ரிஷப ராசிக்கான பலன்கள்

ரிஷப ராசிக்கான பலன்கள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2017 வருடம் நல்ல பலன்களையும், பண வரவுகளையும், தொழில் முன்னேற்றங்களையும் கொடுக்கும் வருடமாக இருக்கும். கடந்த சில வருடங்களாக கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத ரிஷபத்தினருக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டு சிறந்த ஆண்டாக இருக்கும்.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18-ம் நாள் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியினால் ராகுபகவான் தற்போது இருக்கும் நான்காமிடத்தில் இருந்து மாறி மூன்றாமிடத்திற்கு வருவது உங்களுக்கு யோகம் தரும் அமைப்பு. ஒரு சிறப்பு அம்சமாக ராகுவிற்கு மிகவும் பிடித்த வீடான கடகத்தில் அவர் நிலை கொள்கிறார் என்பதால் இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு சிறந்த பலன்களும், கேட்கும் இடங்களில் சரியான நேரத்தில் உதவிகள் கிடைத்தலும், அந்தஸ்து, கௌரவம் உயர்தலும் இருக்கும். இளம் பருவத்து ரிஷப ராசிக்காரர்களுக்கு வருடத்தின் பிற்பகுதியில் வெளிநாடு சம்பந்தப்பட்ட வேலைகள் கிடைப்பதும், வெளிமாநிலத்திற்கு வேலை விஷயமாக செல்வதும் அதன் மூலம் நற்பயன்களும் உண்டு. சிலருக்கு தொழில் விஷயமாக இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்வதும், கிறிஸ்துவ, இஸ்லாமிய நண்பர்கள் பங்குதாரர்கள் மூலமாக நன்மைகள் நடப்பதும் உண்டு. இதுவே ஜாதகர் இஸ்லாமியர் அல்லது கிறித்துவராக இருந்தால் அவருக்கு இந்து மத நண்பர்கள் மூலம் மேன்மைகளும் உதவிகளும் இருக்கும். அதேநேரத்தில் தற்போது கண்டகச்சனி எனப்படும் ஏழாமிடத்தில் அமர்ந்திருக்கும் சனிபகவான் வருடத்தின் இறுதியான அக்டோபர் மாதம் 26-ம் நாள் எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டமச்சனியாக மாறப்போவதால், அடுத்த வருடம் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்கள் தோன்ற ஆரம்பிக்கும். பணவரவு குறையும். ஆகவே ஏதேனும் புதிய தொழில்கள் ஆரம்பிப்பதற்கு இந்த வருடம் ஏற்றதல்ல. அஷ்டமச் சனிக்கு முன்பாக சனிபகவான் நம்முடைய மனதைக் குழப்பி புதிய முயற்சிகளில் இறங்க வைத்து அதில் சிக்கல்களை உருவாக்கி தொழிலை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் புலி வாலைப் பிடித்தது போன்ற ஒரு நிலையை உருவாக்குவார் என்பதால் இந்த வருடம் அதிக முதலீடு செய்து புதிய முயற்சிகளை செய்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் ஏதேனும் ஒரு சொத்தை விற்றோ, அடமானம் வைத்தோ, புதிய தொழில் எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். அதேபோல உங்களின் சேமிப்புகளையும் ரிஸ்க்கான துறைகளில் முதலீடு செய்ய வேண்டாம். என்னடா... இந்த வருடத்திற்கு பலன் சொல்லச் சொன்னால் குருஜி அடுத்த வருடத்திற்கு பலன் சொல்லி கொண்டிருக்கிறாரே என்று நினைப்பீர்களேயானால், ஜோதிடம் என்பதே நாளை வருவதை ஓரளவு எடுத்து சொல்லி தற்காத்துக் கொள்ள அறிவுறுத்துவதுதான் என்பதால் அடுத்த வருடம் என்ன நடக்கும் என்பதையும் முன்கூட்டியே சொல்ல வேண்டியதும் ஒரு ஜோதிடரின் கடமைதான். இந்த ஒரு பலனை தவிர்த்து பிறக்க போகும் புத்தாண்டு உங்களுக்கு நல்ல அமைப்புகளையே தரும். வருடத்தின் பெரும்பகுதி நாட்கள் செப்டம்பர் மாதம் 12 ம் தேதிவரை குருபகவான் உங்களுக்கு நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கிறார் என்பதால் அவர் மூலமும் உங்களுக்கு நல்லவைகள் மட்டுமே நடக்கும். உங்கள் உடலும் மனமும் இந்த வருடம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி நல்லவைகள் இப்போது நடக்கும். பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள் என்பது உறுதி.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு நிரந்தரமாக கடன்கள் அடைந்து நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இதுவரை மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் இருந்து வந்த நோய்கள் தீரும்.

ரிஷப ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும் என்பதால் இப்போது ஏற்படும் நன்மைகளால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.