துர்கேஸ்வரம் டொரண்டோ, கனடா

துர்கேஸ்வரம் டொரண்டோ, கனடா

"செவ்வாய்க்கிழமை ராகுகாலத்துல துர்க்கையை கும்பிட்டுட்டு வாங்க.” உடனே மாலை 3.00 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கோயிலுக்குப் போவார்கள் அல்லவா? ஆனால் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ராகுகால நேரம் மாறுகிற, துர்க்கை கோயில் கனடா டொரண்டோ நகரில் இருக்கிறது

 
உலக அமைதிக்காக 2003 முதல் 2006 வரை ஒன்பது கோடி முறை அதாவது நவகோடி அர்ச்சனை செய்திருக்கும் உலகின் ஒரே கோயில் எது? ஈஸ்வரம் என்ற பெயரில் சிவாலயங்கள் இருப்பது தெரிந்திருக்கும். துர்கேஸ்வரம் என்ற பெயரில் ஓர் ஆலயம் இருப்பது கனடா டொராண்டோ நகரில் இருக்கிறது. துர்கேஸ்வரம் என்றே அழைக்கப்படும் துர்க்கையின் திருக்கோயில். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொல்வார்கள் அல்லவா! அதன் உண்மையான அர்த்தத்தை அயல்நாட்டுப் புனிதத் தலங்களுக்குச் செல்லும்போது அனுபவப்பூர்வமாக உணர முடியும். வெளிநாட்டில் புலம் பெயர்ந்தாலும், அந்நாட்டையும் தாய்மண் போல் பாவித்து, அந்நாட்டு மக்களுடன் வேறுபாடு இல்லாமல் உறவாடி இந்திய நாட்டுப் பொக்கிஷமான பக்தி மார்க்கத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, இந்து மதத்தின் உன்னதத்தை நாடுகள் தோறும் பரவச் செய்கின்றனர் நம் நாட்டு மக்கள். அந்நாடுகளின் அரசும் மக்களின் இறை நம்பிக்கைக்கு முழு சுதந்திரம் அளிப்பதை அடிப்படைக் கொள்கையாக அமல் படுத்தியிருப்பது சிறப்பானது, உயர்வானது.
 
அந்த வகையில் கனடாவில் பக்தி மணம் கமழும் கோயில்கள் பல அமைத்து இந்து மதத்தின் பெருமையைப் பரப்பும் கனடா வாழ் தமிழர்களின் ஆன்மிகப் பங்களிப்பு போற்றப்பட வேண்டியது. கனடா நாட்டின் பெருநகரம், டொரொன்டோ. அந்நகரில் ஆயிரக்கணக்கான இந்தியர் வசிக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களும் நிறைய இருக்கிறார்கள், ஹைடெக் நகரான டொரொன்டோவில் சாக்தம் எனப்படும் தேவி வழிபாடு நடக்கும் ஸ்ரீ கோயில்தான் துர்க்கையம்மன். ஆதிசங்கரர் வகுத்துக் கொடுத்த சாக்தம் என்னும் வழிபாட்டின்படி ஆதிபராசக்தியே முதல் தெய்வம். அபிராமி பட்டர் தமது அபிராமி அந்தாதியில் அம்பிகை வழிபாடு சதாசிவ வழிபாட்டுக்கு முந்தையது என்று கூறுகிறார். அம்பிகையையே மூல தெய்வமாக வழிபடும் கோயில் இது.
 
இந்த துர்க்கையன்னை கனடா நாட்டுக்கு எப்படி வந்தாள்? அதைப் பார்க்கும் முன், துர்க்கை என்ற பெயர் அம்பிகைக்கு எப்படி வந்தது? துர்க்கமன் என்றொரு அசுரன் இருந்தான். ஆணவம் அட்டூழியத்தின் மொத்த உருவம் அவன். தேவர், முனிவர், மனிதர்கள் மட்டுமல்ல, வாயில்லா ஜீவன்களான விலங்குகளும் பறவைகளும் கூட தப்பவில்லை அவன் கொடுமையிலிருந்து, பிரம்மா, விஷ்ணு, சிவனார் கூட திகைத்துப் போனார்கள். அவன் அக்கிரமத்துக்கு எப்படி முடிவு கட்டுவது என்று தெரியாமல் ஓடி ஒளிய ஓர் இடமும் இல்லாமல், காத்திடும் அரண் எது என்றும் தெரியாமல் திக்குத் தெரியாத காட்டில் கண்ணைக் கட்டி விட்டதுபோல் இருந்தார்கள் எல்லோரும். முடிவில், அம்பிகையைச் சரண் அடைந்தார்கள். உலக உயிர்கள் எல்லாம் அவள் குழந்தைகள் அல்லவா? பறவை தன் குஞ்சுகளை சிறகினால் அணைத்துப் பாதுகாப்பது போல் தன் ஆயிரம் கரங்களையும் நீட்டி உயிர்கள் அனைத்தையும் அணைத்து அரணாக்கிக் காத்தாள் தேவி. அதோடு தானே சகல தேவர்களின் அம்சமும் கொண்டவளாக வடிவெடுத்துப் போய் அந்த அசுரனையும் அழித்தாள்.
 
துர்க்கம் என்றால் கோட்டை அல்லது அரண் என்று அர்த்தம். அரணாக இருந்து காத்ததால் அம்பிகை துர்க்கை ஆனாள். துர்க்கமனை அழித்ததாலும் துர்க்கை என்ற பெயர் ஏற்பட்டது. துர்க்கை இங்கே கோயில் கொண்டது எப்படி? அயல்நாடுகளில் கோயில்கள் கட்ட பேருதவியாக இருந்த இலங்கையைச் சேர்ந்த தியாகராஜ குருக்கள் தான் துர்க்கையம்மனுக்கு கனடா நாட்டில் ஒரு கோயில் எழுப்பலாம் என்று முதல் முயற்சி எடுத்திருக்கிறார். 1991-ல் சிறிய இடத்தில் தொடங்கப்பட்ட கோயில், பக்தர்களின் நன்கொடையில் 1994-ல் இப்பொழுதுள்ள புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கோயில் கட்ட ஆகம வாஸ்து விதிகளின்படி சரியான இடமா என்று ஆராய்ந்த பின்னரே இந்த இடத்தை வாங்கியிருக்கிறார்கள். கனடா நாட்டு அரசும் ‘தடையில்லை’ எனச் சான்று கொடுக்க, 2001-ல் கும்பாபிஷேகக் கொண்டாட்டம் நடந்திருக்கிறது. சிலைகள் யாவும் இந்தியாவில் பூஜைகள் செய்து தருவிக்கப்பட்டவை. கோயில் கோபுரம் எழுப்பவும் இந்தியாவைச் சேர்ந்த சிற்பிகளே வந்து தங்கி பணியாற்றியிருக்கிறார்கள்.
 
எழிலான கோயிலுக்குள், மனம் முழுக்க தாய் துர்க்கையை நினைக்க கொடி மரம், பலி பீடம் தரிசித்து மண்டபத்தினுள் தெய்வீகத் தூய்மை என்பார்களே, அப்படி ஒரு தூய்மை நம்மை வியக்கவைக்க, தெய்வீக அதிர்வுகள் நம்முள் பரவி சிலிர்க்க வைக்கிறது. மூல சன்னதியில் முத்துநகை மின்ன, முழு நிலவுபோல் முகம் பிரகாசிக்க கண்கள் கருணையைச் சுரந்து நம்மைக் கனிவுடன் நோக்க, நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள் துர்க்கை. அபய வரதம் காட்டி, சங்கு சக்கரம் ஏந்தி, ‘அரவணைத்துக் காத்திட நான் இருக்கிறேன் வா’ என்று அழைக்கும் தாயாக தரிசனம் தரும் துர்க்கையைப் பார்க்கப் பார்க்க நம் கண்கள் பனிக்கின்றன. அவள் அழகையும், அருளையும் ஒரு சேரப் பருகும் ஆவல் நம்மைப் பற்றிக் கொள்ள அங்கிருந்து நகர மனம் இன்றி அவள் பாதம் பற்றி நின்று மனம் உருகி வழிபடுகிறோம். கண்வழி ஈர்த்து அவள் அழகை நம் அகத்திரையில் பதித்துக் கொண்டு, நகர மனம் இன்றி முப்பெரும் தேவியரில் மற்ற இருவரான அலைமகள், கலைமகளை அடுத்து தரிசிக்கின்றார்கள்,
 
தொடர்ந்து காயத்ரிதேவி, பைரவர், ஐயப்பன், ஆகியோரது சன்னதிகளும் இங்கு அமைந்துள்ளன. 
 
வரும் பக்தர்கள் பலர்,அவர்களது நம்பிக்கையின்படி பைரவருக்கு வடைமாலை சாத்துகிறார்கள். உலக அமைதிக்காக 2003 முதல் 2006 வரை நவகோடி அர்ச்சனை செய்த உலகின் முதல் கோயில் என்ற சிறப்பையும் இக்கோயில் பெறுகிறது.
 
தொகுப்பு: பாலசிவா

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!