மிதுன ராசிக்கான பலன்கள்

மிதுன ராசிக்கான பலன்கள்

மிதுனராசிக்கு நல்ல மாற்றங்களையும், ஏற்றங்களையும் தருகின்ற ஆண்டாக 2017-ம் ஆண்டு அமையும்.

வருடத்தின் பிற்பகுதியில் குருபகவான் ஐந்தாமிடத்திற்கு பெயர்ச்சியாவது உங்களுக்கு நல்ல பலன்களை தரும் என்பதாலும், வருடத்தின் இறுதி வரை சனி நல்ல இடத்தில் இருந்து கொண்டிருக்கிறார் என்பதாலும் இந்த ஆண்டு சாதகமற்ற அமைப்புகள் எதுவும் மிதுனத்திற்கு இல்லை. குறிப்பாகச் சொல்லப் போனால் 2017 வருடத்தின் ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி வரை ராகுபகவான் மூன்றாமிடத்தில் இருப்பது மற்ற கிரகங்கள் தரும் கெடுதலான அமைப்புகளை தடுத்து நிறுத்தி உங்களுக்கு பெரிய உதவிகளை செய்யும் சகாய அமைப்பு என்பதால் மிதுனத்திற்கு இந்த வருடம் நன்மைகளும், மேன்மைகளும் இருக்கும் என்பது உறுதி.

வருடத்தின் முற்பகுதியில் வேற்று மத, இன, மொழிக்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள், வெளிநாடு, வெளிமாநில வேலை மற்றும் தொழில் அமைப்புகள், மற்றும் அந்நிய இன நண்பர்கள், பங்குதாரர்கள் மூலம் ராகுபகவான் ஆதாயங்களை தருவார். குறிப்பாக இஸ்லாமிய நண்பர்கள் மூலம் மிதுனத்தினருக்கு நன்மைகள் இருக்கும். அதேபோல தற்போது உங்களுக்கு சாதகமற்ற நான்காமிட அமைப்பில் இருக்கும் குருபகவான் செப்டம்பர் மாதம் 12 ம் தேதி மிகவும் நன்மைகளைத் தரும் ஐந்தாமிடத்திற்கு மாறுகிறார். பெயர்ச்சியாகும் ராசியின் பலன்களை முன்கூட்டியே தரக்கூடிய வருடக் கிரகமான குருபகவான் அவரது நல்ல பலன்களை 2017 ஜூலை மாதம் முதலே தரத் துவங்கி விடுவார் என்பதால் இந்த வருடத்தின் பிற்பகுதியில் மிதுன ராசிக்காரர்களின் காட்டில் அடைமழை பெய்யப் போவது உறுதி. குருபகவானது ஐந்தாமிட மாற்றத்தால் இதுவரை தொழில் விஷயங்களிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்களுக்கு இருந்து வரும் அதிர்ஷ்டமற்ற நிலைமைகள் பெரிதும் மாறும். தற்போது கடினமான முயற்சிகள் தேவைப்படும் அனைத்தும் ஜூலைக்குப் பிறகு முயற்சியின்றியே அதிர்ஷ்டத்தினால் நிறைவேறும். குறிப்பாக சொந்த வாழ்க்கையில் சென்ற வருடம் இழப்புகளை சந்தித்தவர்கள், இதுவரை வாழ்கையில் செட்டில் ஆகாதவர்கள் மற்றும் திருமணம், குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு வருடத்தின் பிற்பகுதி சந்தோஷமாக இருக்கும். அதேநேரத்தில் வருடக்கடைசியான அக்டோபர் 26 ந்தேதி சனிப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது.

சனிபகவான் தற்போது இருந்து வரும் நல்ல இடமான ஆறாமிடத்தில் இருந்து குடும்பத்தில் குழப்பங்களை உண்டு பண்ணும் ஏழாமிடத்திற்கு மாற இருக்கிறார். இது மிதுனத்திற்கு நற்பலன் தர இயலாத ஒரு அமைப்புத்தான் என்றாலும் குருவைப்போல சனி முன்கூட்டியே பலன் தருபவர் அல்ல. சனிபகவான் மந்தன் என்பதால் ஒரு ராசிக்கு மாறி மூன்று மாதங்களுக்குப் பிறகே அவரது பலன்களை அளிக்கத் துவங்குவார் என்பதால் சனியின் சாதகமற்ற பலன்களை 2018 ஆம் ஆண்டுதான் நீங்கள் உணரும்படி இருக்கும். இதுவரை வெளிநாட்டுக் குடியுரிமை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் விசா பிரச்னையால் வெளிநாடு செல்லமுடியாமல் சிக்கலில் இருந்தவர்களுக்கும் வெளிநாட்டு வேலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஆகஸ்டு மாதம் முதல் அவர்கள் நினைத்தபடியே செயல்கள் நடந்து நன்மைகள் உண்டாகும். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நீண்ட நாட்களாக உங்களுக்கு மனவருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார். தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இம்முறை மேன்மையான பலன்கள் இருக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இந்த வருடம் கெடுபலன்கள் எதுவும் இராது.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு சிலர் உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். யாருக்கும் ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

வருட இறுதியில் ஏழாமிடத்திற்கு மாறி உங்களின் ராசியைப் பார்க்கப் போகும் சனி உங்களை பிடிவாதக்காரர் ஆக்குவார் என்பதால் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வவாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பணி புரியும் இடங்களில் வீண் அரட்டைகள் வேண்டாம். அது தேவையற்ற மனஸ்தாபங்களுக்கோ, வீண்விரோதத்திற்கோ வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருங்கள்.

வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும்.. உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவது கடினம்.