எளியமுறை குண்டலினி யோகம் - 5
தற்சோதனை
துரியநிலை யோகத்தால் ஆன்மா தூய்மையடைந்து வரும்போதே தற்சோதனைப் பயிற்சியினைத் தொடங்க வேண்டும். எண்ணம், சொல், செயல் இவற்றின் விளைவறிந்து செயலாற்றும் ஒழுக்கப் பயிற்சியிலிருந்து தான் யார்? என்று தெளிந்து கொள்ளும் முழுமைப் பேறு வரையில் இப்பயிற்சி விரிவடைந்து பயன் தருகின்றது. ஒழுக்கம், கடமை, ஈகை, உயிர் விளக்கம், மெய் பொருள் விளக்கம் அனைத்தும் தற்சோதனை பயிற்சியினால் பெறப்படும்.
துரியாதீதம் தெய்வ நிலைக்கு உயிரை உயர்த்தி இரண்டு நிலைகளும் கலப்புறப் பயிலும் யோகமே துரியாதீதமாகும். இதனைச் சமாதியென்றும், சீவப்பிரம்ம ஐக்கிய முக்தி என்றும் கூறப்படுகின்றது. மனிதனாகப் பிறந்தவன் அறிந்து முழுமைபெற வேண்டிய விளக்கம் அனைத்தும் அந்த யோகத்தால் சித்தியாகும்.
முறையாக இத்தகைய எளிய முறைக் குண்டலினி யோகத்தைப் பயின்றால் மனிதன் தனது அறிவில் முழுமை பெறலாம். உணர்ச்சி வயப்படாமல் சம மன நிலையில் கடமையாற்றி மகிழ்ச்சியோடு வாழலாம். வாழப் பறந்தவர்கள், வாழ்வை விளங்கிக் கொண்டுதானே வாழவேண்டும்? ஆகவே மெய்ஞ்ஞானம் எனும் அறிவின் விளக்கப்பேறு மனிதனுக்கு இன்றியமையாதது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வயதுக்கு வந்த உடன் பயின்று பலன் பெற வேண்டிய உளப்பயிற்சியே குண்டலினி யோகம்.
சமுதாயச் சீர்திருத்தம்
உலகில் பெரும்பாலான மக்கள் புலன் கவர்ச்சியில் மயங்கி, ஆன்ம நிலையை மறந்து அறுகுண வயமாகி வாழ்கின்றார்கள். துன்பங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பால்கவர்ச்சி விரைவில், மயக்கநிலையில் பெரும்பாலும் குழந்தைகள் உலகில் உற்பத்தியாகின்றன. அக்குழந்தைகளும் மயக்க நிலையில்தானே வாழ முடியும்? இந்த போக்கிலிருந்து உலகம் திருப்பம் பெற வேண்டுமெனில் திருமணத்திற்கு முன்னதாக ஆணும் பெண்ணும் குண்டலினி யோகம் கற்றுப்பயின்று முழுமை பெறவேண்டும். அப்போது தான் குடும் பத்தைத் திறமையோடு நடத்தும் ஆற்றல் வளருவதோடு அவர்கட்குப் பிறக்கும் குழந்தைகளும் அறிவின் விழிப்பு நிலைக்கு எளிதில் திரும்பிவிடும். இயற்கையான முறையில் கருத்தடைக்கும் குண்டலினியோகம் வழி செய்கிறது. உயிரியக்க மையத்தைக் குறிப்பிட்ட இடத்தில் மாற்றியமைத்துக் கொள்ளும் திறமை உண்டாகிவிட்டால் தேவையானபோது குழந்தைப் பேறு அடையவும், வேண்டாத போது அதனை தவிர்க்கவும் நுட்பம், ஆற்றல் இரண்டும் குண்டலினியோகத்தால் கிட்டும்.
பொதுவாகச் சொன்னால் குண்டலிணி யோகம் தனிமனித முழுமைக்கும், உலக சமுதாய நலணுக்கும் ஏற்றதோர் உளப்பயிற்சி முறையாகும். உயிர் நலம் பேணும் எல்லா முறைகளும் இந்த யோகத்தில் அடங்கியுள்ளன. இவ்வரிய யோகப் பயிற்சி முறையை விரும்புவோர் தகுதியுடையோர் அனைவரும் கற்றுப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்களுக்கு உதவும் ஒரு அருள் நிலையமே உலக சமுதாய சேவா சங்கமாகும்.
இந்த சங்கத்தின் அருள் விளக்கப்பணி நிலையங்களே மனவளக்கலை மன்றங்கள். இப்போது பல மன்றங்களில் இச்சங்கக் கிளைகள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. மற்ற மாநிலங்கட்கும் வெளிநாடுகட்கும் இம்முறையைப் பரப்பி நலமளிக்க நம்மாலியன்ற தொண்டினைப் புரிவோம். இத்தெய்வீகத் தொண்டின் பெருமையுணர்ந்த அறிஞர்கள் பலர் ஞானாசிரியர்களாகப் பயிற்சி ஏற்றுள்ளனர். மேலும் பலர் முன் வரவேண்டும். இவ்வுலகில் எல்லாப் பகுதிகளிலும் இந்த மனவளக்கலை முறை பரவ நாம் ஒன்றுகூடி செயலாற்றுவோம்.
நம்மை அளித்த உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இதுவும் ஒன்றாகக் கருதி உவகையோடு அருட்தொண்டு புரிவோம் வாரிர் என்று தவத்தில் தேர்ந்த அன்பர்கள் எல்லோரையும் அழைக்கின்றேன். இதனால் உங்கள் குடும்பக் கடமைகள் சிறிதளவும் குறைவு படாமல் இருக்கவும் விழிப்போடு இருக்கவேண்டும்.
இதுவரையில் ஞானம் என்ற துறையில் சில தவறான கருத்துக்கள் உலவி வருகின்றன. அவை
1. ஞானம் என்பது எளிதில் மனிதனுக்குக் கிட்டாது.
2. இல்லறத்தார்களுக்கு ஞானம் ஏற்றதல்ல.
3. பெண்கள் ஞானத்திற்கு ஒவ்வாதவர்கள்.
4. ஞானம் பெற்றால் மனிதன் குடும்பத்தை மறந்து விடுவான்.
5. ஞானம் பொருளாதாரத் துறைக்கு எதிரான ஒன்று.
இவ்வகையான ஐவகைத் தவறான கருத்துக்களையும் திருத்தி இன்று எண்ணிறந்த மக்களுக்கு மெ ய்வி ளக்கம் அளித்திருக்கிறது நமது மனவளக்கலை மன்றங்கள். இத்தகைய மன்றங்கள் வளர வழி செய்து நம் கடனாற்றுவோம்.
பரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன.இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.
இவற்றை விழிப்பாற்றல், தற்சோதனை, தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன