கும்ப ராசிக்கான பலன்கள்

கும்ப ராசிக்கான பலன்கள்

கும்பத்திற்கு அளவற்ற நன்மைகளை அள்ளித் தரும் ஆண்டாக பிறக்கப் போகும் ஆங்கிலப் புத்தாண்டு இருக்கும். குறிப்பாக இந்த வருடம் நடக்க இருக்கும் மூன்று கிரகப் பெயர்ச்சிகளின் மூலம் ஆனந்தத்தையும், லாபத்தையும் பெறப்போகும் ராசிகளில் கும்பமே முதன்மையானது என்பதால் இனி உங்கள் வளர்ச்சிக்கு தடை சொல்ல எதுவும் இல்லை.

ஆண்டின் பிற்பகுதியில் ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ராகுபகவான் இதுவரை உங்களை தொல்லைபடுத்தி கொண்டிருந்த ஏழாமிடத்தில் இருந்து தனக்கு மிகவும் நல்ல பலன்களை தரும் வலுவான ஆறாமிடத்திற்கு மாறுகிறார். அதேபோல கேதுவும் நன்மைகளைத் தரும் பனிரெண்டாம் வீட்டிற்கு மாறுகிறார். இதன் மூலம் இந்த வருடத்தின் பிற்பகுதியில் இருந்து உங்களுடைய கடன், நோய், எதிர்ப்பு போன்ற அமைப்புகள் வலுவிழக்கின்றன. இதனால் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கும். வருமானம் குறையும் போதுதான் கடன் வாங்க நேருகிறது. இனிமேல் கடன் வாங்கத் தேவையில்லை என்கின்ற நிலை வரும் போது வருமானம் தாராளமாக வரும் என்பதே விதி என்பதால் இந்த வருடப் பிற்பகுதியில் இருந்து கும்பத்தினர் பொருளாதார உயர்வு பெறுவீர்கள். தற்போது ராகுபகவான் மாறப்போவது அவருக்கு விருப்பமான கடக வீட்டிற்கு என்பதாலும் பிடித்த வீடு மூன்று, ஆறு, பதினொன்றாக அமையும் போது அங்கே ராகு வலுவான நன்மைகளைச் செய்வார் என்பதாலும் இனிமேல் உங்களின் வளர்ச்சியை தடுத்து கொண்டிருந்த எதிர்ப்புகள், பொறாமை, போட்டி, அனைத்தும் உங்களின் விஸ்வரூபத்தை கண்டு பயந்து ஒதுங்கி ஓடும் அளவிற்கு உங்களின் எல்லாப் பிரச்சினைகளும் விலகும். ராகு-கேது பெயர்ச்சியை அடுத்து செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் தற்போது சாதகமற்ற எட்டாம் வீட்டில் அமர்ந்து உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றியாகாமல் தடுத்துக் கொண்டிருக்கும் குரு மிகவும் யோகம் தரும் ஒன்பதாமிடத்திற்கு மாறி ராசியை பார்க்கும் நிலை பெறுவார். குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்வது இதுவரை இருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் அமைப்பு என்பதாலும், வருடக் கிரகமான குருபகவான் பெயர்ச்சிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அதன் பலன்களைத் தர ஆரம்பித்து விடுவார் என்பதாலும் இந்த வருட பிற்பகுதியிலேயே உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்க ஆரம்பிக்கும். வலுவான ராகு,கேதுப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு வெளிநாடு, வெளிமாநில தொடர்புகளும் அவற்றின் மூலம் பொருள்வரவும் இருக்கும். அதேபோல குருப்பெயர்ச்சியின் மூலம் வேலை தொழில் இடங்களில் நல்ல பெயரும் கவுரவமும் உங்களுக்குக் கிடைக்கும். எனவே ஏப்ரல் மாதத்தில் இருந்தே உங்களுக்கு படிப்படியாக நற்பலன்கள் நடக்க ஆரம்பிக்கும். அனைத்திலும் மேலாக அக்டோபர் மாதம் 26-ம் நாள் உங்கள் ராசிநாதனான சனிபகவான் மிகவும் யோகம் தரும் அமைப்பான 11-ம் இடத்திற்கு மாறுகிறார். சனியின் இந்த யோகநிலை ஒருவருக்கு 30 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய ஒன்று.சனிபகவானே உங்களின் ராசிநாதனாகவும் இருப்பதால் இந்த சனிப்பெயர்ச்சியின் மூலமும் உங்களுக்கு பெரிய நன்மைகள் கிடைக்கும். எனவே எப்படிப் பார்த்தாலும் 2017-ம் ஆண்டு சிறப்புகளையும், வருமானங்களையும் உங்களுக்கு தரும் என்பது உறுதி. செய்கின்ற தொழிலில் அதிக முயற்சி இல்லாமலேயே நிறைந்த லாபங்கள் இப்போது கிடைக்கும். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அமைப்பில் பண வரவு தற்போது உங்களுக்கு இருக்கும். அலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.