக்கப்பட்டது. கோவில் கோபுரம், விமானத்தில் உள்ள சுதை சிற்பங்களாகத் தாயார், ஆண்டாள், பெருமாள்  பொழியுடன் காட்சியளிக்கிறார்கள். 
 
சன்னிதானத்தில் மூலவராக பெருமாள், ஆண்டாள், தாயார் ஆகியோரின் உற்சவ திருவுருவங்கள் ஏகாதசி மண்டபத்தில் வைக்கப்பட்டு அன்றாட பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. கொடி மரம் இழைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து வந்த செம்புத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள சிறந்த நுட்பவாதிகளைக் கொண்டு இராஜ கோபுரத்திற்கான கதவு செய்யப்பட்டுள்ளது.

புரட்டாசி சனி: 
 
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். ஏழுமலை வெங்கடாசலபதி இந்த புரட்டாசி மாதத்தில்தான் மக்களை நெறிபடுத்தியதாகக் கூறப்படுகிறது.
 
சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய தினம். அன்று கோயிலில் அதிக கூட்டமிருக்கும். புரட்டாசி சனியில் அன்னதானம் செய்யும் வழக்கம் பெருமாள் கோயிலில் 1900-களின் தொடக்கத்திலிருந்தே உள்ளதாக வாய்மொழி வரலாறு உண்டு. இன்று வரை புரட்டாசி சனியில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
 
- நெல்லை ஆசி