கடக ராசிக்கான பலன்கள்

கடக ராசிக்கான பலன்கள்

கடகராசிக்காரர்களுக்கு 2017-ம் புது வருடம் நற்பலன்கள் அதிகம் உள்ள வருடமாக இருக்கும். பெரும்பாலான ராஜகிரகங்கள் எனப்படும் குரு, சனி, ராகு, கேது ஆகியவைகள் கடந்த சில மாதங்களாக கடகத்திற்கு நல்ல பலன்களைத் தரும் நிலையில் இல்லை.

குறிப்பாக கடந்த ஒரு வருடகாலமாக சென்ற 2016-ம் ஆண்டு முதல் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீட்டில் ராகுபகவான் அமர்ந்து உங்களுக்கு நியாயமாக வரவேண்டிய பணவரவுகளை கூட தடுத்து கொண்டிருக்கிறார். அதேபோல எட்டில் இருக்கும் கேதுவாலும் கடக ராசிக்காரர்கள் குடும்ப விஷயங்களில் நல்லவைகள் எதுவும் நடக்காமலும், சுபகாரியங்கள் எதுவும் இல்லாமலும் தொல்லைகளை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பருவ வயதில் இருக்கும் கடகத்தினரின் திருமணத்தை தடுத்து குடும்பம் அமைவதை தாமதப்படுத்திக் கொண்டிருப்பதே இந்த இரண்டு, எட்டில் இருக்கும் ராகு-கேதுக்கள்தான். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி இந்த தடை அமைப்பு விலகும் விதமாக ராகு-கேதுக்கள் மாறுவதால் இதுவரை கடகத்தினருக்கு இருக்கும் குடும்பச் சிக்கல்கள், திருமணத் தடைகள் இனிமேல் விலகும். அடுத்து எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக நிறைவேற்றி தரும் கிரகமும் தாராளமான வருமானத்தை தருபவருமான குருபகவானும் கடந்த சில மாதங்களாக சாதகமற்ற மூன்றாமிடத்தில் அமர்ந்து உங்களை சோதனைக்குள்ளாக்கி வருகிறார். இந்த மூன்றாமிடத்து குரு இந்த வருடம் செப்டம்பர் மாதம் 12 -ந்தேதி மாறி நான்காமிடத்திற்கு செல்வார். குருபகவானுக்கு நான்காமிடம் நற்பலன்களை தரும் இடமாக சொல்லப்படவில்லை என்றாலும் மூன்றாமிடத்தை விட நான்காமிடம் கெடுபலன்களை தராது என்ற அடிப்படையில் உங்களுக்கு வருட இறுதியில் குருபகவானால் இருக்கும் இடையூறுகள் நீங்கும். மேலும் வருடத்தின் இறுதியான அக்டோபர் மாதம் 26 -ம் நாள் அன்று நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் மிகவும் நன்மைகளை தரக்கூடிய ஆறாமிடத்திற்கு மாறுவது கடக ராசிக்கு ஒரு சிறப்பான அம்சமாகும்.

 

இதன்மூலம் இதுவரை பிள்ளைகள் வழியில் உங்களுக்கு இருந்து வந்த மனக் கஷ்டங்களும், பிள்ளைகளுக்கு கல்யாணம் போன்ற சுப காரியங்களை நடத்தி பார்க்க முடியாமல் இருந்து வந்த மன வேதனைகளும் அடியோடு விலகி குழந்தைகள் மூலம் சந்தோஷமான விஷயங்கள் இருக்கும்.