ஒழுக்க நெறி

ஒழுக்க நெறி

எதற்காக ஒழுக்க நெறி?

ஒழுக்க நெறி தியான முறையுடன் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். தியானம் செய்வோருக்கு பாதுகாப்பு அளித்து பயனளிக்கவே அது உள்ளது.

ஒருவர் தம் ஆழ்மனதின் அடித்தளம் வரை ஊடுருவிச் சென்று, அங்கே தேங்கியிருக்கும் மாசுகளை அழிக்கும் பணிக்கு பத்து நாட்கள் என்பது மிகக் குறைந்த கால அளவே ஆகும். தனித்திருந்து தொடர்ந்து செய்யும் பயிற்சியே இந்தத் தியான முறையின் வெற்றி இரகசியம். இந்த நடைமுறைத் தேவையை கவனத்தில் கொண்டே விதிகளும், கட்டுப்பாடுகளும் வரையப்பட்டுள்ளன. அவை ஆசிரியருக்கோ அல்லது நிர்வாகிகளுக்கோ உதவுவதற்காக விதிக்கப்பட்டவை அல்ல. அவை எந்த மத நம்பிக்கையையோ, பாரம்பரியத்தையோ எதிர்ப்பதற்காக விதிக்கப்பட்டவையும் அல்ல. பல்லாயிரக்கணக்கான பயிற்சியாளர்களின் பல்லாண்டு அனுபவத்தைக் கொண்டு வரையப்பட்ட அறிவியல் அடிப்படை கொண்ட பகுத்தறிவுப்பூர்வமான விதிகளே அவை. ஒழுக்க நெறியைப் பின்பற்றுவது, சூழலை தியானம் செய்ய உகந்ததாக்குகிறது. நெறியை மீறுவது சூழலை மாசுபடுத்துகிறது.

பயிற்சி பெறுவோர் பயிற்சி நடக்கும் பத்து நாட்களும் பயிற்சி நடக்கும் இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும். மற்ற விதிகளையும் சரியாகப் படித்தறிந்து பின்பற்றவேண்டும். தன்னால் ஒழுக்க நெறியை நேர்மையுடன் சிறிதும் பிறழாமல் பின்பற்ற முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு பின்பற்ற தயாராக இல்லாதவர்கள் தம் நேரத்தையும் வீணடித்து, முறைப்படி பயிற்சி செய்யும் பிறருக்கும் இடையூறாக அமைவர். பத்து நாட்களும் பயிற்சி பெற்று முடிக்காமல் கடினமான ஒழுக்க விதிகளை காரணம் காட்டி இடையில் பயிற்சியை விட்டுச் செல்லுதல் தகாததும், தீங்கு விளைவிக்கக் கூடியதும் ஆகும். அதைப் போன்றே, பலமுறை நினைவுறுத்தப்பட்டும் ஒருவர் ஒழுக்க நெறியை பின்பற்றாததால் அவரைப் பயிற்சியிலிருந்து வெளியேற்ற நேர்ந்தால் அது மிக்க வருந்தத்தக்கது ஆகும்.

மேலே செல்க

உறுதிமொழிகள்

விபஸ்ஸனா பயிற்சி முகாம்களுக்கு வரும் அனைவரும் மனத்தௌ¤வோடு பின்வரும் ஐந்து உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டும்:

   1. எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல்
   2. எப்பொருளையும் திருடுதலைத் தவிர்த்தல்
   3. பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல்
   4. பொய் உரைக்காமல் இருத்தல்
   5. போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல்

      பழைய மாணவர்கள் (அதாவது, திரு சத்திய நாராயண் கோயன்கா அவரிடமோ அல்லது அவர்தம் துணை ஆசிரியர்களிடமோ ஒரு முறையாவது பத்து-நாள் பயிற்சி பெற்றவர்கள்), பின்வரும் மேலும் மூன்று உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டும்:
   6. மதியத்திற்கு மேல் உண்ணாமல் இருத்தல்
   7. உணர்ச்சியேற்றும் பொழுதுபோக்குகளையும் உடலை அழகுப்படுத்துதலையும் தவிர்த்தல்
   8. உயர்ந்த அல்லது சொகுசான படுக்கைகளைத் தவிர்த்தல்

பழைய மாணவர்கள் ஆறாவது உறுதிமொழியை பின்பற்றும் பொருட்டு மாலை 5 மணி இடைவேளையின்போது மூலிகைத் தேநீரோ அல்லது பழச்சாறோ மட்டும் அருந்துவர். புதிய மாணவர்கள் கொஞ்சம் பழம் உண்டு, தேநீரோ அல்லது பாலோ குடிக்கலாம். தேவைப்பட்டால், உடல்நிலை கருதி ஆசிரியர் பழைய மாணவருக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கலாம். ஆயினும், ஏழாவது மற்றும் எட்டாவது உறுதிமொழிகளை அனைத்து பழைய மாணவர்களும் பின்பற்ற வேண்டும்.

மேலே செல்க

ஆசிரியர் மற்றும் வழிமுறையை ஏற்றுக்கொள்ளுதல்

பயிற்சி நடக்கும் பத்து நாட்களும் ஆசிரியரின் வழிநடத்தலையும், அவர் கூறுவனவற்றையும் முழுவதுமாக ஏற்று நடப்பதாக மாணவர்கள் உறுதியளிக்க வேண்டும். அதாவது, ஒழுக்க நெறியை பின்பற்றி வந்து, ஆசிரியர் கூறுவதிலிருந்து எதையும் கூட்டியோ குறைத்தோ கொள்ளாமல் கூறியவாறே பின்பற்றி தியானம் செய்ய வேண்டும். இது வெறும் கண்மூடித்தனமான சரணடைதலாக இல்லாமல், காரணமறிந்து புரிந்துகொண்டு வைக்கும் நம்பிக்கையாக இருக்கவேண்டும். நம்பும் மனநிலை இருந்தால் மட்டுமே மாணவர்கள் சீராகவும், நிறைவாகவும் செயலாற்ற முடியும். தியானத்தில் வெற்றி காண ஆசிரியர் மீதும், வழிமுறை மீதும் இத்தகைய நம்பிக்கை கொள்வது அவசியமாகும்.

தியான முறையைக் குறித்தான பிரச்சினைகளையும், கேள்விகளையும் ஆசிரியரிடம் மட்டுமே எடுத்துச்சென்று தெளிவு பெற வேண்டும். மதியம் 12 மணி முதல் 1 மணி வரையிலான நேரம் ஆசிரியரை தனித்துக் காண்பதெற்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இரவு 9 முதல் 9.30 மணி வரையிலான நேரத்தில் தியான அறையில் பொதுவாக கேள்விகள் கேட்கலாம். கேள்வி நேரங்களின்போது தியான முறையைக் குறித்து உண்மையில் எழும் நடைமுறை சந்தேகங்களை மட்டுமே எழுப்ப வேண்டும். இவற்றை தத்துவ விளக்கங்கள் கொடுக்கவோ, வாக்குவாதங்கள் செய்யவோ உண்டான வாய்ப்பாகக் கருதக்கூடாது. விபஸ்ஸனா தியான முறையின் தனித்துவத்தை அதைப் பயிற்சி செய்வதன் மூலமாக மட்டுமே உணர்ந்துகொள்ள இயலும். பயிற்சி நடக்கும் பத்து நாட்களும் மாணவர்கள் தம் முழு கவனத்தையும் பயிற்சியின் மீதே செலுத்த வேண்டும்.

மேலே செல்க

புனித அமைதி

பயிற்சி தொடங்கியது முதல் இறுதி நாள் காலை வரை அனைத்து மாணவர்களும் 'புனித அமைதி' மேற்கொள்ள வேண்டும். புனித அமைதி என்றால் உடல், வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றின் அமைதி ஆகும். உடன் பயில்வோரிடம் செய்கைகள், குறியீடுகள், எழுத்து மூலமான பரிமாற்றங்கள் முதலிய எந்த ஒரு வகையிலும் தொடர்புகொள்ளக் கூடாது.

ஆயினும் மாணவர்கள் தேவை ஏற்படும் போதெல்லாம் ஆசிரியரிடம் பேசலாம். உணவு, தங்குமிடம், உடல்நிலை முதலியவை குறித்து ஏதேனும் பிரச்சினைகள் தோன்றினால் நிர்வாகிகளிடம் எடுத்துச் செல்லலாம். ஆனால் இத்தகைய தொடர்புகளும் மிகக் குறைவாகவே இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தாம் தனித்து இயங்குவதாகவே எண்ணிச் செயல்பட வேண்டும்.

மேலே செல்க

மற்ற தியான முறைகள், சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள்

பயிற்சியின்போது விரதமிருப்பது, ஊதுபத்தி அல்லது பிற வாசனை தரும் பொருட்களை ஏற்றி வைப்பது, மணிகளை உருட்டுவது, மந்திரம் ஓதுவது, பாடி ஆடுவது போன்ற பிற வழிபாட்டு முறைகளையும், மதச்சடங்குகளையும் அறவே பின்பற்றக் கூடாது. வேறு ஏதாவது தியான முறை, குணப்படுத்தும் முறை அல்லது ஆன்மீக முறைகளைக் கற்றிருந்தால் அவற்றையும் தாற்காலிகமாக ஒதுக்கி வைக்க வேண்டும். இது மற்ற முறைகளை எதிர்ப்பதற்காக அன்று; விபஸ்ஸனா முறையை அதன் தூய்மை கெடாமல் நாம் முழுமையாக முயற்சி செய்து பார்ப்பதற்காகவே ஆகும்.

விபஸ்ஸனா முறையுடன் பிற முறைகளை வேண்டுமென்றே கலப்படம் செய்வது, பயிற்சி செய்பவரின் முன்னேற்றத்தை தடுக்கவோ பின்னடைவை ஏற்படுத்தவோ கூடும். ஆசிரியரின் எச்சரிக்கைகளையும் மீறி, விபஸ்ஸனா முறையுடன் பிற சடங்குகளையோ முறைகளையோ வேண்டுமென்றே கலந்து தங்களுக்கு தாங்களே தீங்கு விளைவித்துக் கொண்டவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள். ஏதேனும் சந்தேகமோ அல்லது குழப்பமோ எழுந்தால் உடனே ஆசிரியரை சந்தித்துத் தெளிவு பெற வேண்டும்.

மேலே செல்க

ஆண்-பெண் தனித்திருத்தல்

ஆடவர்களும், பெண்டிரும் பயிற்சியின்போது முழுதும் தனித்தனியே இயங்கவேண்டும். மணமுடித்த அல்லது அவ்வாறற்ற ஜோடிகள் ஒருவரை ஒருவர் எம்முறையிலும் தொடர்பு கொள்ளக் கூடாது. இதைப் போன்றே, நண்பர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அங்கத்தினர்கள் முதலியோரும் தம்மிடையே தொடர்பின்றி இருக்க வேண்டும்.

மேலே செல்க

உடல் தொடர்பு

ஆழ்ந்து அக-ஆராய்வு செய்யும் தன்மை வாய்ந்த தியானமுறை இதுவாதலால், பயிற்சி நடைபெறும்போது மாணவர்கள் தம் பாலினத்தைச் சேர்ந்தவரையோ, எதிர்பாலினரையோ எந்த வகையிலும் தொடர்பு கொள்ளாமல் இருத்தல் அவசியம்.

மேலே செல்க

யோகா மற்றும் உடற்பயிற்சிகள்

யோகா செய்வதும், உடற்பயிற்சி செய்வதும் விபஸ்ஸனா முறையுடன் ஒத்துச் செல்வதே ஆயினும், பயிற்சி நடக்கும் இடத்தில் இவற்றுக்கான சரியான தனிமையான இட வசதிகள் இல்லாத காரணத்தால் இவற்றை ஒதுக்கி வைக்க வேண்டும். ஓடுதலும் அனுமதிக்கப்படமாட்டாது. உடற்பயிற்சியாக ஓய்வு நேரங்களின்போது அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நடைப்பயிற்சி செய்யலாம்.

மேலே செல்க

பூஜைப் பொருட்கள், மணிமாலைகள், ஸ்படிகம், தாயத்துகள் முதலியன

இவை போன்ற பொருட்களை பயிற்சி நடக்கும் இடத்திற்கு எடுத்துவரக்கூடாது. தவறி எடுத்துவந்துவிட்டால், அவற்றை பயிற்சி ஏற்பாடு செய்தோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்து பயிற்சி முடிந்தபின் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலே செல்க

மருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள்

மதுவகைகள், போதைப்பொருட்கள் முதலியவற்றை பயிற்சி நடைபெறும் இடத்திற்கு எடுத்துவரக்கூடாது. தூக்க மாத்திரைகள், அமைதியூட்டும் மருந்துகள், மயக்க மருந்துகள் போன்றவையும் இதில் அடங்கும். மருத்துவ ஆலோசனையின் பேரில் மருந்து-மாத்திரைகள் உட்கொள்ள வேண்டுவோர் ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டும்.

மேலே செல்க

புகைப்பிடித்தல், புகையிலை முதலியன

பயிற்சி பெறுவோரின் உடல்நிலை மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு புகைப்பிடிப்பது, புகையிலை அல்லது சீவல் போடுவது, மூக்குப்பொடி போடுவது போன்றவை பயிற்சி நடைபெறும் இடத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலே செல்க

வெளித்தொடர்புகள்

பயிற்சி நடைபெறும் பத்து நாட்களும் மாணவர்கள் பயிற்சி நடக்கும் இடத்தின் எல்லையைத் தாண்டிச் செல்லக்கூடாது. அவ்வாறு செல்லவேண்டுமாயின் ஆசிரியரின் சிறப்பு அனுமதி பெற்றே செல்ல வேண்டும். பயிற்சி முடியும் வரை மாணவர்கள் கடிதத்தொடர்பு, தொலைபேசித்தொடர்பு, பார்வையாளர்கள் வருகை உட்பட எந்தவிதமான வெளித்தொடர்பும் கொள்ளக்கூடாது. மிக அவசரமானால் மாணவரின் நண்பரோ உறவினரோ எவராவது பயிற்சி நடத்துபவர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலே செல்க

இசைப்பது, படிப்பது மற்றும் எழுதுவது

இசைக்கருவிகளை மீட்டுவதும், வானொலி முதலியவை கேட்பதும் தடை செய்யப்பட்டவையாகும். படிப்பதற்கு நூல்களோ, எழுதுபொருட்களோ எதுவும் கொண்டுவரக்கூடாது. மாணவர்கள் ஆசிரியரின் உரைகளைக் குறிப்பெடுத்து தம் ஒருநிலைப்பாட்டை இழக்கக்கூடாது. இந்த தியான முறையின் உறுதியான நடைமுறைத் தன்மையை பெரிதும் வெளிக்கொணரவே படிப்பதும் எழுதுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலே செல்க

ஒலிநாடா பதிவுப்பொறி, புகைப்படக்கருவி முதலியன

ஆசிரியரின் சிறப்பு அனுமதி இன்றி இவை பயன்படுத்தப்படக்கூடாது.

மேலே செல்க

உணவு

தியானம் செய்யும் அனைவரின் தனிப்பட்ட உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வது இயலாத செயல். எனவே, நிர்வாகிகள் வழங்கும் எளிய சைவ உணவையே உண்ணுமாறு பயிற்சி பெறுவோர் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பல்வகை புரதங்கள் சமநிலைப்பட்ட, செறிவான, தியானம் செய்ய உகந்த உணவையே வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். உடல்நோய் கருதி எவருக்கேனும் தனிப்பட்ட உணவுமுறை அறிவுறுத்தப்பட்டிருந்தால், தயவுகூர்ந்து அதைப்பற்றி விண்ணப்பிக்கும்போதே நிர்வாகிகளிடம் தெரிவிக்கவும்.

மேலே செல்க

உடை

பயிற்சி பெறுவோர் எளிய, அடக்கமான, பொருத்தமான உடைகளையே அணியவேண்டும். அரை-கால்சட்டை, குட்டையான அரைபாவாடை, கையில்லாத மேல்சட்டை போன்ற உடலை இறுக்கும் அல்லது உடலை வெளிக்காட்டும் உடைகளை அணியக்கூடாது. மிக மெல்லியதான அல்லது பிறர் கவனத்தை ஈர்க்கும் உடைகளையும் தவிர்க்க வேண்டும். சூரியக்குளியல், அரை நிர்வாணம் ஆகியவையும் தவிர்க்கப்பட வேண்டும். உடன்பயில்வோர் ஒருநிலைப்பாட்டைக் குலைக்காமல் இருக்க இவை அவசியம்.

மேலே செல்க

குளியல் மற்றும் சலவை

பயிற்சி நடக்கும் இடத்தில் துணி-துவைக்கும் இயந்திரம் இல்லாமையால் மாணவர்கள் போதுமான எண்ணிக்கையில் உடைகள் கொண்டு வரவேண்டும். சிறு ஆடைகளை கையால் துவைத்துக்கொள்ள இயலும். தியான நேரங்களில் குளியல் மற்றும் சலவை செய்தல் கூடாது; இடைப்பட்ட ஓய்வு நேரங்களில் மட்டுமே செய்யலாம்.

மேலே செல்க

கால அட்டவணை

பயிற்சியின் தொடர்ச்சியைக் கருத்தில் கொண்டு பின்வரும் கால அட்டவணை வரையப்பட்டுள்ளது. சிறந்த பயனை பெற மாணவர்கள் முடிந்தவரை இந்த அட்டவணைப்படி தவறாது காலத்தை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். காலை 04.00 மணி    விழித்தெழுதல்
காலை 04.30 முதல் 06.30 வரை     தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
காலை 06.30 முதல் 08.00 வரை     காலைச்சிற்றுண்டி இடைவேளை
காலை 08.00 முதல் 09.00 வரை     தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
காலை 09.00 முதல் 11.00 வரை     தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
காலை 11.00 முதல் நண்பகல் 12.00 வரை     பகல் உணவு
நண்பகல் 12.00 முதல் மாலை 01.00 மணி வரை     ஓய்வு அல்லது ஆசிரியருடன் நேர்காணல்
மாலை 01.00 முதல் 02.30 வரை     தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
மாலை 02.30 முதல் 03.30 வரை     தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
மாலை 03.30 முதல் 05.00 வரை     தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
மாலை 05.00 முதல் 06.00 வரை     தேநீர் இடைவேளை
மாலை 06.00 முதல் 07.00 வரை     தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
மாலை 07.00 முதல் இரவு 08.15 வரை     தியானக்கூடத்தில் ஆசிரியரின் பேருரை
இரவு 08.15 முதல் 09.00 வரை     தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
இரவு 09.00 முதல் 09.30 வரை     தியானக்கூடத்தில் கேள்வி நேரம்
இரவு 09.30 மணி     தங்கும் அறைக்குச் செல்லுதல்; விளக்கணைப்பு

மேலே செல்க

கருத்துச் சுருக்கம்

இந்த தியான முறையின் ஒழுங்குமுறை மற்றும் விதிகளின் உட்கருத்தைப் பின்வருமாறு சுருக்கி வரையலாம்:

உங்கள் செயல்கள் எதுவும் பிறருக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பிறர் அவ்வாறு ஏதும் இடையூறு செய்யினும் நீங்கள் அதைப் பொருட்படுத்தாதீர்கள்.

மேற்கூறிய விதிகளின் நடைமுறைப் பயன்களை சிலரால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். எதிர்மறை மனப்போக்கையும் சந்தேகத்தையும் வளர்த்துக்கொள்ளாமல், இது சம்பந்தமான கேள்விகளை அவ்வப்பொழுதே ஆசிரியரிடம் கேட்டு, தௌ¤வு பெற வேண்டும்.

முறையான ஒழுங்கைப் பின்பற்றி வந்து, தம்மால் எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு முயற்சி செய்வதனால் மட்டுமே ஒருவர் பயிற்சி விளக்கங்களை முழுமையாக அறிந்துகொண்டு பயன் அடைய இயலும். இந்தத் தியானப் பயிற்சியில் செயல்பாட்டிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தாம் தனிமையில் இருப்பதாக நினைத்துக்கொண்டு, அசௌகரியங்களையும் இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் இருந்து, மனதை உள்நோக்கி செலுத்துவதே மிகச் சிறந்த வழியாகும்.

இறுதியாக, மாணவர்கள் விபஸ்ஸனா முறையில் தாம் முன்னேற்றம் அடைவது தம் நற்குணங்களையும், மனமுதிர்ச்சியையும் மேலும் விடாமுயற்சி, நம்பிக்கை, ஈடுபாடு, உடல்நிலை மற்றும் அறிவாற்றல் ஆகிய ஐந்தையும் பொருத்தே அமையும் என்பது கவனிக்கத்தக்கது ஆகும்.

மேற்கூறிய தகவல்கள் தாங்கள் தியான பயிற்சியின் முழுப்பயனையும் அடைய உதவுமாக. தங்களுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பிற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தாங்கள் விபஸ்ஸனா அனுபவத்தின் மூலம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அனுபவிப்பீர்களாக.