வைகுண்ட ஏகாதசி விரதப் பலன்கள்

வைகுண்ட ஏகாதசி விரதப் பலன்கள்

இயற்கையின் அங்கமாய் திகழும் மாரி என்ற மழை இந்த பூமியை குளிர வைக்கும். அதுவும் மார்கழியில் இந்த குளிர்ச்சியானது பனி படர்ந்த வைகறையில் திரண்டு காணப்பட்டு மக்களின் மனங்களையெல்லாம் குளிர வைக்கும். புண்ணிய நதிகளில் கங்கை, உயர்ந்த மந்திரங்களில் காயத்ரி, புண்ணிய சேத்திரங்களில் காசி போன்று திருமாலின் உன்னத கருணையை போற்றுகின்ற விரதங்களில் தலையாயதாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விரதமாகும்.

மார்கழியில் வரும் ஏகாதசி தினத்தன்று பகல் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து, இரவு கண் விழித்து விரதம் கடைப்பிடிப்பதால் இதர மாத 24 ஏகாதசிகளை காட்டிலும் மார்கழியின் வைகுண்ட ஏகாதசி சிறப்புப் பலன்களை கொடுக்க வல்லதாகும். மனிதர்களில் வாழ்நாளில் ஒரு வருட காலம் என்பது தேவர்களுக்கு வருடத்தில் ஒரு நாளாக கணக்கிடப்படுகின்றது. மார்கழி மாதம் முதல் வைகாசி மாதம் வரை பகலாக கணக்கிடப்பட்டுள்ளது. 
 
மார்கழி மாத தேவ இருட்டு காலத்தில் அதாவது உஷா காலம் என்கின்ற அதிகாலை பொழுதாகிய நான்கு மணி முதல் ஆறு மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் வைகுண்ட வாசல் திறக்கப்படுகின்றது. அவ் வேலையில் ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சியும் திருப்பாவையும் படித்தும் பரந்தமானுக்கு பொங்கல் பிரசாதம் நிவேதனம் செய்கின்றார்கள். வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பரந்தமனாகிய விஷ்ணு பெருமாள் வைகுண்டத்திலிருந்து சொர்க்க வாசல் வழியாக நமக்காக வந்து கருணை மழை பொழிகின்றார் 
 
தால ஜங்காசுரனுடனும் அவன் புதல்வன் மருவாசுரனுடனும் பரந்தாமன் போரிட்டு களைத்து ஒரு குகையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில் விஷ்ணுவின் ஆற்றல் ஒரு தேவப் பெண்ணாக உருவெடுத்து அசுரர்களை தனது ஓங்காரத்தால் பஸ்பமாக்கியது. விஷ்ணு விழித்து விபரம் உணர்ந்து அத்தேவதைக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு, “உன்னை விரதம் இருந்து போற்று வோருக்கு தான் சகல நன்மைகளையும் தருவேன்” என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக் கொண்டார். 
 
எனவேதான், நாமும் இத்தினத்தில் கண்விழித்து விரதம் மேற்கொள்கிறோம். ஏகாதசியன்று, சொர்க்க வாசல் திறந்திருப்பதால், அன்று பிரிகின்ற மனித உயிர்கள் நேராக வைகுண்டம் செல்கின்றன என்பது நமது நம்பிக்கை அதுபோலவே, ஏகாத சியன்று பிறக்கும் குழந்தைகளும், அதீத சக்தி மிகுந்தவர்களாக, சகல செல்வமும் கைவரப் பெறு பவர்களாக விளங்குவர்.
 
ஏகாதசி முந்தய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். மறுநாள் ஏகாதசியன்று அதிகாலை எழுந்து நீராடி, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை ஆலயம் சென்று கண்டு, பரந்தாமன் - லெட்சுமி தேவியுடன் வருவதைப் போற்றி வணங்க வேண்டும். பழம், இளநீர் மட்டும் சாப்பிட்டு இரவு முழுவதும் கண் விழித்து இறை நாமம் சொல்லி மறுநாள் துவாதசி திதியில் (பொழுது விடியுமுன்) விரதம் பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி உளுந்து கண்டிப்பாக சேர்க்கக் கூடாது.
 
துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் மூன்றும் சேர்த்து அல்லது கிடைக்கும் நெல்லிக்காயையாவது உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 
துவாதசி அன்று முதல் நாள் கண் விழித்தவர்கள் அதிகாலையில் குளித்து திருமாலை வணங்கி “ஹரி, ஹரி ஹரி” என மும்முறை கூறி சுண்டைக்காய், நெல்லிக்காய், இதில் கொஞ்சம் எடுத்து பல்லில் படாமல் உண்ண வேண்டும். இதற்கு “பாரணை” (விரதம்) முடித்தல் என்று பொருள்.
 
ஒவ்வொரு ஏகாதசி அன்றும் தனித்தனியாக தானங்கள் செய்யலாம் என்றாலும் அது எல்லாம் வசதியானவர்கள் தானே செய்ய முடியும் என்ற சோர்வு நிலை வேண்டாம். ஒரு பிடி அகத்திக் கீரையை பசுவுக்கு தானமாகக் கொடுங்கள். வசதி உள்ளவர்கள் ஏகாதசி அன்று பசுவும் கன்றுமாக தானம் கொடுங்கள். சகல நன்மையையம் உலகம் உள்ள வரை உங்கள் சந்ததியர் பெறுவர்.
 
அனைத்து விரத நாட்களிலும் அன்னதானம் செய்யப்படும். ஏகாதசி விரத நாளில் உண்ணாமல் இருப்பதும் கண் விழித்து பாசுரங்கள் பாடுவதும் செய்ய வேண்டும் என்பதால் அன்னதானம் மட்டும் இந்நாளில் செய்யக்கூடாது. அதற்குப் பதில் பழவர்க்கங்களை தானமாகத் தரலாம். இப்படிச் செய்வதால், ஏழ்மை அகலும், கல்வியில் உயர்வு, தன ஆற்றல் வெளிப்பட்டு, குடும்ப ஒற்றுமை, சொந்தங்களில் உதவி, எதிரிகள் விலகி நண்பர்கள் அதிகமாகுதல், நல்ல பதவி, அந்தஸ்தான வாழ்க்கை, வெளிவட்டாரச் சிறப்பு, திருமண யோகம், பாவம் அகலுதல் புத்திர பாக்கியம் என அனைத்தும் வாஸ்து புருஷனின் கருணையால் நம் அனைவருக்கும் உண்டாகும். அனைத்து வளங்களையும் வழங்கிடும் கருணாசாகரனாகிய ஹரி பரந்தாமனை கண் விழித்துப் போற்றுவோம்.
 
ஜெயா நாகேந்திரன்